வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க !

24 டிச., 2014

நட்சத்திரம் சொன்ன நற்செய்தியூதேயா தேசத்தில் உள்ள பெத்லகேமில் உலகத்தின் மீட்பர் பிறந்தார் என்று அந்தரத்தில் தொங்கும் நட்சத்திரம் நற்செய்தி சொன்னது. சொன்னது மாத்திரமல்ல கிழக்கு தேசத்தில் இருந்து வந்த சாஸ்திரிகளுக்கு வழியும் காட்டியது.
வானத்து பறவைகளுக்கு கூடுகளுண்டு மனுமகனுக்கோ தலை சாய்க்க இடமில்லை.
அவள் தன் முதற்பேறான குமாரனை பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால் பிள்ளையைத் துணிகளில் சுற்றி முன்னணையில் கிடத்தினாள். (லூக். 2:7)
அவர்கள் கிழக்கே கண்ட நட்சத்திரம், பிள்ளை இருந்த ஸ்தலத்திற்கு மேல் வந்து நிற்கும் வரை அவர்களுக்கு முன் சென்றது. அவர்கள் அந்த நட்சத்திரத்தை கண்டபோது மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்.
அவர்கள் அந்த வீட்டிற்குள் பிரவேசித்து பிள்ளையையும், அதன் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாக விழுந்து பணிந்து கொண்டு தங்கள் பொக்கிஷங்களை திறந்து, பொன்னையும், தூப வர்க்கத்தையும், வெள்ளை போளத்தையும் அதற்குக் (அவருக்கு) காணிக்கையாக வைத்தார்கள். (மத்தேயு. 2: 9-11)
தூதனின் நற்செய்தி..
அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான். கர்த்தருடைய மகிமை அவர்களை சுற்றிலும் பிரகாசித்தது. அவர்கள் மிகவும் பயந்தார்கள்.
இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்காக தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். (லூக். 2: 9-11)
அனைத்தையும் படைத்த அகிலாண்ட நாயகன், அன்பின் ராஜா இயேசுவின் அதிசய பிறப்பு நிகழ்வுகள் இவை.
கீழ் தேசத்தில் இருந்து வந்த சாஸ்திரிகளுக்கு இந்நற்செய்தியை நட்சத்திரம் கூறியது என்றால் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கோ தேவதூதன் அந்த நற்செய்தியை மிகுந்த சந்தோஷத்துடன் தெரிவித்தான். ஆடு மேய்ப்பவன் தானே என்று அற்பமாய் எண்ணாமல் அவர்களை நோக்கி தேவதூதன் இறங்கி வந்தான் என்றால் தேவன் மனிதன் மீது அதாவது நம்மீது கொண்ட அன்பு எத்தகையது என்று உணர்ந்து கொள்ளலாம்.
அளவிட முடியாத அன்பின் அடையாளம் அற்புத இயேசுவின் பிறப்பு.
பாவம், சாபம், வியாதிகளில் இருந்து எங்களை காப்பாற்ற யாராவது வரமாட்டார்களா என்று ஏங்கிய மக்களுக்கு மன்னனின் பிறப்பு மகிழ்ச்சியை தந்தது. சகலருக்கும் சந்தோஷத்தை கொடுத்தது.
விண்ணக மகிமையை துறந்து மண்ணகம் வந்த உன்னதர், மனிதனாய் மண்ணில் வந்தாலும் என் ராஜ்ஜியம் வேறு என்றுரைத்தவர்.
உறவுகள் உதறினாலும் ஒருபோதும் கை விடாதவர். உள்ளங்கையில் உன்னை வரைந்திருக்கிறேன் என்றவர். பாவி என்று எவரையும் வெறுக்காதவர். அவர்களியும் நேசித்து ரட்சிக்கவே வந்தேன் என்றவர். அதிகாரத்தோடே உன் பாவம் நீங்கிற்று என்று கூறி சமாதானம் அருளியவர்.
தீர்ப்பளிக்கும் அதிகாரம் தனக்கிருந்தாலும் யாரையும் தீர்ப்பிடாதவர். இனி பாவம் செய்யாதே என்று சம்பந்தப்பட்டவருக்கு அறிவுரை கூறி அவர்களை உணர வைத்து அழ வைத்தவர்.
தொட்டு சுகமாக்கியவர். வார்த்தையால் பலருக்கு சுகம் தந்தவர். இறந்து போனவர்களையும் உயிரோடு எழுப்பியவர், மனதுருகி பலருக்காக கண்ணீர் விட்டவர். எப்படி வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர். மனித வாழ்க்கைக்கு தேவையான மகத்தான கட்டளைகளையும், கற்பனைகளையும் சத்திய வேதமாக (பைபிள்) தந்தவர். எத்தனையோ பேரின் வாழ்க்கையை புரட்டி போட்டவர்.
கீழ்படியாமையின் விளைவால் இந்த உலகத்தில் பாவம் வந்தது. அதனால் சாபமும்- மரணமும் வந்தது. இவற்றின் காரணமாய் மக்கள் படும் வேதனை அறிந்து அவர்களை மீட்க கோர சிலுவையில் இரத்தம் சிந்தி மரிக்க வேண்டும் என்று தெரிந்தும் தந்தையின் சித்தத்திற்கு தன்னை ஒப்பு கொடுத்து கீழ்படிதலின் அவசியத்தை உணர்த்தியவர்.
சிலுவையில் ஆணியால் அடிக்கப்பட்டு தொங்கி கொண்டிருந்த வேளையிலும் தன்னை துன்புறுத்தியவர்களை மன்னிக்கும்படி பிதாவிடம் வேண்டி கொண்டவர். மேலும் தன் அருகே இருந்த கள்வனையும் ஈர்த்து, இன்றே நீ என்னோடு பரதீசில் இருப்பாய் என்று கூறி தன் அன்பை வெளிப்படுத்தியவர்.
எல்லாவற்றிற்கும் மேலாக, மரணமே உன் கூர் எங்கே? பாதாளமே உன் ஜெயமிங்கே? என்று மரணத்தை வென்று மீண்டும் உயிரோடு எழுந்தவர். உலகம் முடிவு மட்டும் சதா காலங்களிலும் உங்களுடனே கூட இருப்பேன் என்று வாக்கு கொடுத்தவர். அதன்படி இன்றும் பரிசுத்த ஆவியானவர் வடிவில் உயிரோடிருப்பவர்.

அவரின் பிறப்பை கொண்டாடும் நமக்கு அவரின் வாழ்க்கை ஒரு பாடம். அதன்படி வாழ்ந்தால் அவரின் பிள்ளைகள் என்ற தகுதி பெறுவோம். அனைத்தையும் சுதந்தரித்து உலகை ஜெயிப்போம்.
அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்….