வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க !

25 செப்., 2013

எது தீட்டு?

தீட்டு என்றால் ஒதுக்குதல் அல்லது விலக்குதல் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
தீண்டக்கூடாது என்று நாமே உருவாக்கிக் கொண்ட சிலவற்றை அல்லது சிலரை தொட்டுவிட்டால் உடனே தீட்டுப்பட்டுவிட்டது என்றும், அதற்கான பரிகாரம் செய்து தீட்டுக்கழித்து கொள்வதையும் நாம் அறிந்திருக்கிறோம்.
தீட்டு என்கிற ஒன்று மனிதனோடு, மனித மனத்தோடு நெருங்கிய தொடர்புடைய விஷயமாக ஒரு காலத்தில் இருந்தது. பெரும்பாலும் தீட்டு என்றாலே குழந்தை பிறப்புக்குப் பின் சில நாட்கள், யாராவது இறந்துவிட்டால் அதற்கு பின் வரும் சில நாட்கள், பெண் பூப்படைதல், அவளின் மாதவிலக்கு என்று வரையறுத்துக் கூறப்பட்டது.
இவற்றிற்கும் மேலாக மனிதனை மனிதன் தொடுவது கூட தீட்டாக திணிக்கப்பட்டிருந்தது.

(இந்த விஷயத்தில் மட்டும் முழுமையான மாற்றம் ஏற்படாவிட்டாலும் கொஞ்சம் மாற்றம் கண்டு சக மனிதனை மதித்து உறவாடி வருகிறோம் என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.)

இன்றுவரை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கும் இத்தகைய தீட்டுகள் ஏதாவது பரிகாரம் மூலம் நிவர்த்திக்கப்பட்டு சுத்தமாக்கப்பட்டிருக்கிறது. ஆக தீட்டு என்றால் அசுத்தம் நீங்கி சுத்தமாகுதல் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
வழியிலே நடந்து செல்லும்போது மலத்தை மிதித்துவிட்டால், அதனோடே வீட்டுக்குள் செல்ல முடியாது. சென்றால் நாறி போய்விடும். அதனால் வீட்டுக்கு வெளியிலேயே அதனை கழுவி சுத்தம் செய்து கொண்ட உறுதி நமக்கு ஏற்பட்ட பிறகு வீட்டுக்குள் செல்கிறோம். இந்நிகழ்வை நான் தீட்டுப்பட்டுவிட்டது என்று சொல்ல வரவில்லை. அசுத்தப்பட்டுவிட்டது, அதனை சுத்தப்படுத்தி விட்டோம். இதுபோலத்தான் தீட்டு விஷயமும் என்றே சொல்ல வருகிறேன்.

மனித உடலுக்கு புறம்பான விஷயங்கள் எதுவுமே அவனை தீட்டுப்படுத்துவதில்லையாம்.

மாறாக, அவனுடைய இதயத்திலிருந்து வெளியாகும் பொல்லாத சிந்தனைகள், விபச்சார- வேசித்தனங்கள், கொலை பாதக செயல்கள், களவுகள், பொருளாசை, துஷ்டத்தனங்கள், கபடு, காமவிகாரம், பொறாமை, தூஷணம், பெருமை, மதிகேடுகள்தான் அவனைத் தீட்டுப்படுத்துகின்றனவாம்.
பொல்லாங்கான இவைகளெல்லாம் மனித உள்ளத்திலிருந்து புறப்பட்டு வந்து அவனைத் தீட்டுப்படுத்துகின்றன (மாற்கு 7: 18- 23) என்று பரிசுத்த வேதாகமத்தில் (பைபிளில்) எழுதப்பட்டிருக்கிறது.

ஒருநிமிடம் சிந்தித்து பார்த்தால் இத்தனையும் மனிதனிலிருந்து வெளிப்பட்டு அவனை எந்தெந்த வழிகளில் எல்லாம் பாவ செயல்களுக்கு உட்படுத்துகின்றன என்பதை நாம் அன்றாடம் செய்தித்தாள்களை புரட்டினாலே தெரிந்துக் கொள்ளலாம்.

தீட்டு என்று நமக்கு நாமே வரையறுத்துக் கொண்டுள்ளவற்றை எல்லாம் தவிர்த்து, நம்மை மாசுப்படுத்தும் (அசுத்தப்படுத்தும்) இவைகளை ஒதுக்கி நம்மை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே இறைவனின் எதிர்பார்ப்பு.

இதை கடைப்பிடித்துதான் பார்ப்போமே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.