காலை நேரம்
அலுவலகத்திற்கு வரும்
வழியில் பசி
வயிற்றை தடவ
வைத்தது. சாலையோர
சிற்றுண்டிக்கடை ஒன்று
கண்ணில் படவே,
வண்டியை நிறுத்தி
விட்டு சாப்பிட
சென்றேன். கடையில்
இருந்த சகோதரியிடம்
தோசை கேட்டு
வாங்கி சாப்பிட்டு
கொண்டிருந்தேன்.
அந்த நேரத்தில்
வயதான பெண்
ஒருவர் கடைக்கு
வந்தார். அவரை
பார்த்ததும் நடுத்தர
குடும்பத்தைச் சேர்ந்தவர்போல் தெரிந்தார். பணியில்
இருந்து ஓய்வு
பெற்றவரை போலவும்
அவரது தோற்றம்
தெரிவித்தது.
கடைக்கார சகோதரிக்கு
அவரை நன்கு
தெரியும்போல, சிரித்துக்
கொண்டே வரவேற்றார்.
ரெண்டு இட்லி
குடுமா என்றார்
அந்த வயதான
பெண். சாப்பிடவா?
பார்சலா? எனக்
கேட்டார் கடைக்கார
சகோதரி. சாப்பிடத்தான் என்று சொன்னதும்,
ஒரு தட்டில்
இரண்டு இட்லி
வைத்து கொடுத்தார்.
அப்பா கூட
நேற்று வந்து
சாப்பிட்டு விட்டு
போனார் என்று
அந்த சகோதரி
சொன்னதும், அப்படியா
என்று ஆர்வமாய்
கேட்டு விட்டு,
இப்போ நான்
வந்து சாப்பிட்ட
விஷயத்தை ஒரு
பெயரை குறிப்பிட்டு ( ஒருவேளை மகளாகவோ
அல்லது மருமகளாகவோ
இருக்கக்கூடும்) அவரிடம்
சொல்லி விடாதே
என்று அந்த
வயதான பெண்
சற்று பதட்டத்துடன் சொல்லிவிட்டு, நாம
யாருக்கும் தொந்தரவாக
இருக்கக்கூடாது என்றபடியே
சாப்பிட்டார்.
நான் அந்த
பெண்மணியையே பார்த்துக்
கொண்டிருந்தேன். இதைக்
கண்ட கடைக்கார
சகோதரி, வீட்லே
டிஃபன் செஞ்சிருப்பாங்க ஆனாலும் அடிக்கடி
நம்ம கடைக்கு
வந்து சாப்பிடுவாங்கண்ணே என்றார் என்னிடம்.
எனக்குள் ஏதோ
ஒரு காரணம்
புரியாத நெருடல்.
மனதிற்குள் இந்நிகழ்வை
அசை போட்டபடியே
அலுவலகம் சென்றேன்.
மாலையில் வீடு
திரும்பியதும், அஞ்சலில்
வந்திருந்த திருக்குர்
ஆன் நற்செய்தி
மலர் என்ற
புத்தகத்தை புரட்டிக்
கொண்டிருந்தேன். அதில்
வாரிசுகளால் கொல்லப்படும் வயதான பெற்றோர்!
அதிர்ச்சி தகவல்
என்ற தலைப்பிட்ட
கட்டுரையை படித்தேன்.
காலை நிகழ்வு
ஏனோ என்
நினைவுக்கு வந்தது.
இந்த கட்டுரைக்கும் காலை நிகழ்வுக்கும் ஏதோ ஒரு
நூலிழை தொடர்பு
இருப்பதாக என்
உள்மனம் உணர்த்தியது.
இதோ அந்த
கட்டுரையின் ஒரு
பகுதி...
மதுரையை ஒட்டிய
உசிலம்பட்டி பகுதியில்
செயற்படும் தொண்டு
நிறுவனமான யுரைஸ்
என்கிற நிறுவனம்
எடுத்த கணக்கெடுப்பின்படி சுமார் 100 கிராமங்களில் மட்டும்
150 முதல் 200 முதியோர் கொலைகள் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலைமை
வெறும் மதுரைப்
பிராந்தியத்தில் மட்டும்
நடக்கவில்லை. தமிழ்நாட்டின் வேறு இடங்களிலும்
இத்தகைய பெற்றோர்
கொலைகள் நடந்திருக்கின்றன. இன்றும் நடப்பதாகவே
தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சம்பவங்களில் பெரும்பாலும் பெற்றோர்கள்
அவர்களின் சொந்த
பிள்ளைகளாலேயே கொல்லப்படுகிறார்கள்.
இத்தகைய முதியோர்
கொலைகள் நடப்பது
சம்பந்தப்பட்ட ஊரில்
அல்லது பகுதியில்
எல்லோருக்கும் தெரிந்தே
இருக்கிறது. ஆனால்
யாரும் அதுகுறித்து
பேசுவதில்லை. அப்படியே
பேசினாலும் அது
சட்டப்படி தண்டிக்கப்படுவதும் இல்லை. போதுமான
சட்டரீதியிலான சாட்சியங்கள் இல்லை என்று
கூறி எல்லோரும்
இந்த பிரச்சனையை
ஒன்று புறந்தள்ளப்
பார்க்கிறார்கள் அல்லது
வேக வேகமாக
கடந்து செல்ல
முயல்கிறார்கள்.
மேலும் எல்லா
வீட்டிலும் வேண்டப்படாத
எல்லா முதியவர்களும் கொல்லப்படுவதும் இல்லை.
பலர் தற்கொலையை
நோக்கி படிப்படியாக
தள்ளப்படுகிறார்கள். இன்னும்
சிலர் பெற்றோரை
முதியோர் இல்லத்தில்
பலவந்தமாக கொண்டுபோய்
சேர்த்து விடுகிறார்கள். சில சமயம்
அந்த முதியவர்களுக்குத் தெரியாமலே கூட. இன்னும் பல
சந்தர்ப்பங்களில் பிள்ளைகளின்
புறக்கணிப்பு மற்றும்
வன்முறைகளை பொறுக்க
முடியாமல் முதியவர்களில் பலர் தாமாகவே
முதியோர் இல்லம்
தேடி ஓடும்
சூழலும் நிலவுகிறது.
-தகவல்
உதவி: பிபிசி
12.12.2014
(நன்றி:
திருக்குர் ஆன்
நற்செய்தி மலர்-
பிப்ரவரி- 2015 இதழ்-
பக்.
21)
இன்றைக்கு பல
வீடுகளில் முதியவர்கள்
புறக்கணிக்கப்படுவதை கண்கூடாக
பார்க்க முடிகிறது.
பெரும்பாலான முதியவர்கள்
தங்களின் கடைசி
காலம் வரை
இன்றைய தலைமுறையினரோடு இணக்கமாக இருப்பதையே
விரும்புகின்றனர். தங்களால்
குடும்பத்தில் எந்தவித
குழப்பங்களும், சண்டை
சச்சரவுகளும் வந்துவிடக்
கூடாது என்கிற எண்ணத்தில் தங்களின்
தள்ளாமையைக்கூட கவனத்தில்
கொள்ளாது நாயாய் உழைக்கிறார்கள். அப்படி
பழகி கொண்டால்
மட்டுமே அவர்கள்
கவனிக்கப்படுவார்கள். அந்த
கவனிப்பில் ஏதாவது
குறைபாடுகள் இருந்தாலும்
பொறுத்து கொள்ள
வேண்டும். மீறினால்
அந்த கட்டுரையில் வெளிச்சம்
போட்டு காட்டப்பட்டிருக்கும் நிகழ்வுகள் நிச்சயம்
நடக்க வாய்ப்புள்ளது.
சில வீடுகளில்
தனி ராஜ்ஜியம்
நடத்தியவர்கள் கூட
முதிர் வயதை
தொட்டவுடன் அதிகாரம்
பறிக்கப்பட்டு வீட்டை
விட்டோ அல்லது
முதியோர் இல்லங்களுக்கோ தூக்கி அடிக்கப்படுகிறார்கள். இதில் கொடுமை
என்னவென்றால் மேலை
நாடுகளில் வேலைக்காக
சென்று செட்டில்
ஆனவர்கள், முதியோர்
இல்லங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் தங்களின் பெற்றோருக்கான செலவு
பணத்தை அனுப்புவதுடன் முடித்துக்
கொள்கின்றனர். ஒருவேளை
பெற்றோர் இந்த
உலகத்தை கடந்து
விட்டார்கள் (மரணமடைந்து)
என்று கேள்விப்பட்டாலும் அவர்களுக்கு இறுதி
மரியாதை செய்வதற்கு கூட
வருவதில்லை. (வடிவேலு காமெடியில் வரும்,
காலம் போகிற
வேகத்தில அப்பனாவது,
ஆத்தாளாவது, அப்படியே
தூக்கி போட்டுட்டு
போய்ட்டே இருக்கணும்
என்ற வசனம்
ஏனோ இந்த
நேரத்தில நினைவுக்கு
வந்து தொலைக்குது)
காலையில் நான்
கண்ட அந்த
பெண்ணும், நாம
யாருக்கும் தொந்தரவாக
இருக்கக்கூடாது என்று
சொன்னதுகூட இதுமாதிரியான விஷயங்களை மனதில்
கொண்டு சொல்லியிருப்பாரோ தெரியவில்லை.
உன் தேவனாகிய
கர்த்தர் உனக்குக்
கொடுக்கிற தேசத்திலே
உன் நாட்கள்
நீடித்திருப்பதற்கும், நீ
நன்றாயிருப்பதற்கும், உன்
தேவனாகிய கர்த்தர்
உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும், உன் தாயையும் கனம் பண்ணுவாயாக (உபாகமம் 5: 16) என்று பரிசுத்த
வேதாகமத்தில்- பைபிளில்
சொல்லப்பட்டிருக்கிறது.
ஆயுசு நாட்கள்
அதிகமாகணும்னா, எல்லா நன்மைகளும் பெற்று
செழிப்பாக வாழணும்னா
தாய், தகப்பனை
கனம் பண்ணணுமாம்.
தேவன் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கும் இந்த
கட்டளையை எத்தனை
பேர் கடைபிடிக்கிறார்களோ அதை அந்த
தேவன் தான்
அறிவார். ஒருவேளை
நாம் கடைபிடிக்காதிருந்தால் இன்று முதல்
கடைபிடிக்கத் தொடங்குவோம்.
அதன்மூலம் தேவனின்
ஆசீர்வாதத்தை பெற்றுக்
கொள்வோம்.