வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க !

6 செப்., 2014

தியாக நாய்

அனாதையான குட்டிகள்
குலவிளக்கு என்ற பழைய தமிழ்த் திரைப்படத்தில் ஒரு காட்சி. காசநோயால் பாதிக்கப்பட்ட கதாநாயகி, பழைய பொருட்களை போட்டு வைக்கும் இடத்தில் தூக்கி வீசப்பட்டிருப்பாள். மரணம் நெருங்குகிறது. அவள் பாசமாக வளர்த்த நாய் இதை அறிந்து கொள்கிறது. தன் வாயில் ஒரு சிறிய பாத்திரத்தை தூக்கிக் கொண்டு தண்ணீர் எடுத்து வந்து அவள் அருகில் வைக்கிறது. எப்படியாவது அவள் உயிரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், அதற்குள் அவள் இறந்து விடுகிறாள். நன்றி பெருக்கால் அந்த நாய் இதை செய்கிறது. அந்த காட்சியை நான் கண்டபோது கண்ணீர் வடித்தேன்.

நன்றி கெட்ட மகனை விட நாய்கள் மேலடா? என்றொரு பாடலை நாம் கேட்டிருப்போம். பெற்று வளர்த்த பிள்ளைகள்கூட நன்றி கெட்டவர்களாக மாறி விடுவார்கள், ஆனால் எப்போதும் நன்றி மறக்காத நாய்கள் அவர்களை விட மேலானவை என்ற அர்த்தம் அந்த பாட்டில் சொல்லப்பட்டிருக்கும்.

இப்படி நன்றி என்ற சொல்லுக்கு உதாரணமாக காட்டப்படும் ஒரே ஜீவனான நாய் ஒன்று தனக்கு தியாக உணர்வும் இருக்கிறது என்பதை காட்டியிருக்கிறது.

தினகரன் நாளேட்டில் (05.09.2014) அந்த செய்தியை படித்தேன். மனம் கலங்கி போனேன். கண்களின் ஓரம் கண்ணீர் வழிந்தது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் பழைய மூர் மார்க்கெட் இருந்த இடத்திற்கும் (இன்று அல்லிகுளம் வளாகம்) இடையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் நீர் தேங்கி இருந்துள்ளது. அந்த பகுதியில் இருந்த விளக்கு கம்பத்தில் மின்கசிந்ததால் மழை நீரிலும் மின்சாரம் பாய்ந்திருந்தது. யாருக்கும் இது தெரியவில்லை. 

இரவு 10 மணியளவில் ரயிலை பிடிக்கும் அவசரத்தில், மழைநீரில் கால் வைக்க  வந்த பயணிகளை அங்கிருந்த நாய் ஒன்று விரட்டியது. நாயின்  சீற்றத்தை பார்த்த பயணிகள் பயந்துபோய், மழைநீர் இருந்த பக்கம்  வராமல் சுற்றியபடி சென்றனர். தனியாகவும், கூட்டமாகவும் வந்த  10-க்கும் மேற்பட்டவர்களை அந்த நாய் விரட்டியபடியே  இருந்தது. சிலர் பயத்தில் நாய் மீது கல் எறிந்தனர். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அந்த நாய் 7 குட்டிகளை போட்டிருந்தது. குட்டிகள் இன்னும் நடமாட ஆரம்பிக்கவில்லை.

அந்த வழியாக சென்ற இளைஞர் ஒருவர், நாய்  குரைப்பதையும், தன்னை விரட்ட முயல்வதையும் கண்டுகொள்ளாமல் மழைநீர் தேங்கிய பகுதிக்கு அருகே சென்று  விட்டார். அவரை நோக்கி நாய்  குரைத்துக்கொண்டே இருந்தது. தன் வேகத்தை  குறைத்து நின்று, நாயை விரட்ட அவர் கல் தேடினார். சற்றுநேரத்தில் குரைப்பதை நிறுத்திய அந்த நாய், வேகமாக ஓடிவர ஆரம்பித்தது.  தன்னை நோக்கி ஓடிவந்த நாயை அந்த இளைஞர், பார்த்துக் கொண்டே  இருந்தார். அதற்குள் அந்த நாய், மின்கசிவு  ஏற்பட்டிருந்த மழைநீரில் வேகமாக பாய்ந்தது. அதில் இருந்த மின்சாரம் பாய்ந்து, நாய் துடிதுடித்து இறந்தது. இளைஞர் அதிர்ச்சியில் உறைந்தார். மேலும், அந்த வழியாக வந்த பொதுமக்கள் சிலரும் அப்படியே சிலையாக நின்றனர். மழைநீரில் மின்சாரம் பாய்ந்த விஷயம், அந்த நாய் இறந்தது  மூலம்தான் தெரிய வந்தது.

உடனடியாக மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் வந்து  மின்சாரத்தை துண்டித்து அந்த இடத்தை சரி செய்தனர். மழை நீரில் இறந்து கிடந்த நாய் மீட்கப்பட்டு, நடைமேடையில் கிடத்தப்பட்டது.  பயணிகளையும், நடை பாதையில் கடை வைத்திருப்பவர்களையும்  காப்பாற்றிய நாய்க்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. தாயை இழந்து தவித்த 7 நாய்க்குட்டிகளும் மீட்கப்பட்டு புளுகிராஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

பாச உணர்வு, நன்றி உணர்வு கொண்ட வீட்டு விலங்கான நாயின் இந்த செயலால் தனக்கு தியாக உணர்வும் இருக்கு என்பதை மனிதர்களுக்கு உணர்த்தி விட்ட்து.

இனிமேல் யாரையாவது, போடா நாயே என்று சொல்வதற்கு முன் அவரிடம் இத்தகைய பண்புகள் இருக்குமா? என்பது குறித்து யோசிக்க வேண்டுமோ என்னவோ?