வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க !

9 மே, 2015

ஆயுள்

இணையத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்தபோது நான் ஒரு கதையைப் படிக்க நேர்ந்தது. இன்றைய வாழ்வில் தன் ஆயுள் உள்ள வரை மனிதன் எப்படி வாழ்கிறான் என்று அந்த கதையில் நகைச்சுவையோடு, அதே வேளையில் சிந்திக்க கூடிய வகையில் எழுதப்பட்டிருந்தது.

அதாவது, தன் வாழ்நாளில் முதல் 30 ஆண்டுகள் வரை மனிதன் அறிவுள்ளவனாகவும், வீரனாக, பயனுள்ளவனாக (மனிதனாக) வாழ்கிறானாம். அடுத்த 12 ஆண்டுகளில் பிறர் சுமைகளை சுமந்து, சூழ்நிலையால் அடிபட்டு, சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் பசியோடும், பட்டினியோடும் சம்பாதிக்க (கழுதையைப் போல) ஓடுகிறானாம். 42-லிருந்து 60 வயது வரை தான் சம்பாதித்த பணம், வீடு- வாசல், பெயர், புகழ் ஆகியவற்றை காத்துக் கொள்வதற்காக (நாயைப் போல) படாத பாடுபடுகிறானாம். 60-லிருந்து 80 வயது வரை ஓரித்தில் அமர்ந்திருக்காமல் மகன் வீடு, மகள் வீடு என்று மாறி மாறிச் சென்று தன் பேரக் குழந்தைகளிடம் பல்லைக் காட்டி (குரங்கைப் போல) விளையாடி ஓய்ந்து இறந்து விடுகிறானாம்.  

இந்த செய்திகள் எல்லாம் நகைச்சுவையோடு அந்த கதையில் சொல்லப்பட்டிருக்கிறது.

வாங்க கதைக்குள்ளே போகலாம்.


மனிதன் உள்பட எல்லா உயிரினங்களுக்கும் வாழ்நாள் (ஆயுள்) எவ்வளவு காலம் கொடுக்கலாம் என கடவுள் சிந்தித்தாராம். ஒரு முடிவுக்கு வந்தவராக கடவுள் எல்லா உயிரினங்களையும் தன் இருப்பிட்த்திற்கு வரச் சொன்னாராம். எல்லா ஜீவராசிகளும் கடவுளின் அழைப்பையேற்று வந்தனவாம்.
அவற்றைப் பார்த்து, உங்கள் ஒவ்வொருவருக்கும் 30 ஆண்டுகள் ஆயுள் தருகிறேன். போதும் என்பவர்கள் சென்று விடலாம். குறையுள்ளவர்கள் இருங்கள் என்று கடவுள் சொன்னாராம்.

கழுதை, நாய், குரங்கு, மனிதன் ஆகிய நான்கு பேரைத் தவிர மற்றவை எல்லாம் மகிழ்ச்சியோடு புறப்பட்டு போய் விட்டனவாம்.

உன் குறை என்ன? என்று முதலில் நின்றிருந்த கழுதையைப் பார்த்து கடவுள் கேட்டாராம்.

நான் நாள்தோறும் ஏராளமான சுமைகளைச் சுமந்து துன்பப்படுகிறேன். ஓய்வோ, தூக்கமோ கிடையாது. எப்போதும் பசியால் துடிக்கிறேன். முதுகில் சுமையோடு செல்லும்போது வழியோரம் முளைத்திருக்கும் புல் பூண்டுகளில் வாயை வைத்து விடுகிறேன். இதனால் என் முதலாளி என்னை அடித்து துன்புறுத்துகிறார். என் வாழ்க்கையே நரகமாக மாறிவிடுகிறது. இந்த கொடுமைகளை 30 ஆண்டுகள் என்னால் எப்படி தாங்க முடியும்? என் மீது கருணைக் காட்டி ஆயுளைக் குறைத்து விடுங்கள் என்று கெஞ்சியதாம் கழுதை.
சரி, 12 ஆண்டுகள் குறைத்து விடுகிறேன். இனி உன் வாழ்நாள் 18 ஆண்டுகள் தான், போதுமா என்றாராம் கடவுள்.
மகிழ்ச்சி என்று சொல்லிவிட்டு கழுதை சென்றதாம்.


அடுத்த நின்ற நாயைப் பார்த்து, உனக்கென்ன? என்று கடவுள் கேட்டாராம்.
கடவுளே நான் எப்போதும் வலிமையோடும், நன்றாக மோப்பம் பிடிக்கும் திறமையோடும் இருக்க வேண்டும். காதுகள் துல்லியமாக சிறு ஓசையைக் கூட கேட்க வேண்டும். அப்போதுதான் எனக்கு மதிப்பு, மரியாதை. நான் முதுமையடைந்து தளர்ந்து விட்டால் எல்லோரும் என்னை வெறுத்து ஒதுக்கி விடுவார்கள். உணவு கூட கொடுக்க மாட்டார்கள் என்று நாய் கூறியதாம்.
நான் உனக்கு கொடுத்திருக்கும் வாழ்நாள் அதிகம் என்கிறாய், சரி குறைத்து விடுகிறேன். உன் வாழ்நாள் இனி 12 ஆண்டுகள்தான் என்றாராம் கடவுள். நாய் மகிழ்ச்சியோடு கடவுளை வணங்கி சென்றதாம்.


கடவுள் முன் குதித்து வந்த குரங்கைப் பார்த்து, உன் குறை என்ன? என்று கடவுள் வினவினாராம். 30 ஆண்டுகள் என்பது நீண்ட காலம். இவ்வளவு காலம் நாங்கள் கொடுமையை அனுபவிக்க வேண்டுமா? உணவுக்காக நாங்கள் மனிதர்கள் முன் பல்லைக் காட்டுகிறோம். நாட்டியம் ஆடுகிறோம். என்னென்னவோ செய்கிறோம். அழுகிப்போன பழங்களும், தாங்கள் தின்றதுபோக மிச்ச சொச்சங்களைத்தான் எங்களுக்கு கொடுக்கிறார்கள். அதோடு நாங்கள் முதுமையடைந்து விட்டால் கிளைக்குக் கிளைக்குத் தாவ முடியாது. எங்கள் நிலை மிகவும் பரிதாபமாக ஆகி விடும். அதனால் எங்கள் ஆயுளைக் குறைத்து விடுங்கள் என்று வேண்டி நின்றதாம் குரங்கு.
இனி உன் ஆயுள் 10 ஆண்டுகள் என்று கடவுள் அறிவித்ததும், குரங்கு நன்றி கூறி ஆனந்த கூத்தாடி சென்றதாம்.

கடைசியாக நின்றவர் நம்ம ஆளு.
உனக்கென்னப்பா? உனக்கு எவ்வளவு ஆயுளைக் குறைக்க வேண்டும்? என்று கேட்டாராம்.
மனிதன் எப்போதுமே சற்று மாறுப்பட்டு நிற்பவனாயிற்றே.
30 ஆண்டுகள் என்பது மிகக் குறைந்த ஆயுள் ஆகும். அந்த காலக்கட்ட்த்தில்தான் நாங்கள் ஏதேனும் ஒரு கலையை முழுமையாகக் கற்றிருப்போம். நாங்கள் வசிப்பதற்காக ஒரு வீட்டைக் கட்டி முடித்திருப்போம். எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டு மகிழ்ச்சியாக இருக்கத் தொடங்கும் காலம் அது.  நாங்கள் இதுவரை உழைத்த உழைப்பிற்குப் பயன் நுகரும் அந்தப் பருவச் சூழலில் எங்கள் உயிரைப் பறிப்பது கொடுமை ஆகாதா?. 30 ஆண்டு வாழ்நாள் என்பது போதவே போதாது. இன்னும் அதிக ஆயுள் வேண்டும், என்றானாம்.


அப்படியா, இங்கு வந்த நீ  குறையுடன் சொல்லக் கூடாது. அதனால் கழுதையிடம் பெற்ற 12 ஆண்டுகள், நாயிடம் பெற்ற 18 ஆண்டுகள், குரங்கிடம் பெற்ற 20 ஆண்டுகள் இங்கே உள்ளன. அந்த 50 ஆண்டுகளையும் நீ கூடுதலாகப் பெற்றுக் கொள்ளலாம். இனி உன் வாழ்நாள் 80 ஆண்டுகள்.
மகிழ்ச்சியா, என்று கடவுள் கேட்டதும், மகிழ்ச்சி என்ற சொல்லிய அவன் கடவுளை வணங்கி விட்டுப் புறப்பட்டானாம்.

எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்தவர் கடவுள். அதனால் கூடுதல் ஆயுள் கேட்டுப் பெற்ற மனிதனின் நிலையை எண்ணி அவர் மிகவும் வருத்தப்பட்டாராம். இத்துடன் கதை முடிவடைகிறது.


இந்த 80 ஆண்டுகளில் மனிதன் எப்படியெல்லாம் வாழ்கிறான் என்பது இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒருவேளை புரியவில்லையென்றால் மீண்டும் நீங்கள், முதல் இரண்டு பத்திக்குச் செல்ல வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை.

3 மே, 2015

பொறுப்புணர்வு வேண்டாமா?


தொலைக்காட்சிளில் ஒளிபரப்பாகும்  விவாத நிகழ்ச்சிகளை நான் அடிக்கடி பார்ப்பதுண்டு. அந்த நிகழ்ச்சிகளில், விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் (ஆளுங்கட்சி, ஆண்ட கட்சி, ஆளத்துடிக்கும் கட்சிகள் தொடர்பான) தலைப்பையொட்டி அதை ஆதரிக்கும் வகையிலும், எதிர்க்கும் வகையிலும் எதிர் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும், எழுத்தாளர், பத்திரிகையாளர்களும் பங்கேற்கின்றனர். 
நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வியை ஆரம்பிப்பார். ஆளுங்கட்சி தொடர்பானதாக இருந்தால் அந்தக் கட்சி பிரமுகர் பதில் சொல்வார். பதில் முழுவதும் சொல்லி முடிப்பதற்குள் தொகுப்பாளர் இடையிடையே புகுந்து வேறு திசைக்கு அவரை மாற்றி விடுவார். முழு பதிலும் கிடைக்காது. அதற்குள் எதிர்க்கட்சி பிரமுகர் இடை மறிப்பார். உடனே விவாதம் இரண்டு கட்சிகளின் தலைவர்களை பற்றியதாக மாறி விடும். தங்கள் கட்சித்தலைமையின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்கிற வகையில் கட்சி பிரமுகர்கள் ஒருவரையொருவர் வார்த்தைகளால் தாக்கி கொள்வார்கள். அத்துடன் அவரவர் கட்சித் தலைவர்களின் ஊழல்கள், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தான தரக்குறைவான வார்த்தைகளையும் உதிர்ப்பார்கள். 
உடனே தொகுப்பாளர் சிறிது நேர இடைவெளிக்குப் பின் நிகழ்ச்சி தொடரும் எனக்கூறி இடைவேளை விடுவார். பிறகு நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் எழுத்தாளரையோ, பத்திரிகையாளரையோ பதில் சொல்ல வேண்டுவார். அவரும் தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை தவற விடக்கூடாது என்ற முனைப்போடு பேசுவார். அவர் பதில் சொல்ல தொடங்கினால் உடனே யாராவது ஒருவர் குறுக்கிட்டு அவரது கருத்தை சொல்ல விடமாட்டார். உடனே நிகழ்ச்சியின் இறுதிப்பகுதி வந்து விடும். நிகழ்ச்சி தொடர்பான தலைப்புக்கு முன் எஸ்.எம்.எஸ். மூலம் மக்கள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் நிகழ்ச்சி முடிவடையும். ஒரு அரட்டை கச்சேரியாகவே நிகழ்ச்சி முடிந்து விடும். 
இத்தனைக்கும் மத்தியில் பொது மக்கள் என்ற ஒருவர் இருக்கிறார். இளிச்சவாய்த்தனமாக இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணமோ, கவலையோ நிகழ்ச்சி தொகுப்பாளர் உள்பட பங்கேற்கும் யாவருக்கும் இருப்பதாகவே காட்டிக் கொள்ள மாட்டார்கள். சில நேரங்களில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கண் துடைப்பிற்காக, இதுபோன்ற வார்த்தைகளை அனுமதிக்க முடியாது என்று சப்பை கட்டும் கட்டி விவாதத்தை வேறு பாதைக்கு மாற்றி விடுவார். http://www.thanthitv.com/schedule/schedule.aspx?pgid=9 இந்த வீடியோவை பாருங்கள்.
கடந்த 02.05.2015 அன்று இரவு 8.00 மணிக்கு தந்தி டி.வி.யில் ஒளிபரப்பான ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பிரமுகரும், தி.மு.க. பிரமுகரும் பேசி கொண்ட வார்த்தைகளின் மூலம் அவர்களின் தரம் என்ன என்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது.
மாநிலத்தில் என்ன நடக்கிறது? ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் என்ன? சரியான திட்டங்கள் கொண்டு வரப்படுகிறதா, அவை சரியாக மக்களை சென்றடைகின்றனவா? அந்த திட்டங்களில் அமைச்சர்களும், அதிகாரிகளும் லஞ்ச லாவண்யங்களில் ஈடுபடுகிறார்களா? அப்படி ஈடுபட்டு மாட்டிக் கொண்டால் அவை குறித்த முழுமையான செய்திகள் ஓட்டுப்போட்ட மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பன உள்ளிட்டவைகளை ஜனநாயகத்தின் 4-வது தூணாக செயல்படும் பத்திரிகைகளும், ஊடகங்களும் முறையாக, முற்றிலுமாக மக்களுக்கு சொல்ல வேண்டும். இப்போதெல்லாம் ஊடகங்கள் முழுமையான செய்திகளை வெளியிடுவதில்லை என்றே சொல்லலாம். ஒரு செய்தியை, கூட்டியோ குறைத்தோதான் வெளியிடுகிறார்கள். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். பொறுப்புணர்வோடு கண்களில் விளக்கெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு பத்திரிகைகளும், ஊடகங்களும் செயல்பட்ட காலம் மலையேறி விட்டது.
இதுபோன்ற விவாத நிகழ்ச்சிகளிலாவது சரியான செய்தியோ, சரியான தீர்வோ சொல்லமாட்டார்களா? என்கிற ஆதங்கத்தில் என்னைப் போன்றவர்கள் இந்த நிகழ்ச்சிகளை பார்க்கின்றனர். அரசியல் மேடைகளில் பேசப்படும் தரம் தாழ்ந்த வார்த்தைகள் சில நேரங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் வெளியாகி விடுவது வருத்தத்திற்குரியது. 
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித்தலைவர்களை சாமான்ய மக்கள் சந்தித்து கேள்வி கேட்க முடியுமா? அப்படி கேட்டால் சரியான பதில் கிடைக்குமா? எதிர் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். ஊடகவியலாளர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நிச்சயம் ஏதாவது ஒரு பதில் கிடைக்கும். அதில் கூட இப்போது அரசியல் கலந்து விட்டது. ஏனென்றால் தமிழக கட்சிகளுக்கு சொந்தமாகவோ, ஆதரவாகவோ பல பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் செயல்படுகின்றன. அரசியல் சார்போடுதான் கேள்விகளும் கேட்கப்படுகின்றன. இதன் காரணமாக சில நேரங்களில் செய்தியாளர்கள் சந்திப்பிலும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து விடுகின்றன.
அண்மையில் அனைத்துக் கட்சியினரையும் அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்துவிட்டு வந்த திரு.விஜயகாந்த் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது நிகழ்ந்த நிகழ்வு இதற்கு ஓர் உதாரணம்.
அதனால் இதுபோன்ற விவாத நிகழ்ச்சிகளை நடத்தும்போது எளிதில் உணர்ச்சிவயப்படாத, கேட்கப்படும் கேள்விகளுக்கு புள்ளி விவரங்களோடு பதில் அளிக்கக்கூடிய, ஒருவேளை எதிர் கருத்துகள் வெளிப்பட்டால் அதனை சாதுரியான பதிலால் சமாளித்து சரியான பதில் சொல்லும் திறமைப்படைத்தவர்களை, (பத்திரிகையாளர்களும்- எழுத்தாளர்களும் இதில் அடக்கம்) எல்லாவற்றிற்கும் மேலாக நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்துபவர்களை விவாதத்திற்கு அழைக்க வேண்டும். அநாகரிக வார்த்தைகள், தனிப்பட்ட ஒருவருக்கு எதிரான கருத்து கூறுபவர்களை நிகழ்ச்சியிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற நேரங்களில் பத்திரிகையாளர்களோ, எழுத்தாளர்களோ நிகழ்ச்சியில் பங்கேற்காமல் எழுந்து சென்று விட வேண்டும். அப்படி ஒரு நிகழ்வு ஒருதடவை நடந்தால் போதும் சரியான விவாதம் நடக்கும். முறையான தீர்வுக்கும் வழி பிறக்கும். 
ஊடகத்துறையில் போட்டி காரணமாக தங்களின் நிலையை நம்பர் ஒன்-னாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஊடகங்கள் செயல்படுகின்றனவோ என்றும் கூட எண்ணத் தோன்றுகிறது. நாட்டின் மீதும், ஆளும் அரசு செயல்படுத்தும் திட்டங்களின் மூலம் அதன் வளர்ச்சி- வீழ்ச்சி, முறைகேடுகள் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பான சரியான செய்திகளையும், அவற்றிற்கான தீர்வுகளை வழங்குவதிலும் தங்களுக்கு பொறுப்புணர்வு இருக்கிறது என்ற எண்ணம் ஊடகங்களுக்கு வர வேண்டும் என்பதே எனது ஆதங்கம்.

7 பிப்., 2015

வாரிசுகளால் கொல்லப்படும் வயதான பெற்றோர்! அதிர்ச்சி தகவல்காலை நேரம் அலுவலகத்திற்கு வரும் வழியில் பசி வயிற்றை தடவ வைத்தது. சாலையோர சிற்றுண்டிக்கடை ஒன்று கண்ணில் படவே, வண்டியை நிறுத்தி விட்டு சாப்பிட சென்றேன். கடையில் இருந்த சகோதரியிடம் தோசை கேட்டு வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில் வயதான பெண் ஒருவர் கடைக்கு வந்தார். அவரை பார்த்ததும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்போல் தெரிந்தார். பணியில் இருந்து ஓய்வு பெற்றவரை போலவும் அவரது தோற்றம் தெரிவித்தது.

கடைக்கார சகோதரிக்கு அவரை நன்கு தெரியும்போல, சிரித்துக் கொண்டே வரவேற்றார். ரெண்டு இட்லி குடுமா என்றார் அந்த வயதான பெண். சாப்பிடவா? பார்சலா? எனக் கேட்டார் கடைக்கார சகோதரி. சாப்பிடத்தான் என்று சொன்னதும், ஒரு தட்டில் இரண்டு இட்லி வைத்து கொடுத்தார்.

அப்பா கூட நேற்று வந்து சாப்பிட்டு விட்டு போனார் என்று அந்த சகோதரி சொன்னதும், அப்படியா என்று ஆர்வமாய் கேட்டு விட்டு, இப்போ நான் வந்து சாப்பிட்ட விஷயத்தை ஒரு பெயரை குறிப்பிட்டு ( ஒருவேளை மகளாகவோ அல்லது மருமகளாகவோ இருக்கக்கூடும்) அவரிடம் சொல்லி விடாதே என்று அந்த வயதான பெண் சற்று பதட்டத்துடன் சொல்லிவிட்டு, நாம யாருக்கும் தொந்தரவாக இருக்கக்கூடாது என்றபடியே சாப்பிட்டார்

நான் அந்த பெண்மணியையே பார்த்துக் கொண்டிருந்தேன். இதைக் கண்ட கடைக்கார சகோதரி, வீட்லே டிஃபன் செஞ்சிருப்பாங்க ஆனாலும் அடிக்கடி நம்ம கடைக்கு வந்து சாப்பிடுவாங்கண்ணே என்றார் என்னிடம்.

எனக்குள் ஏதோ ஒரு காரணம் புரியாத நெருடல். மனதிற்குள் இந்நிகழ்வை அசை போட்டபடியே அலுவலகம் சென்றேன்.

மாலையில் வீடு திரும்பியதும், அஞ்சலில் வந்திருந்த திருக்குர் ஆன் நற்செய்தி மலர் என்ற புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தேன். அதில் வாரிசுகளால் கொல்லப்படும் வயதான பெற்றோர்! அதிர்ச்சி தகவல் என்ற தலைப்பிட்ட கட்டுரையை படித்தேன். காலை நிகழ்வு ஏனோ என் நினைவுக்கு வந்தது. இந்த கட்டுரைக்கும் காலை நிகழ்வுக்கும் ஏதோ ஒரு நூலிழை தொடர்பு இருப்பதாக என் உள்மனம் உணர்த்தியது.

இதோ அந்த கட்டுரையின் ஒரு பகுதி...

மதுரையை ஒட்டிய உசிலம்பட்டி பகுதியில் செயற்படும் தொண்டு நிறுவனமான யுரைஸ் என்கிற நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின்படி சுமார் 100 கிராமங்களில் மட்டும் 150 முதல் 200 முதியோர் கொலைகள் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலைமை வெறும் மதுரைப் பிராந்தியத்தில் மட்டும் நடக்கவில்லை. தமிழ்நாட்டின் வேறு இடங்களிலும் இத்தகைய பெற்றோர் கொலைகள் நடந்திருக்கின்றன. இன்றும் நடப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சம்பவங்களில் பெரும்பாலும் பெற்றோர்கள் அவர்களின் சொந்த பிள்ளைகளாலேயே கொல்லப்படுகிறார்கள்.

இத்தகைய முதியோர் கொலைகள் நடப்பது சம்பந்தப்பட்ட ஊரில் அல்லது பகுதியில் எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது. ஆனால் யாரும் அதுகுறித்து பேசுவதில்லை. அப்படியே பேசினாலும் அது சட்டப்படி தண்டிக்கப்படுவதும் இல்லை. போதுமான சட்டரீதியிலான சாட்சியங்கள் இல்லை என்று கூறி எல்லோரும் இந்த பிரச்சனையை ஒன்று புறந்தள்ளப் பார்க்கிறார்கள் அல்லது வேக வேகமாக கடந்து செல்ல முயல்கிறார்கள்.

மேலும் எல்லா வீட்டிலும் வேண்டப்படாத எல்லா முதியவர்களும் கொல்லப்படுவதும் இல்லை. பலர் தற்கொலையை நோக்கி படிப்படியாக தள்ளப்படுகிறார்கள். இன்னும் சிலர் பெற்றோரை முதியோர் இல்லத்தில் பலவந்தமாக கொண்டுபோய் சேர்த்து விடுகிறார்கள். சில சமயம் அந்த முதியவர்களுக்குத் தெரியாமலே கூட. இன்னும் பல சந்தர்ப்பங்களில் பிள்ளைகளின் புறக்கணிப்பு மற்றும் வன்முறைகளை பொறுக்க முடியாமல் முதியவர்களில் பலர் தாமாகவே முதியோர் இல்லம் தேடி ஓடும் சூழலும் நிலவுகிறது.
-தகவல் உதவி: பிபிசி 12.12.2014
(நன்றி: திருக்குர் ஆன் நற்செய்தி மலர்- பிப்ரவரி- 2015 இதழ்- பக். 21)
இன்றைக்கு பல வீடுகளில் முதியவர்கள் புறக்கணிக்கப்படுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது. பெரும்பாலான முதியவர்கள் தங்களின் கடைசி காலம் வரை இன்றைய தலைமுறையினரோடு இணக்கமாக இருப்பதையே விரும்புகின்றனர். தங்களால் குடும்பத்தில் எந்தவித குழப்பங்களும், சண்டை சச்சரவுகளும் வந்துவிடக் கூடாது என்கிற எண்ணத்தில் தங்களின் தள்ளாமையைக்கூட கவனத்தில் கொள்ளாது நாயாய் உழைக்கிறார்கள். அப்படி பழகி கொண்டால் மட்டுமே அவர்கள் கவனிக்கப்படுவார்கள். அந்த கவனிப்பில் ஏதாவது குறைபாடுகள் இருந்தாலும் பொறுத்து கொள்ள வேண்டும். மீறினால் அந்த கட்டுரையில் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டிருக்கும் நிகழ்வுகள் நிச்சயம் நடக்க வாய்ப்புள்ளது.

சில வீடுகளில் தனி ராஜ்ஜியம் நடத்தியவர்கள் கூட முதிர் வயதை தொட்டவுடன் அதிகாரம் பறிக்கப்பட்டு வீட்டை விட்டோ அல்லது முதியோர் இல்லங்களுக்கோ தூக்கி அடிக்கப்படுகிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் மேலை நாடுகளில் வேலைக்காக சென்று செட்டில் ஆனவர்கள், முதியோர் இல்லங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் தங்களின் பெற்றோருக்கான செலவு பணத்தை அனுப்புவதுடன் முடித்துக் கொள்கின்றனர். ஒருவேளை பெற்றோர் இந்த உலகத்தை கடந்து விட்டார்கள் (மரணமடைந்து) என்று கேள்விப்பட்டாலும் அவர்களுக்கு இறுதி மரியாதை செய்வதற்கு கூட வருவதில்லை. (வடிவேலு காமெடியில் வரும், காலம் போகிற வேகத்தில அப்பனாவது, ஆத்தாளாவது, அப்படியே தூக்கி போட்டுட்டு போய்ட்டே இருக்கணும் என்ற வசனம் ஏனோ இந்த நேரத்தில நினைவுக்கு வந்து தொலைக்குது)   

காலையில் நான் கண்ட அந்த பெண்ணும், நாம யாருக்கும் தொந்தரவாக இருக்கக்கூடாது என்று சொன்னதுகூட இதுமாதிரியான விஷயங்களை மனதில் கொண்டு சொல்லியிருப்பாரோ தெரியவில்லை.

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும், உன் தாயையும் கனம் பண்ணுவாயாக (உபாகமம் 5: 16) என்று பரிசுத்த வேதாகமத்தில்- பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது.


ஆயுசு நாட்கள் அதிகமாகணும்னா, எல்லா நன்மைகளும் பெற்று செழிப்பாக வாழணும்னா தாய், தகப்பனை கனம் பண்ணணுமாம். தேவன் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கும் இந்த கட்டளையை எத்தனை பேர் கடைபிடிக்கிறார்களோ அதை அந்த தேவன் தான் அறிவார். ஒருவேளை நாம் கடைபிடிக்காதிருந்தால் இன்று முதல் கடைபிடிக்கத் தொடங்குவோம். அதன்மூலம் தேவனின் ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வோம்.