வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க !

23 ஜூன், 2012

எப்படி போனது? எங்கே போனது?



கடைசி முயற்சி
மரணம்...
இந்த பெயரை கேட்டதும் மிரண்டுபோகும் மனிதர்கள்தான் அதிகம்.
ஒருவரும் இதனை விரும்பி வரவேற்பதில்லை. ஆனாலும் குறிக்கப்பட்ட அந்த நாள் வரும்போது அது தவறாமல் தன் வேலையை செய்து முடிக்கிறது.
எனக்கு இது நேரிடாது என்று எந்த மனிதரும் மறுத்து கூற முடியாது.
நாம் விரும்பாமலேயே அது நம்மை வந்தடையும்.
பிறப்பு எப்படி நிச்சயமோ, இறப்பும் நிச்சயமே.
அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் கூட தயாரிப்பு தேதியும்,
இறப்பு தேதியும் (அதாவது அதன் பயன்பாட்டுக் காலம்) குறிக்கப்பட்டிருக்கும்.
நமக்கும் அப்படிதானாம்.

ஒவ்வொரு மனிதன் பிறக்கும்போதும் அவனுடைய இறக்கும் நாளும் குறிக்கப்படுகிறதாம். இது எல்லா மனிதருக்கும் தெரியுமாம். இந்த உலகில் அவன் வாழும்போது பலவித எண்ணங்களில், கவலைகளில் சிக்கி கொள்வதால் அவனின் இறப்பு நாளை மறந்து விடுகிறானாம். அபூர்வமாக சில பேர் தங்களின் மரண நாளை முன் கூட்டியே தெரிவித்து, அதன்படி இறந்தும் இருக்கின்றனராம். நான் சிறுவனாக இருந்தபோது பெரியவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது எனக்கு தெரியாது.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிலரின் கடைசி நிமிடம் அல்லது கடைசி நொடி என்று கூட சொல்லலாம், உடல் என்னும் கூட்டை விட்டு உயிர் பிரியும் தருணம் அருகில் இருந்திருக்கிறேன். கிட்டதட்ட நான்கு பேரின் கடைசி தருணத்தில் உடனிருந்திருக்கிறேன். எப்படித்தான் உயிர் பிரிந்தது என்றே தெரியவில்லை.

இப்படித்தான் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு என் உறவினர் ஒருவர் உடல்நிலை சரியில்லாத நிலையில் ஜி.எச்.சில் சேர்க்கப்பட்டிருந்தார். இரண்டே நாட்கள்தான். முதல்நாள் சேர்த்தார்கள். இரண்டாம் நாள் மாலையில் அவரின் நிலை மோசமானது. சேதியறிந்து அங்கு சென்றேன். டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது. மூக்கிலும், வாயிலும் குழாய்கள் செருகப்பட்டிருந்தன. அவரின் சுவாசம் வித்தியாசமாக இருந்தது. ஏற்கெனவே பார்த்து பழக்கப்பட்டிருந்ததால் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.
அந்நிலையிலும் உறவினர்கள் தங்களின் வருகையை தொடுதல் மூலமாக அவருக்குப் பதிவு செய்தனர். அவரும் தன் பங்குக்கு தலையை திருப்பி அவர்களைப் பார்த்து கண்களை மூடி, திறந்து சரி என்பது போல் உணர்த்தினார்.
அவரின் முடிவு நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். இரவு 8.45 மணியிருக்கும். கண்கள் திறந்திருந்த நிலையில் திடீரென அவர் மூச்சு நின்றது. பணியில் இருந்த டாக்டர்களும், நர்சுகளும் பரபரப்பாயினர். உறவினர்களை வெளியே செல்லும்படி கட்டாயப்படுத்தினர். பொது வார்டு என்பதால் கட்டிலை ஒட்டியபடி முக்கோண வடிவில் திரைச்சீலை மூடப்பட்டது. ஒரு மருத்துவர் நோயாளியின் இடது மார்பு பக்கம் இரண்டு கைகளையும் வைத்து மேலும் கீழும் பலம் கொண்டு அழுத்தினார். எனக்கு புரிந்து போனது.
வாயைத் திறந்து ஒரு குழாயை செருகி குழாயின் மறுமுனையில் பலூன் போன்ற ஒன்றை பொருத்தி அருகில் இருந்த என் உறவினரிடம் கொடுத்து 4 முறை அழுத்தும்படியும், பிறகு விட்டு விட்டு அழுத்தும்படியும் மற்றொரு மருத்துவர் அறிவுறுத்தினார். அவரும் அதன்படியே செய்தார். ஒவ்வொரு முறை அமுக்கும்போதும் வயிறு மேலும், கீழும் ஏறி இறங்கியது. ஒரு முன்னேற்றமும் இல்லை.
என்னை அழைத்த வேறொரு மருத்துவர், அவருக்கு (நோயாளிக்கு) இதயத்துடிப்பு நின்று விட்டது. செயற்கை முறையில் இதயத்தை துடிக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். ஒருவேளை இதயம் துடிக்கத் தொடங்கி விட்டால் அது எவ்வளவு நேரம் துடிக்கும் என்று தெரியாது. பத்து நிமிடம் துடிக்கலாம், ஒரு மணிநேரம் துடிக்கலாம் அல்லது ஒரு நாள் முழுவதும் துடிக்கலாம். இப்போதைக்கு எங்களால் இது மட்டுமே செய்ய முடியும். மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.
மருத்துவர் என்னிடம் கூறியதை  இறந்தவரின் மனைவி உள்பட அனைவரிடமும் தெரிவித்து ஆக வேண்டிய காரியங்களை பார்க்கும்படி வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.
குறிக்கப்பட்ட நேரம் வந்தது யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் உடலை விட்டு அவரின் உயிர் விடை பெற்றது. எப்படி போனது, எங்கே போனது விடை காண முடியவில்லை.
இது ஒருநாள் எனக்கும் வந்து சேரும். இதிலிருந்து நான் தப்பிக்க முடியாது என்னும் எண்ணம் அந்த நேரத்தில் என் நெஞ்சில் நிழலாடியது

இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான் -
இந்த வரி நீர்க்குமிழி என்ற திரைப்படத்தில் ஆடி அடங்கும் வாழ்க்கையடா... என்ற பாடலின் இடையே வரும்.
இறந்து கிடப்பவரை காண நேரிடும்போதெல்லாம் இந்த பாடல் வரி என் நினைவுக்கு வரும்.

இரண்டு மரணங்கள் என் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன.
1) மரணம் நிச்சயம் என்பதை அறிந்ததும் அதனை சந்திக்க தயாராகி அமைதியாக எங்களை விட்டு, இந்த உலகை விட்டு விடை பெற்ற என் மூத்த மகனின் மரணம்.
2) மரணம் நெருங்கி வருகிறதே என அஞ்சி, தன் கண்களில் அந்த மரண பயத்தை மற்றவர்களுக்குக் காட்டி பிரிய மனமில்லாமல் உலகை கடந்த என் அத்தையின் மரணம்.

மரணம் குறித்த சிந்தனை எனக்கு வரும்போதெல்லாம் இந்த இரண்டு நிகழ்வுகளும் என் நினைவுக்கு வரும். அடுத்த நொடியே மரணத்தை சந்திக்க நேரிட்டாலும் அதனை மகிழ்வோடு வரவேற்கும் மனநிலையும் உருவாகும்.

இந்த உலகத்தில் வாழும் மக்கள் அநியாய, அட்டூழியங்களை செய்கிறார்களே, அவர்களுக்கு மரணம் குறித்த சிந்தனையே இருக்காதா என்ற எண்ணமும் அடிக்கடி எனக்கு தோன்றிக் கொண்டே இருக்கிறது.
என்ன செய்வது? 

21 ஜூன், 2012

குரங்காட்டி


எனக்குள் அது அடக்கமா? அதற்குள் நான் அடக்கமா?
என் பேச்சை அது கேட்க வேண்டுமா?
அதன் பேச்சை நான் கேட்டு நடக்க வேண்டுமா?
இது மாதிரி பலமுறை நான் குழம்பி போய் இருக்கிறேன்.
அது எனக்கு அடங்கி இருக்க வேண்டும் என்று சில நேரங்களில் முடிவெடுத்து,
அதனுடன் சமரசம் பேசி அடக்க முயன்றிருக்கிறேன்.
அடங்குவதைப்போல நடித்து என்னை முழுவதுமாய் தன் வசப்படுத்தி கொள்ளும்.
அடக்கி ஆண்டவர்கள் சரித்திரத்தில் நிலைத்து நின்றிருக்கின்றனர்.
அடக்க முடியாதவர்கள் சரிந்து மறைந்து போயிருக்கிறார்கள்.
நம் மனதைப் பற்றிதான் இதுவரை கூறினேன்.
மனம் ஒரு குரங்கு என்றார்கள்.
பல நேரங்களில் அது உண்மை என நிரூபணமாயிருக்கிறது.
குரங்கை அடக்குபவன் குரங்காட்டி.
அப்படி பார்க்கப்போனால் நாமும் குரங்காட்டிதான்.
அண்மையில் திரு.சுகிசிவம் அவர்கள் எழுதிய மனிதனும் தெய்வமாகலாம் என்ற நூலில் ஒரு கதையைப் படித்து ரசித்தேன். அவருக்கு நன்றி...

இதோ அந்த கதை:
குரங்காட்டி ஒருவரின் வீட்டில் குரங்குதான் உணவு பரிமாறுவது வழக்கம். 
உணவை ஒவ்வொன்றாக அது பரிமாறும்போது குரங்காட்டி குச்சியால் அதற்கு ஓர் அடி கொடுப்பார்.
இத்தனைக்கும் அந்த குரங்கு எந்த தப்பும் செய்யாதபோதே அதற்கு இந்த தண்டனை..
சமர்த்தாக சாதம் வைத்ததும் ஓர் அடி..
சாம்பார் பரிமாறியதும் ஓர் அடி..
காய் வைத்ததும் ஓர் அடி..
குரங்கு சரியாக அடி வாங்கிச் சரியாக வேலை செய்தது.
ஒருமுறை குரங்காட்டியின் வீட்டிற்கு ஒரு விருந்தாளி வந்திருந்தார்.
குரங்கை அடிப்பது அவருக்கு பிடிக்கவில்லை.
தவறு செய்யாதபோதும் குரங்கை அடித்தால் நான் சாப்பிடமாட்டேன் என்று மறுத்து விட்டார்.
குரங்காட்டி அடிப்பதை நிறுத்தினார், இனி என்ன நடந்தாலும் நீங்கள்தான் பொறுப்பு என்று கூறிவிட்டு அமைதியானார்.
குரங்கு இலை போட்டது. அடி இல்லை. அதற்கு அதிர்ச்சி.
சாதம் வைத்தது. அப்போதும் அடி இல்லை.. மகிழ்ச்சி.
காய் வைத்தது... அடி இல்லை.
பல்லைக் காட்டி சிரித்தது குரங்கு. அடி இல்லை.
குழம்பு கொண்டு வரும்போதே அலட்சியமாக இளித்தது.
அடி இல்லை என்றதும் குழம்பிற்குள் கையை விட்டுக் கலக்கியது.
விருந்தாளி முகம் சுழித்து.. ச்சூ.. ச்சூ..என்று எரிச்சலுடன் விரட்டினார்.
குரங்கு அவர் மீது பாய்ந்து அவர் அணிந்திருந்த மூக்கு கண்ணாடியை பறித்து எறிந்தது. அத்துடன் அவர் தலையையும் பிராண்டியது.
ஐய்யோ காப்பாற்றுங்கள் என்று பரிதாபமாக அலறினார்.
குரங்காட்டி கோலை எடுத்தார். குரங்கு ஒடுங்கி விட்டது.
நமது மனமும் ஒரு பேய் குரங்கு. அதனால்தான் மகான்கள் அடிக்கடி அதனைக் கண்டித்து ஒடுக்கி உயர்ந்தார்கள்.
தவறு செய்தபின் தண்டிப்பதால் ஒரு பயனும் இல்லை.
செய்யாதபடி கண்டிப்பதும், ஒடுக்குவதும் தான் முக்கியம்.

கதை எனக்கு பிடிச்சிருக்கு. முயற்சி செய்து பார்க்கிறேன்.
உங்களுக்கு?

2 ஜூன், 2012

பாவமும், சாபமும்




நாம் பார்க்கும், படிக்கும், கேட்கும் விஷயங்களை உள்வாங்கும் போது அவை எண்ணங்களாக மாறுகின்றன.
அந்த எண்ணங்களின் அடிப்படையில் கருத்துகளும், வார்த்தைகளும் உருவாகி, நம்முடைய நடத்தையில் வெளிப்படுத்தப்படுகின்றன.
வெளியாகும் செய்கைகளின்படி நடந்து முடிவில் வெற்றி, தோல்வியை அடைகிறோம்.

மொத்தத்தில் எண்ணங்கள் சீரானால் எல்லாம் சீராகும்
என்பது எனது அனுபவபூர்வமான நம்பிக்கை.

வழக்கம் போல் இன்று காலை தினத்தந்தி நாளேட்டை படித்தேன்.
பொதுவாக சில தலைப்புகளை படித்தாலே செய்திகளை படித்த உணர்வு வரும்.
ஒரு சில தலைப்புகள் கண்ணில் தென்பட்டதும் உள்ளே சென்று படிக்க தூண்டும்.
படிக்கும் போதே செய்தியை முழுமையாக உள் வாங்கவும் தோன்றும்.
குறிப்பிட்ட அந்த செய்தி சில நேரங்களில் நம் மனதையும் பாதித்து விடும்.

அந்த வகையில்,
விபத்தில் சிக்கி 2 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த மகனை
கொன்று ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை என்று வெளியாகி இருந்த செய்தி மனதை பாதித்தது.
இச்சம்பவம் மதுரையில் நடந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற அந்த சப்-இன்ஸ்பெக்டர், தனது அன்பு மகனுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்.
(தனது சந்ததி பெருக வேண்டும் என்று எவ்வளவு ஆசைப்பட்டிருப்பார்.)
5 ஆண்டுகளில் மகனின் திருமண வாழ்க்கையில் தோல்வி. (மனம் ஒடிந்து போயிருப்பார்).
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே மகன் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்றுள்ளார் (அந்த தந்தையால் எப்படிதான் தாங்க முடிந்ததோ?)
ரூ.10 லட்சம் வரை செலவு செய்தும் எந்த அசைவுமின்றி கிடந்த மகனின் நிலை கண்டு அவரது தாயும் நெஞ்சுவலியால் இறந்து போயுள்ளார்.
(மனைவியின் இறப்பும் அவரை வெகுவாக பாதித்திருக்கும்).
ஒரு நடைபிணமாக இருந்து மகனை கவனித்து வந்த அந்த சப்-இன்ஸ்பெக்டர் பொறுமையிழந்து மகனுக்கு விஷத்தைக் கொடுத்து
கருணைக்கொலை செய்து விட்டு, வீட்டிற்கு வெளியே இருந்த வேப்ப மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

அடுத்த சந்ததிக்கு வாய்ப்பு இல்லாமல் இந்த தலைமுறையிலேயே ஒரு குடும்பம்
முழுவதும் அழிந்து போனதுதான் என் மனதை மிகவும் பாதித்தது.
இதுபோன்ற செய்திகளை கேள்விப்படும்போதும், படிக்கும்போதும்
என்ன பாவம் செய்தார்களோ என்றுதான் எல்லோரும் நினைப்பர்.
நானும் விதிவிலக்கல்ல.

அடுத்தவர்களை விமர்சனம் செய்யும் உரிமை எனக்கில்லை.
அது எனது நோக்கமும் அல்ல. அதிலும் இறந்தவர்களை விமர்சிப்பது அழகல்ல.
ஆனாலும் ஒரு முழு குடும்பமும் அழிந்து போனதே என்ற வருத்தம் நெஞ்சை விட்டு அகல மறுக்கிறது.

விஷம் கொடுத்து கொலை செய்யாமல் கோமா நிலையில் இருக்கும் மகனின் உடல் உறுப்புகளை
யாருக்காவது தானமாக கொடுத்திருக்கலாமோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.
அப்படி செய்திருந்தால் பலரின் புண்ணியத்தையாவது அந்த குடும்பம் பெற்றிருக்கும்.

எங்கள் நிறுவன ஆசிரியர் திரு.யாணன் அவர்கள் எழுதிய பாவ புண்ணியக் கணக்குகள் நூலில் கூறியிருக்கும்
மனித வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டியவை
புண்ணியங்களும், ஆசீர்வாதங்களும்,
சம்பாதிக்க கூடாதவை சாபமும், பாவமும்...

என்ற அந்த வாசகம் ஏனோ இந்த நேரத்தில் என் நினைவுக்கு வருகிறது.
நினைவில் இருந்து விரட்டப்பார்க்கிறேன், போக மறுக்கிறது.

வாழும்போதே முடிந்தவரை புண்ணியங்களையும்,
ஆசீர்வாதங்களையும் சம்பாதிப்போம்.
அது அடுத்த தலைமுறையையும் வாழ வைக்கும்.
.