வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க !

19 டிச., 2011

வேண்டாம் வீண் பெருமை...

பிறந்த நாள்.. ஆம், அந்த நாளை நினைத்தாலே அநேகருக்கு மனதில் ஒருவித மகிழ்ச்சி தாண்டவமாடும்.
சாதாரண மக்கள் தொடங்கி நாடாளும் அமைச்சர்கள் வரையில் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆன்றோர் முதல் அரசியல்வாதிகளும், அன்றாடம் காய்ச்சிகளும் கோடீஸ்வரன்களும் இந்தப் பட்டியலில் அடங்குவர்.
என்ன, கொண்டாட்டங்களில்தான் வித்தியாசம் இருக்கும்.
தாயின் கருவறையில் இருந்து உலகை எட்டிப் பார்க்கும் நாள் பிறந்தநாளாக பதிவு செய்யப்படுகிறது. மனிதனின் வாழ்க்கை தொடக்கத்தின் குறியீடு அந்த நாள். அந்த நாள் இல்லாவிட்டால் மனித வாழ்க்கை இல்லை என்றே சொல்லலாம். எல்லா உயிரினங்களுக்கும் அந்த நாள் உண்டு.
நம்மால் அந்த நாளை நிர்ணயித்துக் கொள்ள முடியாது. இந்த உலகிற்குள் நாம் நுழைய கருவிகளாக இருந்த அப்பன், ஆத்தாளும் அதை நிர்ணயித்திருக்க முடியாது. பின் அந்த நாளை நிர்ணயித்தது யார்?
அம்மா, அப்பா என்ற இரண்டு பொம்மைகளை உருவாக்கி, அவற்றுக்கு துடிப்பையும் கொடுத்து, இருவரின் துடிப்பும் அடங்கிய பின் அங்கே மற்றொரு உயிர்துடிப்பை உண்டாக்கிய ஆண்டவன்தான் அந்த நாளையும் நிர்ணயிப்பவன்.
இந¢த அம்மா, அப்பாவுக்குதான் மகனாக, மகளாக பிறக்க வேண்டும் என்று நாம் கேட்டதில்லை. இவன்தான் எனக்கு மகனாக, இவள்தான் எனக்கு மகளாக வரவேண்டும் என்றும் எந்த தாய், தந்தையும் கேட்டதில்லை.
யாரை எங்கே வைக்க வேண்டும் என்பது ஆண்டவன் மட்டுமே அறிந்த ரகசியம்.
தாயின் கருவறைக்குள் ஒரு புள்ளியாய் நுழைந்ததும், அறையின் கதவை பூட்டி விடுபவன் அவன். பத்துமாதங்கள் தண்ணீர் குளத்திற்குள் (பனிக்குடத்திற்குள்) தள்ளி நம்மை சிறை வைத்ததும் அவன் செயலே. நிர்ணயிக்கப்பட்ட சிறை தண்டனை காலத்தில் இருட்டு அறைக்குள் எந்த முத்தை எடுப்பதற்காக நாம் மூழ்கி கிடந்தோமோ அவனுக்கே வெளிச்சம்.
நீரில் மூழ்க விட்டு தண்டனை கொடுத்தாலும் தாய்க்கும், நமக்கும் இணைக்கப்பட்ட உறவுக் குழாயின் (தொப்புள்கொடி) வழியே அந்த கருணை வள்ளல் நமக்கு உணவையும் அளித்து உருவாக்கினான். கரு உருவாகி கை, கால்கள் முளைக்கத் தொடங்கி அத்தனை அவயங்களையும் அந்தந்த இடத்தில் சரியாக வைத்து அழகு பார்த்தவன் அவன். நாசியில் சுவாசத்தையும் வைத்தான் நாம் உயிர் வாழ. கருவறை சிறை தண்டனை முடிந்ததும் ஒரு நாளையும் குறித்து இந்த உலகிற்குள் நம்மை அனுப்பியும் வைத்தான்.
இத்தனை கரிசனமும் அவனுக்கு எதற்கு என்று எப்போதாவது நாம் நினைத்து பார்த்திருக்கிறோமா?
இந்த உலகில் கொண்டு வந்ததன் மூலம் அவனுக்கு நம்மை குறித்த ஏதோ ஒரு நோக்கம் இருந்திருக்க வேண்டும். அதையாவது சிந்திக்கிறோமா?
நமது பிறப்புக்கு நாம் என்ன சாதனை செய்தோம்?
பிறந்தநாளை கொண்டாட வேன்டும் என்று கண்டுபிடித்தவன் எவன்? பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் விதத்தை பார்க்கும்போது ஏதோ இவர்கள் மட்டுமே அதிசயமாக இந்த உலகத்தில் பிறந்தவர்களைப் போல காட்டிக் கொள்கிறார்கள்.
போஸ்டர்களில் விதம் விதமாக அவர்கள் கொடுக்கும் போஸ்களை பார்த்தாலே இவர்களின் வீண் பெருமையை தெரிந்து கொள்ளலாம். சில நேரங்களில் உண்டியல் வைத்து பணம் வசூலிக்கும் நிகழ்வுகளும் நடப்பதுண்டு. பிறந்தநாள் பரிசு வழக்குத் தொடரப்பட்டு நீதிமன்ற படிகளில் ஏறியவர்களும் உண்டு.
அவர்களைப் பொறுத்தவரை பிறந்தநாள் கொண்டாட்டம் வரவை கொடுக்கிறது. ஆனால், நடுத்தர ஏழை மக்களுக்கோ செலவும், துன்பமும் துயரமும்தான் மிஞ்சுகிறது.
பணவசதி உள்ளவர்கள் கொண்டாடுவதை பார்த்து வசதியில்லாத ஏழை நடுத்தர மக்களும் பிறந்தநாளை கொண்டாட விரும்புகின்றனர். இதனால் தேவையில்லாமல் கடன்படுகின்றனர். கடன் சுமை ஏறி கவலையில் வீழ்ந்து விடுகின்றனர். வெளிபகட்டுக்காக இவ்வாறு செய்து கஷ்டபடுகிறார்கள்.
வருடத்தில் ஒருநாள் சந்தோஷமாக இருக்கக் கூடாதா என்றும் சமாதானம் கூறுகின்றனர். அந்த நாளில் மட்டும் பலவித வாழ்த்துக்களைக் கூறி வாழ்த்துகின்றனர். மற்ற நாட்களில் முகத்திற்கு நேராகவோ அல்லது மறைமுகமாகவோ திட்டி தீர்க்கின்றனர்.
ஒரு சிலர் பிறந்தநாளின்போது அனாதை ஆசிரமங்களுக்குச் சென்று அங்குள்ள குழந்தைகளுக்கு உணவு, பரிசுப் பொருட்களைக் கொடுத்து மகிழ்கின்றனர். வரவேற்க வேண்டிய செயல்தான் இது என்றாலும் செய்த உதவியை புகைப்படங்களாகவும், வீடியோ காட்சிகளாகவும் பதிவு செய்து எடுத்து வந்து மற்றவர்களுக்குக் காட்டி வீண் பெருமையை தேடி கொள்கின்றனர்.
தாயின் வயிற்றிலிருந்து ஒருமுறைதான் ஒருவன் பிறக்கிறான். வருடா வருடம் தாயின் வயிற்றிலிருந்து பிறக்க முடியாதவனை பிறந்தவனாக சொல்வது எந்த வகையில் நியாயம்?
குறிப்பிட்ட பிறந்தநாள் ஒவ்வொரு மாதத்திலும், கிழமை ஒவ்வொரு வாரத்திலும், நேரம் ஒவ்வொரு நாளிலும் வருகிறதே அப்படியானால் இந்த நேரங்களிலும் எல்லாம் கொண்டாட வேண்டியதுதானே?
நல்லவர்களை வாழ்த்துவதில் தப்பில்லை. அதே நேரத்தில் மிகவும் மோசமான குணாதிசயம் கொண்டு வாழும் தீயவன் ஒருவனை அவன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நீடூழி வாழ்க என்று வாழ்துவது, அவனின் தீயச் செயல்களை ஊக்குவிப்பதோடு, இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து அடுத்தவர்களின் வாழ்வை கெடு என்று வாழ்த்துவது போல ஆகி விடாதா?
நாட்டில் இன்று அதுதானே நடந்து கொண்டிருக்கிறது.
அடுத்தவர் நலனில் அக்கறை கொண்டு, சமுதாயத்தில் முன்மாதிரியாக வாழ்ந்து மறைந்த எத்தனையோ உத்தமர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது விதிவிலக்கு.
இயேசு, புத்தர், காந்தி, அம்பேத்கர், அன்னை தெரசா, பெரியார், காமராஜர் போன்றவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு அர்த்தம் உண்டு. முன்பகுதியில் நான் குறிப்பிட்டதைப் போல இவர்கள் இறைவனின் குறிக்கோளை உணர்ந்து சமுதாயத்தில் தங்கள் பணிகளை திறம்பட செய்து விட்டு மறைந்திருக்கிறார்கள். வீண் பெருமைக்காக இவர்களெல்லாம் தங்களின் பிறந்தநாளைக் கொண்டாடியிருக்க மாட்டார்கள்.
வெள்ளையர் நம்மை அடிமைப்படுத்தியிருந்த காலத்தில்தான் இதுபோன்ற கொண்டாட்டங்கள் உருவாக்கப்பட்டது என்று கூறுகின்றனர். ஒருவேளை இது உண்மையாக கூட இருக்கலாம்.
இன்றைக்கு நாம் கொண்டாடும் பலவித கொண்டாட்டங்கள் காப்பியடிக்கப்பட்ட வேண்டாத பழக்கங்களே. வெள்ளையரிடம் இருந்து நாம் நிறைய நல்ல பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம். அவர்களும் எத்தனையோ நல்ல பழக்கங்களை விட்டு சென்றிருக்கின்றனர். அதையெல்லாம் பின் தள்ளிவிட்டு நமது கலாச்சாரத்திற்கு ஒத்துவராத இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் போல திருமணநாள், அன்னையர் தினம், தந்தையர் தினம், இளையோர் தினம், காதலர் தினம் என பல்வேறு தினங்களை கொண்டாட்டங்களாக கொண்டாடி வருகிறோம¢.
இதில் எனக்கென்ன வருத்தம் என்றால் வருடத்தில் ஒரு நாள் அன்னையர் தினத்தில் மட்டும் தாயை வணங்கி, மதித்து வாழ்த்தி விட்டு அடுத்த நாளே அவரை முதியோர் இல்லத்தில் கொண்டுபோய் விட்டு விடுகிறார்களே என்பதுதான்.
திருமண நாளில் மட்டும் கணவனையோ, மனைவியையோ மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் வருடத்தில் எல்லா நாட்களிலும் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதில்லையே?
குழந்தைகள் தினம் அன்று மட்டும் குழந்தைகளை பெரிதாக தூக்கிக் கொஞ்சி விட்டு, அதன்பிறகு அவர்களை குழந்தை தொழிலாளர்களாக அடிமைகளைப் போல நடத்துகின்றனரே...
காதலர் தினத்தில் மட்டும் கொஞ்சி மகிழும் காதலனும், காதலியும் அடுத்த காதலர் தினத்திற்குள் வேறொரு காதலர்களோடு உலா வருகிறார்களே?
இதுபோல எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம்.
பிறந்த தேதிக்கு மட்டும் வாழ்த்து சொல்வதும், புத்தாண்டு உள்ளிட்ட விஷேச நாட்களில் மட்டும் நலமாக இருக்கச் சொல்வதும் சரியா?
அந்தநாட்களில் மட்டும் சடங்காக வாழ்த்துவதை விட்டு ஆண்டு முழுவதும் நலமாக வாழ யாரும் வாழ்த்துவதில்லையே ஏன்?
குடும்பம் முழுவதும் அந்த நாளில் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்றால், ஏன் வருடம் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது?
சந்திக்கும்போதெல்லாம் நல்ல மனதுடன் நல்வாழ்த்துக்களை ஏன் பகிர்ந்து கொள்ளக்கூடாது?
ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், மடிந்தோம் என்று காலத்தை கடத்துவதை விட நம்மை குறித்த இறைவனின் நோக்கத்தை அறிந்துக் கொண்டு அதைச் செயல்படுத்த வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். அப்போதுதான் நமது பிறப்பிற்கும் அர்த்தமிருக்கும்.
பிறப்பதற்கு நாளை குறித்த இறைவனே நமக்கு இறப்பின் நாளையும் குறித்து வைத்துள்ளான்.
ஒரு முறை பிறந்து விட்டால், மறுபடியும் பிறக்க முடியாது இறக்கத்தான் முடியும். அதுவும் ஒருமுறைதான் என்பதை இறைவன் பல்வேறு சம்பவங்கள் மூலமாக உணர்த்தினாலும் நாம் உணர்வதில்லையே. இவ்வுலகம் நிரந்தரம் என்பது போல செயல்படுவதை தவிர்த்து நமக்கு குறிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் அடுத்தவருக்கு உதவியாக இருப்போம். எப்போதும் நல்வாழ்த்துக்களை சம்பாதிப்போம். அவைதான் நம்மையும், நமது சந்ததியையும் காப்பாற்றும்
அன்றைய தினத்தில் இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதோடு, கருவிகளாக செயல்பட்டு நமது நல்வாழ்வை விரும்பும் தாய், தந்தையருக்கும் நன்றி செலுத்தவேண்டும். வீண் பெருமைக்காக ஆடம்பர செலவுகள் செய்வதை தவிர்க்க வேண்டும். முடிந்தால் நற்காரியங்களுக்காக அந்த நாளை செலவிடலாம்.
பிறந்தநாள் கொண்டுவதன் மூலம் தாய், தந்தை, உடன்பிறப்புகள், உற்றார் உறவினர்களிடம வேண்டுமானால் நன்மதிப்பையும், வாழ்த்துகளையும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் நமக்கு உயிர் கொடுத்த இறைவனிடம் நன்மதிப்பை பெற முடியாது. நமது நற்பண்புகளால் சிறப்பாக்குவதன் மூலமே அவனின் உவப்பை பெறமுடியும் என்பதே என் கருத்து.
இன்றைய (டிசம்பர்- 19) எனது பிறந்தநாளின்போது எனக்குள் உதித்தவைகளைப் பதிவு செயதிருக்கிறேன்¢.