வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க !

8 ஜூலை, 2011

எண்ணங்கள்





எண்ணங்கள் சீரானால் எல்லாம் சீராகும்.
ஆமாம். ஒரு மனிதனின் எண்ணங்கள்தான் அவனை உருவாக்குகிறது. வழி நடத்துகிறது.
ஆயிரம் வாசல் இதயம். அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம் என்றொரு பாடல் வரிகளை இங்கே நினைவுப்படுத்திக் கொள்வோம்.
உதயமாகும் ஆயிரக்கணக்காண எண்ணங்கள் நல்லனவாகவோ, தீயனவாகவோ இருக்க வாய்ப்புண்டு.

எனக்குள் நல்ல எண்ணங்கள் மட்டுமே உருவாகும் என்றும், தீய எண்ணங்கள் ஒருபோதும் உருவாகாது என்று யாரேனும் சொல்வார்களானால், அவார்களை நினைத்து பரிதாபப்பட வேண்டியதுதான்.

எண்ணங்கள்தான் செயல்களாகின்றன. அந்த செயல்களை வைத்துதான் மனிதனை நாம் எடை போடுகிறோம்.நல்லதை நினை, நல்லதை சொல், நல்லதே நடக்கும் என்று பலர் சொல்ல கேல்விப்பட்டிருப்போம்.
சிந்திக்கும் ஆற்றல் பெற்ற மனிதனுக்கு எது நல்ல எண்ணம், எது தீய எண்ணம் என்று பகுத்து பார்க்கும் அறிவு உண்டு.ஒரு எண்ணம் உருவாகும்போதே, அது எந்த வழியில் நடத்தும் என்பதையும் அவனால் அறிய முடியும்.

ஒவ்வொரு மனிதனும் மனம், ஆன்மா என்ற இரண்டையும் பெற்றிருக்கிறான்.
மனம்தான் எண்ணங்களின் பிறப்பிடம்.எண்ண்ங்களை பிரசவிக்கும் மனம் அவற்றை செயல்படுத்தும் வரை மனிதனை விடவே விடாது. அது நல்ல எண்ணமானாலும் சரி, தீய எண்ணமானாலும் சரி.
மனம் ஒரு குரங்கு. அதை தாவ விட்டால், தப்பி ஓடவிட்டால் நம்மை பாவத்தில் தள்ளிவிடும் என்ற பழைய திரைப்படப் பாடல் இங்கே நினைவுக்கு வருகிறது.
சற்றே ஆழ்ந்து சிந்தித்தால் இது உன்மைதான்.
மனம் எப்போது தன் விருப்பம்போல் குதித்து ஆட்டம் போட தொடங்குகிறதோ, அப்போது ஆன்மா அமைதியாகி விடுகிறது.மனம் எப்போதும் பல்வேறு எண்ணங்களை வெளிப்ஹடுத்திக் கொண்டே இருக்கும்.அவ்வாறு வெளிப்படும் எண்ணங்கள் எவ்வாறு செயல் வடிவம் பெறுகின்றன என்பதை பார்ப்போம்.

மனிதனின் தலையிலிருந்து கால் வரை இரண்டு பிரிவாக் எடுத்துக் கொண்டால், ஒரு பிரிவை மனமும், மற்றொரு பிரிவை ஆன்மாவும் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இதை ஒரு உதாரணத்திற்க்காக சொல்கிறேன்.மனதில் ஒரு எண்ணம் உருவாகும்போது, அது நல்லதாக இருந்தால் அதனுடன் ஆன்மா கை கோர்த்துக் கொள்ளும். ஆன்ம பலத்தின் உதவியோடு அந்த நல்ல எண்ணம் செயலாகி மனிதனை வழிநடத்தி, அவனுக்கு நற்பெயரை கொடுக்கும்.
அதுவே எதிர்மறையான எண்ணம் உண்டாகிறது என்று வைத்துக் கொள்வோம். அது தீய எண்ணம் என்பது அந்த மனிதனுக்கு தெரியும். அப்போது ஆன்ம எச்சரிக்கை மனி அடித்து இதை செய்யாதே, இது உன்னை அழிவுக்கு கொண்டுபோய் விடும் என்று கூறி தடுக்க பார்க்கும். அந்த எச்சரிக்கை ஓசை கேட்டு அவன் அதை கைவிடுவானானால் ஆபத்திலிருந்து தப்பித்துக் கொள்வான்.

ஒரு தீய எண்ணம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிந்திருந்தும், அதன் மூலம் கிடைக்கும் இன்பத்தை மட்டுமே அடைய மனிதன் ஆசைப்படுகிறான். அந்த எண்ணம் ஈடேற மனத்தின் வலிமை அவனுக்கு உதவுகிறது. இது இயல்பான விஷயம்தான்.
ஆசைக்காட்டி மனம் மோசம் செய்கிறது. ஆசையினால் வரும் ஆபத்தைக் காட்டி ஆன்மா மனிதனை காப்பாற்றுகிறது.
மனதுக்கும், ஆன்மாவுக்கும் எப்போதும் ஒரு மறைமுக போர் நடந்துக் கொண்டே இருக்கும். ஒது சம்பந்தப்பட்ட மனிதனுக்கு மட்டுமே தெரியும். மற்றவருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் அவனது செயலைக் கண்டு ஏதோ ஒரு குழப்ப நிலையில் இருக்கிறான் என்பதை மட்டும் மற்றவர்கள் கண்டு கொள்ள முடியும்.
பருவ வயது தொடங்கி பாடையில் போகும் வயது வரை மனிதனுக்கு ஆசையை மட்டுமே காட்டி மனம் வழி நடத்துகிறது.
ஆனால் ஆன்மாவோ இம்மை, மறுமை இரண்டுக்கும் இப்போதே உன்னை ஆயத்தப்படுத்திக் கொள் என்று மனிதனை உசுப்பேற்றி கொண்டே இருக்கும். ஆன்மாவின் இந்த செயலை மனிதன் பெரும்பாலும் வெறுக்கிறவனாக் இருக்கிறான்.
எண்ணத்தின் விளைவாள் தவறுகள் ஏற்பட்டு அதன் மூலம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் போது மட்டும் கலங்குகிறான்.

என் பேச்சை என் மனது கேட்க மறுக்கிறது என்று சிலர் சொல்லுவதுண்டு.
நான் செய்வது தவறு என்று எனக்கே தெரிகிறது. ஆனால், அதிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை. என்ன செய்வது? என்றும் பலர் வேதனைப்படுவதுண்டு.
தவறு என்று ஆன்மா உணர்த்தும்போதே, அதனை கைவிட்டிருக்க வேண்டும். அதை விட்டு அந்த தவறான எண்ணத்தை செயலாக்கி விட்டு, இப்போது வேதனை தருகிறதே என்றால் எப்படி?

ஆன்மாவின் பேச்சை கேட்க மறுத்துவிடும்போது ஆன்மா அமைதியாகி விடுகிறது. பின்னர் ஆபத்தி சிக்கி கொண்டு தவிக்கும்போது, அது மனிதனை பார்த்து பரிதாபப்படுகிறது. மீண்டும் அந்த தீய எண்ணம் உருவாகாதபடி உன்னைக் காத்துக் கொள் என்று இன்னொரு முறையும் எச்சரிக்கிறது.அந்த நேரத்தில் விழித்துக் கொண்டு ஆன்ம பலத்தை துணைக்கு சேர்த்துக் கொண்டால் மனம் நமது கட்டுப்பாட்டிற்குள் வந்து நல்ல எண்ணங்கள் உருவாகும் இடமாக மறி விடும்.

அழிந்துப் போகும் உடலை பெற்ற மனிதனுக்குள் இருக்கும் ஆன்மாவிற்கு ஒருபோதும் அழிவே கிடையாது. இதனை அனைத்து சமயங்களும் வலியுறுத்துகின்றன். குறிப்பாக கிறித்துவம் ஆணித்தரமாக வலியுறுத்துகிறது.

"ஒருவன் உலகம் முழுமையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும், தன் ஆன்மாவை இழந்து விடுவானானால் அவனுக்கு என்ன பயன்?" என்று கூறுகிறது.
ஆன்மாவின் வழிகாட்டலோடு வாழ்க்கையை நடத்துபவர்கள் என்றுமே மகிழ்ச்சியாக இருப்பார்கள். மனதின் பேச்சைக் கேட்டு வழி தவறி பாவத்தில் விழுபவர்கள் சாபங்களை பெற்று மகிழ்ச்சியை தொலைத்தவர்களாக திரிவார்கள்.

குப்பையான எண்ணங்கள் உருவாகும்போது அதை குப்பைத் தொட்டிக்கு அனுப்ப வேண்டும். நல்ல எண்ணங்களை ஒழுங்குப்படுத்தி செயல்படுத்த வேண்டும்.
எண்ணங்களை சீராக்குவோம், நமக்கு எல்லாம் சீராகும்.