வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க !

23 நவ., 2011

முரண்பாடு


உலகில் எல்லோருடைய சிந்தனைகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. எல்லா விஷயங்களிலும் முரண்பாடு நிலவுகிறது. முரண்பாடு இல்லா வாழ்க்கை முற்று பெறுமா?
அதை பற்றியே என் மனம் சிந்தித்தது.
என் சிந்தனையில் ஒரு கருத்து உதயமாகிறது என்றால், என்னை சேர்ந்தவர்களுக்கும் அதேபோல் உருவாகும் என்று நான் எதிர்பார்க்க முடியுமா? நிச்சயமாக முடியாது. அப்படி நான் நினைத்தேனானால் என்னை விட மடையன் யாரும் இருக்க முடியாது.
சரி, முரண்படாமல் வாழ்ந்தால் வாழ்க்கை இனிதாக இருக்குமா என்றால் ஏதோ இயந்திரத்தனமாக வாழ்வதைப் போன்றே எனக்குத் தோன்றுகிறது.

உலகம் தோன்றியது முதல் இன்று வரை எதிர்மறைகள் தொன்று தொட்டு உருவாகிக் கொண்டிருக்கின்றன. இருட்டு- வெளிச்சம், நன்மை- தீமைபகை- உறவு, நம்பிக்கை- அவநம்பிக்கை  இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம். அப்படியிருக்கையில், முரண்படாமல் ஒத்துவாழ்தல் எப்படி சாத்தியமாக இருக்கிறது?
குடும்பம் என்று எடுத்துக் கொண்டால் கணவனுக்கு ஒரு எண்ணம், மனைவிக்கு ஒரு எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. கணவனின் எண்ணத்தைப் போல மனைவிக்கும் இருக்க வேண்டும் என்றோமனைவியின் எண்ணத்தை போல் கணவனுக்கும் இருக்க வேண்டும் என்றோ நிச்சயம் எதிர்பார்க்க முடியாது. பிறகு எப்படி குடும்பங்கள் நிலை நிற்கின்றன?

திருமணமான புதிதில் மணப்பெண்ணிடம், புருஷன் மனம் கோணாமல் பார்த்துக்கோ,  அப்பத்தான் வாழ்க்கை நல்லா இருக்கும் என்று அறிவுரை கூறி அனுப்புவர்இதன் அர்த்தம் கணவனின் கருத்தை ஏற்று குடும்பம் நடத்த வேண்டும். பிடிக்கிறதோ, இல்லையோ அவனோடு முரண்பட்டு நிற்காமல் அவனின் கருத்தை தனது கருத்தாக ஏற்று ஒத்துழைக்க வேண்டும். இன்றைக்கும் குடும்பங்கள் நிலை நிற்க  இதுதான் காரணமாகிறது. இதைவிடுத்து முரண்பட்டவர்கள் முடிவில் குடும்ப நல நீதிமன்றங்களில் நின்று கொண்டிருக்கின்றனர் தங்களின் எதிர்காலத்தை தொலைத்தவர்களாக.
சிலரின் வாழ்க்கையில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக குடும்ப உறவுகள் முற்றிலும் சிதைந்திருக்கின்றன.
அண்மையில் நடன இயக்குநரும், நடிகருமான ஒருவருக்கும், நடிகை ஒருவருக்கும் இடையேயான  தொடர்பு தெரியவந்ததையடுத்து அவரின் மனைவி முரண்பட்டார். நீதிமன்றத்தை நாடினார். கணவனின் கருத்துக்கு ஒத்துபோகாததால் விவாகரத்து பெற்று குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். (விவாகரத்து பெறும் விஷயத்தில் மட்டும் கணவனும், மனைவியும் முரண்படாமல்  ஒத்துபோயினர்.) குடும்பம் சிதைவுண்டது.

பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் கூட எல்லா விஷயத்திலும் முரண்பாடு உண்டு. படிக்கின்ற பாடம் தொடங்கி உண்கின்ற உணவு, உடுத்துகின்ற உடை, பொழுதுபோக்கு விவகாரங்கள், நட்பு விஷயங்கள் என்று நீண்ட பட்டியலே இடலாம். பெற்றோரை மதிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் கூறும் அனைத்திற்கும் பிள்ளைகள் ஒத்துபோவதால் சில குடும்பங்களில் பிரச்சினைகள் எழுவதில்லை. ஆனால், தாங்கள் அடிமைகள்போல வாழ்ந்ததாக அவர்கள் உணர்கின்ற ஒரு நிலை வரும்போது பெற்றோர் மீது வெறுப்படைகின்றனர்.
பிள்ளைகளின் எண்ணம் சரியானதுதானா, அது அவர்களுக்கு நல்லதை கொடுக்குமா அல்லது அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குமா? என்று எண்ணியே பெற்றோர் முரண்படுகின்றனர். ஆனால் பெரும்பாலான பிள்ளைகள் இதையெல்லாம் நினைப்பதில்லை.

வாலிப பருவத்தில்  தங்கள் பிள்ளைகள் யாரையாவது காதலிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டாலே போதும் குடும்பங்களில் முரண்பாடு தொடங்குகி விடுகிறது.
உங்க பேச்சைக் கேட்டு நீங்க சொன்ன பள்ளியில் சேர்ந்தோம். நீங்க சொன்ன பாடங்களை படித்தோம். நீங்க வாங்கிக் கொடுத்த உடைகளை உடுத்தினோம். எல்லாவற்றிலும் உங்க பேச்சின்படிதான் நடந்தோம். எங்களை எங்கே சுதந்திரமாக விட்டீர்கள். எங்களின் வாழ்க்கையை நிர்ணயித்துக் கொள்ள எங்களுக்கு உரிமையில்லையா என்ற அவர்கள் எதிர்த்து பேசும்போதுதான் சில பெற்றோரும் நிலைமைக்கேற்றவாறு முரண்படாமல் உடன்படுகின்றனர்.

காதலில் ஈடுபடுவோரை எடுத்துக் கொண்டால், அவர்கள் காதலின் ஆயுள் காலம் வரை (அது ஒரு சில மாதங்களாக இருக்கலாம். ஏன் சில ஆண்டுகள் கூட இருக்கலாம்.) ஒருவரின் கருத்துக்கு ஒருவர் ஒத்துபோவதை போல் ஒருவரையொருவர் ஏமாற்றி கொள்கின்றனர். தங்களின் கருத்தை கூறி, அதற்கு எதிர்மறையான கருத்து உருவாகி விட்டால் காதல் கசந்து விடுமே என்ற பயத்தால், எதையெல்லாம் மறைக்க முடியுமோ அதையெல்லாம் அப்போது மறைத்து ஒத்த கருத்துடையவர்களைபோல் உறவாடுகின்றனர். பின்னர் உண்மைகள் வெளிப்படும்போது இப்படியொரு முரண்பாடு உள்ளவரையா காதலித்தேன் என்று வருத்தமும் அடைகின்றனர். காதலிக்கும்போதே இந்த உண்மை தெரிய வந்து விடுமானால் சொல்லிக் கொள்ளாமலேயே பிரிந்தும் விடுகின்றனர்.
ஒருவேளை திருமணம் முடித்த பிறகு தெரியவருமானால் எல்லா விஷயங்களிலும் முரண்பாடு கொண்டவர்களாகி ஒருவரையொருவர் வெறுக்கின்றனர். சில நேரங்களில் கொலைகள் செய்யும் அளவுக்குக்கூட துணிந்து விடுகின்றனர்.
அண்மையில் கூட மனைவியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து உடல்  உறுப்புகளை பிளாஸ்டிக் உறைகளில் போட்டு கிணற்றில் வீசிய கணவனை போலீஸ் கைது செய்த செய்தியை எல்லோரும் படித்திருப்போம்.
அந்த கணவன் அளித்த வாக்குமூலத்தில், பருவ வயதில் விபச்சார விடுதிக்கு சென்றபோது, விபச்சாரத்தில் ஈடுபட்ட ஒரு பெண்ணை அழைத்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்து கொண்டதாகவும், இருவருக்கும் இரண்டு மகள்கள் பிறந்ததாகவும், தான் இல்லாத நேரத்தில் மனைவி  மீண்டும் விபச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், விஷயம் தெரிந்து கண்டித்ததையும் மீறி (தனது கருத்துக்கு முரணனாக செயல்பட்டதால்) நடந்ததால் வெட்டி கொலை செய்ததாகவும் கூறியிருந்தார்.

பாலியல் தொழிலில் விருப்பம் இல்லை. எல்லோரையும் போல் அழகான குடும்பத்தில் வாழ வேண்டும் என்ற அந்த பெண்ணின் கருத்தை ஏற்று அவர் அழைத்து வந்ததால் ஒரு குடும்பம் உருவானது. குடும்ப வாழ்க்கையில் அழகான இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தனர். அதுவரை நன்றாக சென்ற குடும்பத்தில் முரண்பாடு ஏற்பட்டதால் இந்த அலங்கோலம்.

வேலை செய்யும் நிறுவனம் என்றாலும் அங்கேயும் இந்த முரண்பாடு இருக்கத்தான் செய்கிறது. முதலாளியின் கருத்துக்கு ஒத்துபோனால் பிரச்சினை இல்லாமல் வேலை செய்யலாம்.
வெள்ள காக்கா மல்லாக்க பறக்குது என்று முதலாளி கூறினால் ஆமாம் அதுகூட இன்னொரு காக்காவும் பறக்குது  என்று சொல்பவனே முதலாளிக்கேற்ற தொழிலாளியாக இருப்பான்.
வெள்ள காக்காவாவது, கருப்பு காக்காவாவது என்று சொன்னால் அடுத்த நிமிடமே அவனது சீட்டு கிழிந்துபோகும்.

அரசியலை எடுத்துக்கொண்டால் அங்கேயும் முரண்பாடுதான். அதுவும் நமது தமிழ்நாட்டில் சொல்லவே தேவையில்லை. ஒரு கட்சியின் கொள்கைக்கு, அடுத்த கட்சி முரண்பட்டு நிற்கிறது. ஆட்சியிலிருக்கும் கட்சி கொண்டு வரும் திட்டத்திற்கு எதிர்கட்சி முரண்படுகிறது. செயல்படுத்தப்பட்ட திட்டங்களைக் கூட அடுத்து வரும் ஆட்சி முடக்கி விடுகிறது. கட்டிய கட்டடங்களானாலும் அதன் செயல்பாடுகள் குறித்து கவலை கொள்ளாமல் சம்பந்தமே இல்லாத இன்னொரு துறையின் பயன்பாட்டுக்கு மாற்றுகிறது. இந்த முரண்பாடு களினால் மக்களின் வரிப்பணம், நலன்கள் எல்லாம் வீணாகி போகின்றன.
முன்னர் ஆட்சி நடத்தியவரின் கருத்துக்கு முரண்பாடு உருவாகுமானால் தங்களுக்கு உருவாகும் கருத்தின்படி  செயல்படலாம். அவரை விட தங்களால் சிறப்பானதொரு திட்டத்தை கொடுக்க முடியும். மக்களின் நலன்களை காக்க முடியும். வரிப்பணத்தை வீணாக்க மாட்டோம் என்ற நல்ல எண்ணத்துடன் செயல்படலாம். அதுதான் எல்லோருக்கும் ஏற்ற ஒரு நல்ல அரசின் செயல்பாடாக  இருக்கும்.
பெரியாரோடு முரண்பட்ட அறிஞர் அண்ணா, திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் இயக்கம் கண்டார். கலைஞரோடு முரண்பட்ட எம்.ஜி.ஆர்., அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார். டாக்டர் ராமதாசுடன் முரண்பட்ட வேல்முருகன் தற்போது புதுக்கட்சி காணத் துடிக்கிறார். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

எல்லா விஷயத்திலும் முரண்பாடுகள் உண்டு. ஒத்த கருத்து என்பது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவதுதான். அவ்வாறு  செயல்பட்டால்  எதிலும் குழப்பம் வராது. அதற்காக எல்லா விஷயத்திலும் முரண்பாடு கொள்ளக் கூடாது. நல்ல விஷயங்களில் முரண்பாடு தோன்றுமானால் முரண்பட்டுத்தான் ஆக வேண்டும். சில நேரங்களில் முரண்படும் நல்லதாகவே தோன்றுகிறது.
விளையாட்டாக சொல்வார்கள், அஞ்சு விரலும் அப்படியேவா இருக்கு என்று. அதனை கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கத்தான் செய்கிறது. கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடுவிரல், மோதிர விரல், சுண்டு விரல் இவை அளவுகளில் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அப்படி ஒரே மாதிரியாக இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கக்கூட முடியவில்லை. அளவுகளில் வேறுபாடு இருப்பதால்தான் நமது கரத்தைக் கொண்டு நாம் பணிகளை சிறப்பாக செய்ய முடிகிறது. எதையாவது பிடிக்க முடிகிறது. ஒருவேளை ஒரே அளவாக இருந்தால் நம்மால் நிச்சயமாக எந்த வேளையையும் செய்ய முடியாது. ஆக, முரண்பாடு தேவையாகிறது.
முரண்பாடு இல்லா வாழ்க்கை முற்று பெறாது என்பதே எனது கருத்து.

8 நவ., 2011

யார் பிக் பாஸ்?உடல், ஆன்மா, மனம் ஆகியவைகளின் மொத்த கலவைதான் உயிருள்ள மனிதன். இவற்றில் ஏதாவது ஒன்று தனக்கு தேவையில்லை என்று எந்த மனிதனாலும் சொல்ல முடியாது. அப்படி சொல்வானானால் அவன் மனிதனாக இருக்க முடியாது. பிறக்கும்போதே இவை நம்முடன் வருபவை. இதில் யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இருக்காது என்று நினைக்கிறேன்.

சரி அதற்கென்ன இப்போ என்கிறீர்களா?

இந்த மூன்றில் யார் பிக் பாஸ் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியதால் சிந்தனை குதிரையைத் தட்டி விட்டேன்.

இதைப் பற்றி எழுதுவதற்கு முன் இவை குறித்த எனது தேடல் நீண்டது. வளைத்தளம், வளைப்பூக்கள் என தேடி பார்த்தேன். இருப்பினும் எனக்கு திருப்தி ஏற்படவில்லை. எனக்குள் தேட முயன்றபோது கிடைத்ததை பதிவு செய்கிறேன்.

ஒன்றை விட்டு இன்னொன்று இயங்க முடியாது என்பது இந்த மூன்றுக்கும் தெரியும். அப்படியிருக்கையில் தேவையா இப்படியொரு விபரீத போட்டி. என்கிறீர்களா?

போட்டி என்று வந்து விட்ட பிறகு இனிமேல் என்ன செய்வது?

ஆன்மா, மனம் ஆகியவற்றால் இயக்கப்படுவதால் மனித உடல் சற்று பலவீனமானவனாக எனக்கு தெரிகிறது.

மற்ற இரண்டும் சற்று பலம் பொருந்தியதாகவும், ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் இருக்கின்றன.

இரண்டும் மனிதனுக்குள் இருந்து செயல்பட்டு கொண்டிருப்பவை. இவற்றில் முழு முதற்காரணமாக விளங்குவது மனம். இதைப் பற்றிக் கூற வேண்டுமானால், மிகவும் வேகமாக செயல்படக் கூடியது. குப்பைகளை கொட்டுவதைப் போல நொடிக்கொரு தரம் எண்ணங்களை பிரசவித்து கொண்டிருக்கும்.

அந்த எண்ணக் குப்பைகளில் சில நேரம் மாணிக்கங்கள் கிடைப்பதுண்டு. அவ்வாறு கிடைக்கும் மாணிக்கங்களால் மனிதன் சுடர்விட்டு ஒளிர்வதும் உண்டு.

மனிதனின் ஒவ்வொரு செயலும் இதன் கட்டுப்பாட்டில்தான் இருக்கும்.

இதன் எல்லா எண்ணங்களும் ஒன்றுபோல் இருப்பதில்லை.சீரழிக்கவும், சீர்படுத்தவும் செய்யும் எண்ணங்களை உருவாக்கும் அதிசய கருவி இது.

மகிழ்ச்சியான தருணங்களில் துள்ளி குதிக்கும். காதல், காமம், பாலியல் உறவுகள் போன்ற விஷயங்களின்போது குத்தாட்டமும் போடும். ஏதேனும் நடக்கக்கூடாதது நடந்து விட்டாலோ நோயில் விழுந்து பாயில் படுத்தவனைப் போல கிடக்கும்.

இதனால் உருவாகும் உணர்ச்சிகளுக்கு வடிக்காலாக இருப்பவன்தான் மனிதன். இன்னும் சொல்லப் போனால் இது கண்ணுக்குத் தெரியாத மாயாவி.

மனிதனின் செயலுக்கு இது பிண்ணனி என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இதை யாரும் குறை கூறுவதில்லை.

வில்லில் இருந்து புறப்பட்டு வந்து அம்பு தாக்கும்போது, தாக்குண்டவர் அம்பின் மீதுதான் கோபம் கொள்கிறாரே தவிர, அது புறப்பட்டு வந்த வில்லின் மீது கோபப்படுவதில்லை. அதுபோலதான் இது தப்பித்துக் கொள்ளும்.

மனிதனை ஆட்டிப்படைக்கும் ஆற்றல் பெற்ற இதை ஒரு பிக்பாஸ் என்றே கருதலாம்.

இதேவேளையில் இதை எதிர்த்துப் போட்டியிடும் ஆன்மாவின் பலமும் என்ன என்பதை தெரிந்து கொண்டால் இறுதி முடிவு எடுத்து விடலாம்.

ஆகாய விமானத்தில் ரகசிய பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருக்குமாம். அதனை பிளாக் பாக்ஸ் என்று கூறுவார்களாம். வானத்தில் செல்லும் ஆகாய விமானம் ஏதேனும் விபத்துக்குள்ளாக நேரிட்டால், விபத்து நடந்த இடத்தில் முதலில் தேடப்படுவது இந்த கருப்புப் பெட்டியைத்தானாம். ஏனென்றால், விமானம் எப்படி விபத்துக்குள்ளானது என்ற தகவல் அதில் துல்லியமாக பதிவாகி இருக்குமாம். அதை வைத்து காரணத்தைக் கண்டுபிடித்து விடுவார்களாம்.

ஒருவகையில் இதுவும் அந்த பிளாக் பாக்ஸை போலத்தான் செயல்படுகிறது.

மனிதனின் ஒவ்வொரு செயலுக்கும் எப்படி மனம் காரணமாகிறதோ, அந்த செயலின் மூலம் ஏற்படும் சாதக, பாதக நிகழ்வுகளை பதிவு செய்து நேரம் கிடைக்கும்போது, அதை மனிதனுக்கு ரீவைண்ட் செய்து காண்பிப்பதில் இது முக்கிய பங்காற்றுகிறது.

மனிதன் பிறக்கும்போதே மனதைபோல் இதுவும் அவனுக்குள் இயங்க தொடங்கி விடுகிறது.

மனதில் தோன்றும் எண்ணம் நல்லனவாக இருந்தால் முதலில் பாராட்டி அதை நிறைவேற்றுவதற்கு உதவுவது இதுதான்.

அதே வேளையில் தீய எண்ணம் உருவாகுமானால் முதலில் எச்சரிக்கை மணி அடித்து, அதனால் உண்டாகும் ஆபத்தை உணர்த்துவதும் இதுதான்.

இது நல்ல எண்ணங்கள் உருவாகும்போது மகிழ்ந்து மனதுடன் கை குலுக்கிக் கொள்ளும். இதன் பாராட்டு மழையில் நனையும் மனமும் உடனே மனிதன்மூலம் அதனை வெளிப்படுத்தி அவனுக்கு நற்பெயரை பெற்றுத் தருகிறது.

தவறான எண்ணமாக இருந்தால் மனதுடன் கடுமையான விவாதம் செய்யும். சிலநேரங்களில் இருவருக்கும் இடையே மிகப்பெரிய போராட்டமே நடக்கும். இவர்களின் போராட்டத்தால் மனிதனும் மிகுந்த சஞ்சலத்திற்கு ஆளாகிறான். அந்நேரத்தில் இதன் பேச்சை மனம் கேட்க மறுப்பதோடு அந்த எண்ணத்தை நிறைவேற்றுவதில் தீவிர முயற்சி எடுத்து மனிதனை அதில் சிக்க வைத்து விடுகிறது. இதுவோ வாயடைத்து அமைதியாகி விடுகிறது.

கடவுளுக்கும் இதற்கும் நேரடி தொடர்பு உள்ளது என்ற நம்பிக்கை ஆன்மிக சிந்தனை உள்ளவர்களுக்கு இருக்கிறது. அதேபோல் பாவம், சொர்க்கம், நரகம் என்ற சிந்தனை உள்ளவர்கள் பெரும்பாலும் இதனை துணையாக அழைத்துக் கொண்டு இறைவனை நாடுவர்.

இது எனக்குள் இருக்கிறது என்ற உணர்வு இல்லாத நிலையில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

வேகத்தின் செயல்பாடு மனம், இதன் செயல்பாடோ அமைதிப் புரட்சி.

எண்ணங்களை பிரசவிப்பது, அதை நிறைவேற்றுவது என செயல்படும் மனம், அடுத்ததொரு புதிய எண்ணம் உருவானவுடன் பழைய எண்ணத்தையோ, அதனால் அடைந்த லாப, நஷ்டத்தையோ கணக்கில் எடுத்துக் கொள்ளாது.

ஆனால், இதுவோ மனதின் ஒவ்வொரு எண்ணத்தையும், அதனால் நிகழும் விளைவுகளையும் தனக்குள் பதிய வைத்துக் கொள்ளும்.

மனிதன் துன்பத்திற்குள்ளாகும்போது மனம் கை கழுவி விடும். இதுவோ, மனிதனின் இந்த நிலைக்கு நீதான் காரணம். நான் அப்போதே கூறினேன் கேட்கவில்லை என்று கூறி தான் பிடித்து வைத்திருக்கும் படத்தை ரீவைண்ட் செய்து காண்பித்து தவறு எங்கே நிகழ்ந்திருக்கிறது என்று உணர்த்தும்.

பூமியை விட்டு பிரியும்போது மனமும், அது இயக்கிய மனித உடலும் அழிந்து விடுகின்றன. ஆனால் இதற்கு அழிவு என்பதே இல்லை. இது இன்னொரு உயிருக்குள் வைக்கப்பட்டு மீண்டும் பிறக்கும் என்கின்றனர் அடுத்த பிறவியை நம்புபவர்கள்.

எல்லா மதங்களும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன.

மரணத்திற்கு பின் இன்னொரு உலகம் உண்டு. மனிதனின் ஆன்மா கடவுளின் நியாயத்தீர்ப்புக்காக கடவுளின் முன்பு நிறுத்தப்படும். அப்போது அந்த ஆன்மாவின் பதிவுப்படி தீர்ப்பு கிடைக்கும். அதன்பிறகு சொர்க்கமோ, நரகமோ கிடைக்கும் என்ற நம்பிக்கையும் நம்மில் பலரிடம் உள்ளது.

ஆக, இத்தகைய செயல்பாடுகளின் மூலம் மனதை விட இது அதிக பலம் பொருந்தியதாகவே காணப்படுகிறது.

மனிதன், மனம், ஆன்மா ஆகிய இந்த மூன்றுக்கும் இடையே உருவான போட்டியில் இப்பிறவியை கடந்தும் உயிரோடு இருக்கும் ஆன்மாதான் பிக் பாஸ் என்ற முடிவை நான் எடுத்து விட்டேன்.

வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களைக் கடந்து லாப, நஷ்டங்களை நான் கணக்கிட்டபோது எனக்குள் இருந்த ஆன்மாவை கண்டுகொண்டேன்.

என் வாழ்க்கையின் காலகட்டத்தில், நான் நடந்து வந்தபாதையில் பதிவு செய்து வைத்திருந்த எனது செயல்பாடுகளும், அவற்றின் மூலம் நான் எத்தகையவன் என்பதை உணர்த்தியதே என் ஆன்மாதான்.

இதன் மூலம் என் மனம் பிரசவிக்கும் எண்ணங்கள் நல்லவையா? தீயவையா என்பதை இப்போது என்னால் உணர்ந்துக் கொள்ள முடியும்.

நான் எப்படி செயல்பட வேண்டும் என்ற ஆலோசனையை ஆன்மாவிடம் இருந்து என் மனம் பெற்றுத் தருகிறது. அதன்படி என் ஓட்டத்தை ஓடிக் கொண்டிருக்கிறேன்.

கண் மூடி திறப்பதற்குள் காலம் மிக வேகமாக கடந்து கொண்டிருக்கிறது. இனி இந்த உலகில் வாழும் நாட்களில் எனக்கான ட்ராக்கில் ஒழுங்காக ஓடி என் ஓட்டத்தை முடிக்கவே முயற்சிக்கிறேன்.

என் முடிவை தெரிவித்து விட்டேன்.

இனி இந்த போட்டியில் வெற்றி பெற்றவர் யார் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.