வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க !

3 மே, 2015

பொறுப்புணர்வு வேண்டாமா?


தொலைக்காட்சிளில் ஒளிபரப்பாகும்  விவாத நிகழ்ச்சிகளை நான் அடிக்கடி பார்ப்பதுண்டு. அந்த நிகழ்ச்சிகளில், விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் (ஆளுங்கட்சி, ஆண்ட கட்சி, ஆளத்துடிக்கும் கட்சிகள் தொடர்பான) தலைப்பையொட்டி அதை ஆதரிக்கும் வகையிலும், எதிர்க்கும் வகையிலும் எதிர் எதிர்க்கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும், எழுத்தாளர், பத்திரிகையாளர்களும் பங்கேற்கின்றனர். 
நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வியை ஆரம்பிப்பார். ஆளுங்கட்சி தொடர்பானதாக இருந்தால் அந்தக் கட்சி பிரமுகர் பதில் சொல்வார். பதில் முழுவதும் சொல்லி முடிப்பதற்குள் தொகுப்பாளர் இடையிடையே புகுந்து வேறு திசைக்கு அவரை மாற்றி விடுவார். முழு பதிலும் கிடைக்காது. அதற்குள் எதிர்க்கட்சி பிரமுகர் இடை மறிப்பார். உடனே விவாதம் இரண்டு கட்சிகளின் தலைவர்களை பற்றியதாக மாறி விடும். தங்கள் கட்சித்தலைமையின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்கிற வகையில் கட்சி பிரமுகர்கள் ஒருவரையொருவர் வார்த்தைகளால் தாக்கி கொள்வார்கள். அத்துடன் அவரவர் கட்சித் தலைவர்களின் ஊழல்கள், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தான தரக்குறைவான வார்த்தைகளையும் உதிர்ப்பார்கள். 
உடனே தொகுப்பாளர் சிறிது நேர இடைவெளிக்குப் பின் நிகழ்ச்சி தொடரும் எனக்கூறி இடைவேளை விடுவார். பிறகு நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் எழுத்தாளரையோ, பத்திரிகையாளரையோ பதில் சொல்ல வேண்டுவார். அவரும் தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை தவற விடக்கூடாது என்ற முனைப்போடு பேசுவார். அவர் பதில் சொல்ல தொடங்கினால் உடனே யாராவது ஒருவர் குறுக்கிட்டு அவரது கருத்தை சொல்ல விடமாட்டார். உடனே நிகழ்ச்சியின் இறுதிப்பகுதி வந்து விடும். நிகழ்ச்சி தொடர்பான தலைப்புக்கு முன் எஸ்.எம்.எஸ். மூலம் மக்கள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் நிகழ்ச்சி முடிவடையும். ஒரு அரட்டை கச்சேரியாகவே நிகழ்ச்சி முடிந்து விடும். 
இத்தனைக்கும் மத்தியில் பொது மக்கள் என்ற ஒருவர் இருக்கிறார். இளிச்சவாய்த்தனமாக இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணமோ, கவலையோ நிகழ்ச்சி தொகுப்பாளர் உள்பட பங்கேற்கும் யாவருக்கும் இருப்பதாகவே காட்டிக் கொள்ள மாட்டார்கள். சில நேரங்களில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கண் துடைப்பிற்காக, இதுபோன்ற வார்த்தைகளை அனுமதிக்க முடியாது என்று சப்பை கட்டும் கட்டி விவாதத்தை வேறு பாதைக்கு மாற்றி விடுவார். 



http://www.thanthitv.com/schedule/schedule.aspx?pgid=9 இந்த வீடியோவை பாருங்கள்.
கடந்த 02.05.2015 அன்று இரவு 8.00 மணிக்கு தந்தி டி.வி.யில் ஒளிபரப்பான ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பிரமுகரும், தி.மு.க. பிரமுகரும் பேசி கொண்ட வார்த்தைகளின் மூலம் அவர்களின் தரம் என்ன என்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது.
மாநிலத்தில் என்ன நடக்கிறது? ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் என்ன? சரியான திட்டங்கள் கொண்டு வரப்படுகிறதா, அவை சரியாக மக்களை சென்றடைகின்றனவா? அந்த திட்டங்களில் அமைச்சர்களும், அதிகாரிகளும் லஞ்ச லாவண்யங்களில் ஈடுபடுகிறார்களா? அப்படி ஈடுபட்டு மாட்டிக் கொண்டால் அவை குறித்த முழுமையான செய்திகள் ஓட்டுப்போட்ட மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறதா? என்பன உள்ளிட்டவைகளை ஜனநாயகத்தின் 4-வது தூணாக செயல்படும் பத்திரிகைகளும், ஊடகங்களும் முறையாக, முற்றிலுமாக மக்களுக்கு சொல்ல வேண்டும். இப்போதெல்லாம் ஊடகங்கள் முழுமையான செய்திகளை வெளியிடுவதில்லை என்றே சொல்லலாம். ஒரு செய்தியை, கூட்டியோ குறைத்தோதான் வெளியிடுகிறார்கள். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். பொறுப்புணர்வோடு கண்களில் விளக்கெண்ணெய்யை ஊற்றிக் கொண்டு பத்திரிகைகளும், ஊடகங்களும் செயல்பட்ட காலம் மலையேறி விட்டது.
இதுபோன்ற விவாத நிகழ்ச்சிகளிலாவது சரியான செய்தியோ, சரியான தீர்வோ சொல்லமாட்டார்களா? என்கிற ஆதங்கத்தில் என்னைப் போன்றவர்கள் இந்த நிகழ்ச்சிகளை பார்க்கின்றனர். அரசியல் மேடைகளில் பேசப்படும் தரம் தாழ்ந்த வார்த்தைகள் சில நேரங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் வெளியாகி விடுவது வருத்தத்திற்குரியது. 
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சித்தலைவர்களை சாமான்ய மக்கள் சந்தித்து கேள்வி கேட்க முடியுமா? அப்படி கேட்டால் சரியான பதில் கிடைக்குமா? எதிர் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பது எல்லோரும் அறிந்த விஷயம். ஊடகவியலாளர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நிச்சயம் ஏதாவது ஒரு பதில் கிடைக்கும். அதில் கூட இப்போது அரசியல் கலந்து விட்டது. ஏனென்றால் தமிழக கட்சிகளுக்கு சொந்தமாகவோ, ஆதரவாகவோ பல பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் செயல்படுகின்றன. அரசியல் சார்போடுதான் கேள்விகளும் கேட்கப்படுகின்றன. இதன் காரணமாக சில நேரங்களில் செய்தியாளர்கள் சந்திப்பிலும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து விடுகின்றன.
அண்மையில் அனைத்துக் கட்சியினரையும் அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்துவிட்டு வந்த திரு.விஜயகாந்த் அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது நிகழ்ந்த நிகழ்வு இதற்கு ஓர் உதாரணம்.
அதனால் இதுபோன்ற விவாத நிகழ்ச்சிகளை நடத்தும்போது எளிதில் உணர்ச்சிவயப்படாத, கேட்கப்படும் கேள்விகளுக்கு புள்ளி விவரங்களோடு பதில் அளிக்கக்கூடிய, ஒருவேளை எதிர் கருத்துகள் வெளிப்பட்டால் அதனை சாதுரியான பதிலால் சமாளித்து சரியான பதில் சொல்லும் திறமைப்படைத்தவர்களை, (பத்திரிகையாளர்களும்- எழுத்தாளர்களும் இதில் அடக்கம்) எல்லாவற்றிற்கும் மேலாக நாகரிகமான வார்த்தைகளை பயன்படுத்துபவர்களை விவாதத்திற்கு அழைக்க வேண்டும். அநாகரிக வார்த்தைகள், தனிப்பட்ட ஒருவருக்கு எதிரான கருத்து கூறுபவர்களை நிகழ்ச்சியிலிருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற நேரங்களில் பத்திரிகையாளர்களோ, எழுத்தாளர்களோ நிகழ்ச்சியில் பங்கேற்காமல் எழுந்து சென்று விட வேண்டும். அப்படி ஒரு நிகழ்வு ஒருதடவை நடந்தால் போதும் சரியான விவாதம் நடக்கும். முறையான தீர்வுக்கும் வழி பிறக்கும். 
ஊடகத்துறையில் போட்டி காரணமாக தங்களின் நிலையை நம்பர் ஒன்-னாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஊடகங்கள் செயல்படுகின்றனவோ என்றும் கூட எண்ணத் தோன்றுகிறது. நாட்டின் மீதும், ஆளும் அரசு செயல்படுத்தும் திட்டங்களின் மூலம் அதன் வளர்ச்சி- வீழ்ச்சி, முறைகேடுகள் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பான சரியான செய்திகளையும், அவற்றிற்கான தீர்வுகளை வழங்குவதிலும் தங்களுக்கு பொறுப்புணர்வு இருக்கிறது என்ற எண்ணம் ஊடகங்களுக்கு வர வேண்டும் என்பதே எனது ஆதங்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.