வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க !

24 டிச., 2012

உன்னத தலைவரின் பிறந்த நாள்






தேவன் 
தம்முடைய ஒரே பேறான 
குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ 
அவன் கெட்டுப் போகாமால் 
நித்திய ஜீவனை அடையும்படிக்கு 
அவரை தந்தருளி, 
இவ்வளவாய் உலகத்தில் 
அன்பு கூர்ந்தார்.(யோவான் 3:16)

உலக வரலாற்றில் மறக்க முடியாத,
மறுக்க முடியாத உன்னத தலைவரின் பிறந்த நாள் இன்று.
அன்பு, தியாகம், எளிமை,
முன் மாதிரியான ஓர் நல்வாழ்க்கை என
அவரை போல் வாழ்ந்தவர் ஒருவரும் இல்லை
இந்த பூமியில்.

தேவனின் குமாரன் என்ற
மகிமையை தியாகம் செய்தவர்.
அழிந்து கொண்டிருக்கும்
உலக மக்களின் மேல்
அன்பு கொண்டதால்தான்
அவரின் தியாகம் உணர்த்தப்பட்டது.

அரண்மனையிலோ, மாட மாளிகையிலோ
அவர் பிறக்காமல்,
நாற்றமடுத்த மாட்டுத் தொழுவத்தில் பிறந்து,
கந்தை துணியில் சுற்றி கிடத்தப்பட்டதால்
அவரின் எளிமை அறியப்பட்டது.

சந்தர்ப்பம் கிடைத்தால் போதும்,
அடுத்தவனின் தவறை
உலகறிய செய்யும் மனிதர்கள்
மத்தியில் வாழ்ந்த காலத்தில்,
கையும், மெய்யுமாய் விபச்சாரத்தில்
பிடிபட்ட பெண்ணுக்கு,
தீர்ப்பளிக்கும் அதிகாரம் இருந்தும்
அதை செய்ய மறுத்து
அவளை மன்னித்து,
இனி நீ பாவம் செய்யாதே என்று கூறி,
மறுவாழ்வு அளித்து
முன்மாதிரியாக வாழ்ந்து காட்டியவர்.

இன்னும் எத்தனையோ
சொல்லலாம் அவரை குறித்து.

என்னை உயர்த்த
தன்னை தாழ்த்திய
அந்த உன்னதரை
உள்ளத்தில் வரவேற்போம்.
அர்த்தமுள்ள வகையில்
அவரின் பிறந்த நாளை
கொண்டாடி மகிழ்வோம்.
அனைவருக்கும்
இனிய
கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்

21 செப்., 2012

அழியா கலை... அழிவை நோக்கி?


சித்திரம் என்பது ஓவியத்தைக் குறிக்கும் மற்றொரு சொல்லாகும். ஓவியம் ஓர் கலை. அந்த கலையை ஆத்மார்த்தமாய் ரசிப்பது ஓர் சுகம். அந்த சுகத்தை அனுபவித்தவர்களுக்கு மட்டும்தான் அதன் மேன்மை புரியும்.
மேலும், கீழும் கோடுகள் போடு அதுதான் ஓவியம் என்றார்கள். ஆமாம், ஓவியத்தின் மீது ஆர்வம் உள்ளவர்கள் முதல்ல இதைத்தான் செய்வார்கள். பல ஓவிய மேதைகள் இப்படித்தான் தரையிலும், சுவரிலும், காகிதங்களிலும் கிறுக்கி கிறுக்கியே அந்த கலையை கற்று சாதனைப் படைத்திருக்கின்றனர்.

பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்த இந்த கலை குறித்த ஆர்வம், சிறு வயதில் நான் படிக்கும்போது எனக்கு ஏற்பட்டது. எனது ஆர்வத்தை நான் வளர்த்துக் கொள்ள முக்கிய காரணமாக இருந்தவர் என் அப்பா. வீட்டில் ஓய்ந்திருக்கும் நேரத்தில் ஒரு நோட்டு புத்தகத்தை எடுத்து, அதில் ஏதாவது ஒரு உருவத்தை வரைந்து கொண்டிருப்பார். சில நேரங்களில் வரைந்த அந்த ஓவியத்திற்கு அட்டையிலோ, தகரத்திலோ உருவம் கொடுப்பார். வயது முதிர்ந்த நிலையில் இப்போதும் கூட அதை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு ஆன்ம திருப்தி அவருக்கு.

அடுத்து ஓவியத்தின் மீது எனக்குள்ள ஆசையை வெறியாக மாற்றியவர், என்னோடு படித்த நண்பரின் அண்ணன் டாக்டர் ஜீவராஜ் அவர்கள். சென்னை, காசிமேட்டில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு நல்ல மனிதர். அவர் ஹோமியோபதி மருத்துவம் படித்துக் கொண்டிருந்த நேரம் அது. அவர்களுக்கு சொந்தமான விறகு கடையில் மாலை நேரங்களில் கல்லா பெட்டியில் அமர்ந்திருப்பார். வியாபாரத்தை கவனித்துக் கொண்டே ஓவியம் வரைவார். வெள்ளைத்தாளில் கட்டங்களைப் போட்டு சிறிய அளவில் இருக்கும் ஓவியத்தை என்லார்ஜ் செய்வார். கோடுகளில் உருவத்தை வரைந்து விடுவார். பின்னர் அதற்கு ஷேடிங் கொடுப்பார். அப்படி அவர் அழகாக வரைந்த கர்மவீரர் காமராஜரின் படம் ஒன்று இன்றும் என் மனதில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறது.

அதன்பிறகு பத்திரிகைகள், சுவர் விளம்பரங்கள் என அந்த காலக்கட்டத்தில் வரைந்து கொண்டிருந்த பலரது ஓவியங்கள் என்னைக் கவர்ந்தன. விடுமுறை நாட்களில் பேப்பரும், பென்சிலும்தான் எனக்கு துணை. எதையாவது வரைந்து கொண்டிருப்பேன். படம் வரையும் ஆர்வம் அதிகரித்ததால் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருந்த ஒரு ஓவியப் பயிற்சி பள்ளியில் சேர்ந்து அஞ்சல் வழியில் ஓவியம் கற்றேன். டிப்ளமோவும் வாங்கினேன். இன்றும் அந்த பயிற்சி பள்ளி இயங்கி கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். 
இப்பவும் படம் வரைகிறாயா என்று மட்டும் கேட்காதீர்கள்.

அந்த வகையில் என்னைக் கவர்ந்த ஓவியர்கள் சிலர் இன்றும் நினைவில் இருக்கின்றனர். வடசென்னைப் பகுதியில் ராமன் ஆர்ட்ஸ், மகபூப் ஆர்ட்ஸ், ஜே.பி.கிருஷ்ணா ஆர்ட்ஸ் என பல ஓவிய நிறுவனங்கள் செயல்பட்டன. இந்நிறுவனத்தினர் சுவர்களில் படம் வரைவதில் கொடிகட்டி பறந்தனர். இவர்களின் சுவர் விளம்பரங்கள் நான் செல்லும் வழியில் எங்கேயாவது வரையப்பட்டால் மெய் மறந்து நின்று விடுவேன். பெரிய சுவர்களில் ஒருநாளில் முழு உருவமும் வரைய முடியாது. அதனால்  அந்த ஓவியம் முழுமை பெறும் நாள் வரை தொடர்ந்து அந்த பகுதிக்குச் சென்று பார்த்து வருவேன். முழுமையானதும் அதன் அழகை ரசித்து பார்ப்பேன். இவர்களின் கைவண்ணத்தில் அன்றைய சினிமா நட்சத்திரங்கள் அழகாகவே தெரிவார்கள். இவர்களை அடியொற்றி சிறு சிறு ஓவியர்களும் இந்த தொழிலில் ஈடுபட்டனர்.

அப்போதெல்லாம் சினிமா தியேட்டர்களின் வாசல்களில், திரையிடப்படும் படத்தின் காட்சிகளைக் கொண்ட மிகப்பெரிய பேனர்கள்தான் ஆதிக்கம் செலுத்தின. பேனரில் உள்ள அந்த படங்களை பார்த்துவிட்டு உள்ளே சென்று சினிமாவைப் பார்த்தால் வித்தியாசமே தெரியாது. அந்த அளவிற்கு கைகளால் வரையப்படும் ஓவியங்களுக்கு மவுசு இருந்தது.

ஓவியர்கள் மாருதி, ஜெயராஜ், மணியம் செல்வன், ஜமால், ட்ராஸ்கி மருது இவர்களின் படங்களுக்காகவே பல பத்திரிகைகளை வாங்குவேன். குறிப்பாக ஓவியர் மாருதியின் படம் என்றால் உயிர். அந்த படத்தை அப்படியே வரைய வேண்டும் என்று முயற்சி செய்வேன். கான மயிலாட கண்டிருந்த வான்கோழி கதையாகிவிடும். இருப்பினும் முயன்று கொண்டிருப்பேன்.



பெண்களின் உருவம், அவர்கள் அணிந்திருக்கும் ஆடைகள், ஆபரணங்கள் என ஒன்றையும் மிச்சம் வைக்காமல் அச்சுபிசகாமல் தத்துரூபமாய் வரையும் மாருதியின் ஓவியங்களும்,
மாடர்ன் டிரஸ் அணிந்த பெண்களின் உருவத்தை வரைந்து அவர்கள் அணிந்திருக்கும் டீ-சர்ட்டில் கவர்ச்சி வாசகங்கள் எழுதி அதன்பின் மறைந்திருக்கும் மார்பழகை வெளிப்படுத்தும் ஜெயராஜின் அந்த கோட்டு ஓவியங்களும் அப்பப்பா...



வரலாற்று பின்னணி கொண்ட அரசர்கள், அரசிகள், போர்க்களக் காட்சிகளை கோட்டோவியமாக வரைந்து அந்த வரலாற்றுக் காலக் கட்டத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும் மணியம் செல்வத்தின் ஓவியமும் அடடா... இப்போது நினைத்திலும் வியப்பாக இருக்கிறது.



இப்போது எங்கு பார்த்தாலும் கைகளால் வரையப்படும் ஓவியங்களைவிட கணினி மூலம் வரையப்படும் ஓவியங்கள்தான் நம் கண்களில் தென்படுகின்றன. கணினிமூலம் வடிவமைக்கப்படும் ஓவியங்களில் அன்றிருந்த அந்த தத்துரூபமும், உயிரும் இன்று காணாமல் போய்விட்டது. அதைபோலவே கைகளால் வரைந்து பிழைப்பு நடத்தி வந்த பலர் இன்று அந்த தொழிலை விட்டு வேறு தொழிலை செய்து வருகின்றனர். விரல் விட்டு எண்ணும் அளவிற்கு அங்கொன்றும், இங்கொன்றுமாக சில ஓவியர்கள் இன்றும் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் காலத்திற்கேற்றபடி கணினி மூலம் படங்களை வரைந்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

காலத்தின் கட்டாயத்தில் சிறிது சிறிதாக மறைந்து கொண்டிருக்கிறது ஓவியக்கலை. பேப்பரும், பென்சிலும் கொண்டு கைகளால் வரைவது மறைந்துபோய் எலி வாலைப் பிடித்து இன்று கணினியில் படம் வரையப்படுகிறது. இன்றைய தலைமுறையினருக்கு கற்று தரப்படும் பயனில்லா விஷயங்களில் ஓவியக்கலையும் சேர்ந்துவிடுமோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.
மனதில் அமைதியும், சந்தோஷமும் தாண்டவமாடும் இனிய சூழலில் ஓவியம் வரைதல் ஓர் சுகம்.
இன்றைய காலக்கட்டத்தில் எங்கேங்க இப்படி ஒரு இனிய சூழலை அனுபவிக்க முடியுது? ஓவியம் வரையற மூடே வரமாட்டேங்குது... எப்படியாவது ஒரு ஓவியத்தை வரையணும், முயற்சி பண்றேன். 

19 ஜூலை, 2012

வெட்கி தலை குனிந்தேன்



பசுமை ஆடையணிந்து காட்சியளிக்கும் வயல்வெளி,
நீண்டு நெடு நெடுவென வளர்ந்திருக்கும் தென்னை, பனை மரங்கள்,
பச்சை பசேலென்றிருக்கும் கரும்பு, வாழைத் தோட்டங்களை பார்க்கும்போது
கண்களுக்கு இனிய விருந்தும், மனதுக்கு ஒரு ரம்மியமும் கிடைக்கும்.
என்னைப் போன்ற சென்னைவாசிக்கு ஏதேனும் வெளியூர் பயணங்களின் போதுதான்
இத்தகைய அனுபவம் கிடைக்கும்.
என் பக்கத்து வீட்டில் ஓங்கி வளர்ந்த தென்னை மரம் ஒன்று இருந்தது. பெண்ணின் கூந்தலை காற்று தழுவும்போது தலைமயிர் பறக்கும் அழகை அந்த தென்னையின் கீற்றில் நான் பலமுறை கண்டிருக்கிறேன். மாலை நேரத்தில் அந்த தென்னையை தொட்ட காற்று என்னை தீண்டும்போது ஒருவித சுகத்தையும் அனுபவித்திருக்கிறேன்.
சென்னையில் இதுபோன்று வளர்ந்திருக்கும் தென்னை மரங்களில் இருந்து கிடைக்கும் பொருட்களை, வீட்டின் உரிமையாளர்கள் பறித்து அனுபவிப்பதில்லை.
அந்த மரங்களில் கூடுகட்டியிருக்கும் காக்கைகளாலோ, அந்த மரங்களில் இருந்து  ஏதேனும் பொருட்கள் அடுத்தவர் வீட்டில் விழுந்தாலோதான் மரம் குறித்த சிந்தனையே வரும். அதன்பிறகு ஆட்களைக் கொண்டு வேண்டாதவற்றை கழித்து சீராக்குவர்.
கடந்த ஞாயிறன்று காலை, திடீரென நான்கு பேர் பக்கத்து வீட்டிலிருக்கும் தென்னை மரத்தை சுற்றி சுற்றி வந்து மேலும், கீழும் பார்த்தனர். தங்களுக்குள் ஏதோ பேசி கொண்டனர்.
மரத்தின் உச்சியில் இருக்கும் வேண்டாதவற்றை கழிக்க வந்திருக்கிறார்கள் என்று நினைத்தேன்.ஆனால் அவர்கள் மரத்தை கொல்ல வந்திருக்கிறார்கள் என்பது பின்னர் தெரியவந்தது. மிகவும் அதிர்ந்து போனேன்.
என்ன செய்வது என்று தெரியாமல் மனது கிடந்து தவித்தது.
என் வீட்டின் உரிமையாளரிடம் மரம் வெட்டப்படுவதை தடுக்கும்படி கூறினேன்.
அந்த மரத்தை வெட்ட சொன்னதே நான்தான் என்று அவர் சொன்னதும் மிகுந்த வருத்தம் அடைந்தேன். அந்த தென்னை மரம் வீட்டின் மீது அடிக்கடி வேகமாக மோதுவதால் சுவரில் விரிசல் ஏற்படுகிறது. பலமுறை பக்கத்து வீட்டுக்காரரிடம் சொல்லி பார்த்தும் பயனில்லை. வேறு வழியில்லாததால், எங்களையே வெட்ட சொல்லிவிட்டார்கள். அதனால் கை காசை செலவழித்து மரத்தை வெட்டுகிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.
வாடகை வீட்டில் குடியிருக்கும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று மனதுக்குள் வேதனைப்பட்டேன்.
கொலை செய்ய வந்த கூலியாட்களை போல் தெரிந்த அந்த மரம் வெட்டிகள் மரத்தின் அடியில் கற்பூரம் கொளுத்தி கைகளை கூப்பி, வயிற்று பிழைப்புக்காக உன்னை வெட்ட வந்திருக்கிறோம். எங்களை தண்டித்து விடாதே என்று கெஞ்சுவதைபோல் பணிந்து நின்றனர்.
எங்கள் தலைவிதி இது . எத்தனை நன்மை செய்தாலும் நன்றி இல்லாதவர்கள் நீங்கள். ஆகட்டும் வந்த வேலையை பாருங்கள் என்பதுபோல் கடைசியாக ஒரு முறை தென்னை மரம் காற்றில் அசைந்து இசைவளித்தது.
கற்பூர ஜோதி அவிந்த சிலநொடிகள்தான் தாமதம் தங்களின் கைகளில் ஆயுதங்களை எடுத்து வெட்டும் பணியில் ஈடுபட்டனர். உச்சியில் ஏறி தென்னை ஓலைகளை வெட்டினர். பின்னர் பாலை, மட்டை என ஒவ்வொன்றாக வெட்டி தள்ளினர்.
வெட்டப்படும் அந்த மரத்தில் கூடு கட்டிய ஒரு காகம், தான் கஷ்டப்பட்டு கட்டிய கூட்டை காணாமல் தவித்த தவிப்பு இருக்கிறதே, அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. கா... கா... என்று கரைந்தபடியே சுற்றி சுற்றி வந்தது.  தாவி தாவி மேலும், கீழும் ஓடிய விளையாடிய அணில் ஒன்று அருகில் இருந்த மற்றொரு மரத்தில் அமர்ந்து கொண்டு தன் பங்குக்கு கத்திக் கொண்டிருந்தது.
சரியாக இரண்டு மணி நேரத்தில் மரம் முழுவதும் வெட்டப்பட்டு விட்டது.
தன் உயிர்போன நிலையிலும் வெட்டி வீழ்த்தும்படி இசைவளித்த வீட்டுக்காரருக்கு, அந்த மரம் தனது உறுப்புகளை  தானமாக தந்தது. மரத்தின் பாகங்களை பலர் பங்கு போட்டனர்.
மரத்தை வெட்டி வீழ்த்தியவர்களுக்கும்  ஒருநாள் வாழ்வதற்கான கூலியை அந்த மரம் பெற்று தந்தது. அவர்களும் சந்தோஷமாக சென்றனர். ஐந்தடி அளவில் மரம் துண்டு போடப்பட்டது. ஏறக்குறைய ஏழு துண்டுகள் தெருவின் ஓரத்தில் கிடத்தப்பட்டன.

தெருவில் நான் போகும்போதும், வரும்போதும் அந்த மரத்துண்டுகள் என்னை பார்த்து, நீ வசிக்கும் தெருவில் ஒரு கொலை நடக்கப்போவது தெரிந்தால் சும்மா இருந்திருப்பாயா? நல்ல இதயமுள்ள மனிதனாக நீ இருந்திருந்தால் அதை தடுத்து நிறுத்துவாய் அல்லவா? நான் என்ன தப்பு செய்தேன்? நான்கு பேர் சேர்ந்து என்னை கொன்றதை நீயும் பார்த்துக் கொண்டு இருந்தாயே என்று கேட்பதைப்போல் இருக்கிறது.
வெட்கி தலை குனிந்தபடியே சென்று வருகிறேன்.

23 ஜூன், 2012

எப்படி போனது? எங்கே போனது?



கடைசி முயற்சி
மரணம்...
இந்த பெயரை கேட்டதும் மிரண்டுபோகும் மனிதர்கள்தான் அதிகம்.
ஒருவரும் இதனை விரும்பி வரவேற்பதில்லை. ஆனாலும் குறிக்கப்பட்ட அந்த நாள் வரும்போது அது தவறாமல் தன் வேலையை செய்து முடிக்கிறது.
எனக்கு இது நேரிடாது என்று எந்த மனிதரும் மறுத்து கூற முடியாது.
நாம் விரும்பாமலேயே அது நம்மை வந்தடையும்.
பிறப்பு எப்படி நிச்சயமோ, இறப்பும் நிச்சயமே.
அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் கூட தயாரிப்பு தேதியும்,
இறப்பு தேதியும் (அதாவது அதன் பயன்பாட்டுக் காலம்) குறிக்கப்பட்டிருக்கும்.
நமக்கும் அப்படிதானாம்.

ஒவ்வொரு மனிதன் பிறக்கும்போதும் அவனுடைய இறக்கும் நாளும் குறிக்கப்படுகிறதாம். இது எல்லா மனிதருக்கும் தெரியுமாம். இந்த உலகில் அவன் வாழும்போது பலவித எண்ணங்களில், கவலைகளில் சிக்கி கொள்வதால் அவனின் இறப்பு நாளை மறந்து விடுகிறானாம். அபூர்வமாக சில பேர் தங்களின் மரண நாளை முன் கூட்டியே தெரிவித்து, அதன்படி இறந்தும் இருக்கின்றனராம். நான் சிறுவனாக இருந்தபோது பெரியவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது எனக்கு தெரியாது.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிலரின் கடைசி நிமிடம் அல்லது கடைசி நொடி என்று கூட சொல்லலாம், உடல் என்னும் கூட்டை விட்டு உயிர் பிரியும் தருணம் அருகில் இருந்திருக்கிறேன். கிட்டதட்ட நான்கு பேரின் கடைசி தருணத்தில் உடனிருந்திருக்கிறேன். எப்படித்தான் உயிர் பிரிந்தது என்றே தெரியவில்லை.

இப்படித்தான் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு என் உறவினர் ஒருவர் உடல்நிலை சரியில்லாத நிலையில் ஜி.எச்.சில் சேர்க்கப்பட்டிருந்தார். இரண்டே நாட்கள்தான். முதல்நாள் சேர்த்தார்கள். இரண்டாம் நாள் மாலையில் அவரின் நிலை மோசமானது. சேதியறிந்து அங்கு சென்றேன். டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது. மூக்கிலும், வாயிலும் குழாய்கள் செருகப்பட்டிருந்தன. அவரின் சுவாசம் வித்தியாசமாக இருந்தது. ஏற்கெனவே பார்த்து பழக்கப்பட்டிருந்ததால் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.
அந்நிலையிலும் உறவினர்கள் தங்களின் வருகையை தொடுதல் மூலமாக அவருக்குப் பதிவு செய்தனர். அவரும் தன் பங்குக்கு தலையை திருப்பி அவர்களைப் பார்த்து கண்களை மூடி, திறந்து சரி என்பது போல் உணர்த்தினார்.
அவரின் முடிவு நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். இரவு 8.45 மணியிருக்கும். கண்கள் திறந்திருந்த நிலையில் திடீரென அவர் மூச்சு நின்றது. பணியில் இருந்த டாக்டர்களும், நர்சுகளும் பரபரப்பாயினர். உறவினர்களை வெளியே செல்லும்படி கட்டாயப்படுத்தினர். பொது வார்டு என்பதால் கட்டிலை ஒட்டியபடி முக்கோண வடிவில் திரைச்சீலை மூடப்பட்டது. ஒரு மருத்துவர் நோயாளியின் இடது மார்பு பக்கம் இரண்டு கைகளையும் வைத்து மேலும் கீழும் பலம் கொண்டு அழுத்தினார். எனக்கு புரிந்து போனது.
வாயைத் திறந்து ஒரு குழாயை செருகி குழாயின் மறுமுனையில் பலூன் போன்ற ஒன்றை பொருத்தி அருகில் இருந்த என் உறவினரிடம் கொடுத்து 4 முறை அழுத்தும்படியும், பிறகு விட்டு விட்டு அழுத்தும்படியும் மற்றொரு மருத்துவர் அறிவுறுத்தினார். அவரும் அதன்படியே செய்தார். ஒவ்வொரு முறை அமுக்கும்போதும் வயிறு மேலும், கீழும் ஏறி இறங்கியது. ஒரு முன்னேற்றமும் இல்லை.
என்னை அழைத்த வேறொரு மருத்துவர், அவருக்கு (நோயாளிக்கு) இதயத்துடிப்பு நின்று விட்டது. செயற்கை முறையில் இதயத்தை துடிக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். ஒருவேளை இதயம் துடிக்கத் தொடங்கி விட்டால் அது எவ்வளவு நேரம் துடிக்கும் என்று தெரியாது. பத்து நிமிடம் துடிக்கலாம், ஒரு மணிநேரம் துடிக்கலாம் அல்லது ஒரு நாள் முழுவதும் துடிக்கலாம். இப்போதைக்கு எங்களால் இது மட்டுமே செய்ய முடியும். மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.
மருத்துவர் என்னிடம் கூறியதை  இறந்தவரின் மனைவி உள்பட அனைவரிடமும் தெரிவித்து ஆக வேண்டிய காரியங்களை பார்க்கும்படி வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.
குறிக்கப்பட்ட நேரம் வந்தது யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் உடலை விட்டு அவரின் உயிர் விடை பெற்றது. எப்படி போனது, எங்கே போனது விடை காண முடியவில்லை.
இது ஒருநாள் எனக்கும் வந்து சேரும். இதிலிருந்து நான் தப்பிக்க முடியாது என்னும் எண்ணம் அந்த நேரத்தில் என் நெஞ்சில் நிழலாடியது

இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான் -
இந்த வரி நீர்க்குமிழி என்ற திரைப்படத்தில் ஆடி அடங்கும் வாழ்க்கையடா... என்ற பாடலின் இடையே வரும்.
இறந்து கிடப்பவரை காண நேரிடும்போதெல்லாம் இந்த பாடல் வரி என் நினைவுக்கு வரும்.

இரண்டு மரணங்கள் என் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன.
1) மரணம் நிச்சயம் என்பதை அறிந்ததும் அதனை சந்திக்க தயாராகி அமைதியாக எங்களை விட்டு, இந்த உலகை விட்டு விடை பெற்ற என் மூத்த மகனின் மரணம்.
2) மரணம் நெருங்கி வருகிறதே என அஞ்சி, தன் கண்களில் அந்த மரண பயத்தை மற்றவர்களுக்குக் காட்டி பிரிய மனமில்லாமல் உலகை கடந்த என் அத்தையின் மரணம்.

மரணம் குறித்த சிந்தனை எனக்கு வரும்போதெல்லாம் இந்த இரண்டு நிகழ்வுகளும் என் நினைவுக்கு வரும். அடுத்த நொடியே மரணத்தை சந்திக்க நேரிட்டாலும் அதனை மகிழ்வோடு வரவேற்கும் மனநிலையும் உருவாகும்.

இந்த உலகத்தில் வாழும் மக்கள் அநியாய, அட்டூழியங்களை செய்கிறார்களே, அவர்களுக்கு மரணம் குறித்த சிந்தனையே இருக்காதா என்ற எண்ணமும் அடிக்கடி எனக்கு தோன்றிக் கொண்டே இருக்கிறது.
என்ன செய்வது? 

21 ஜூன், 2012

குரங்காட்டி


எனக்குள் அது அடக்கமா? அதற்குள் நான் அடக்கமா?
என் பேச்சை அது கேட்க வேண்டுமா?
அதன் பேச்சை நான் கேட்டு நடக்க வேண்டுமா?
இது மாதிரி பலமுறை நான் குழம்பி போய் இருக்கிறேன்.
அது எனக்கு அடங்கி இருக்க வேண்டும் என்று சில நேரங்களில் முடிவெடுத்து,
அதனுடன் சமரசம் பேசி அடக்க முயன்றிருக்கிறேன்.
அடங்குவதைப்போல நடித்து என்னை முழுவதுமாய் தன் வசப்படுத்தி கொள்ளும்.
அடக்கி ஆண்டவர்கள் சரித்திரத்தில் நிலைத்து நின்றிருக்கின்றனர்.
அடக்க முடியாதவர்கள் சரிந்து மறைந்து போயிருக்கிறார்கள்.
நம் மனதைப் பற்றிதான் இதுவரை கூறினேன்.
மனம் ஒரு குரங்கு என்றார்கள்.
பல நேரங்களில் அது உண்மை என நிரூபணமாயிருக்கிறது.
குரங்கை அடக்குபவன் குரங்காட்டி.
அப்படி பார்க்கப்போனால் நாமும் குரங்காட்டிதான்.
அண்மையில் திரு.சுகிசிவம் அவர்கள் எழுதிய மனிதனும் தெய்வமாகலாம் என்ற நூலில் ஒரு கதையைப் படித்து ரசித்தேன். அவருக்கு நன்றி...

இதோ அந்த கதை:
குரங்காட்டி ஒருவரின் வீட்டில் குரங்குதான் உணவு பரிமாறுவது வழக்கம். 
உணவை ஒவ்வொன்றாக அது பரிமாறும்போது குரங்காட்டி குச்சியால் அதற்கு ஓர் அடி கொடுப்பார்.
இத்தனைக்கும் அந்த குரங்கு எந்த தப்பும் செய்யாதபோதே அதற்கு இந்த தண்டனை..
சமர்த்தாக சாதம் வைத்ததும் ஓர் அடி..
சாம்பார் பரிமாறியதும் ஓர் அடி..
காய் வைத்ததும் ஓர் அடி..
குரங்கு சரியாக அடி வாங்கிச் சரியாக வேலை செய்தது.
ஒருமுறை குரங்காட்டியின் வீட்டிற்கு ஒரு விருந்தாளி வந்திருந்தார்.
குரங்கை அடிப்பது அவருக்கு பிடிக்கவில்லை.
தவறு செய்யாதபோதும் குரங்கை அடித்தால் நான் சாப்பிடமாட்டேன் என்று மறுத்து விட்டார்.
குரங்காட்டி அடிப்பதை நிறுத்தினார், இனி என்ன நடந்தாலும் நீங்கள்தான் பொறுப்பு என்று கூறிவிட்டு அமைதியானார்.
குரங்கு இலை போட்டது. அடி இல்லை. அதற்கு அதிர்ச்சி.
சாதம் வைத்தது. அப்போதும் அடி இல்லை.. மகிழ்ச்சி.
காய் வைத்தது... அடி இல்லை.
பல்லைக் காட்டி சிரித்தது குரங்கு. அடி இல்லை.
குழம்பு கொண்டு வரும்போதே அலட்சியமாக இளித்தது.
அடி இல்லை என்றதும் குழம்பிற்குள் கையை விட்டுக் கலக்கியது.
விருந்தாளி முகம் சுழித்து.. ச்சூ.. ச்சூ..என்று எரிச்சலுடன் விரட்டினார்.
குரங்கு அவர் மீது பாய்ந்து அவர் அணிந்திருந்த மூக்கு கண்ணாடியை பறித்து எறிந்தது. அத்துடன் அவர் தலையையும் பிராண்டியது.
ஐய்யோ காப்பாற்றுங்கள் என்று பரிதாபமாக அலறினார்.
குரங்காட்டி கோலை எடுத்தார். குரங்கு ஒடுங்கி விட்டது.
நமது மனமும் ஒரு பேய் குரங்கு. அதனால்தான் மகான்கள் அடிக்கடி அதனைக் கண்டித்து ஒடுக்கி உயர்ந்தார்கள்.
தவறு செய்தபின் தண்டிப்பதால் ஒரு பயனும் இல்லை.
செய்யாதபடி கண்டிப்பதும், ஒடுக்குவதும் தான் முக்கியம்.

கதை எனக்கு பிடிச்சிருக்கு. முயற்சி செய்து பார்க்கிறேன்.
உங்களுக்கு?

2 ஜூன், 2012

பாவமும், சாபமும்




நாம் பார்க்கும், படிக்கும், கேட்கும் விஷயங்களை உள்வாங்கும் போது அவை எண்ணங்களாக மாறுகின்றன.
அந்த எண்ணங்களின் அடிப்படையில் கருத்துகளும், வார்த்தைகளும் உருவாகி, நம்முடைய நடத்தையில் வெளிப்படுத்தப்படுகின்றன.
வெளியாகும் செய்கைகளின்படி நடந்து முடிவில் வெற்றி, தோல்வியை அடைகிறோம்.

மொத்தத்தில் எண்ணங்கள் சீரானால் எல்லாம் சீராகும்
என்பது எனது அனுபவபூர்வமான நம்பிக்கை.

வழக்கம் போல் இன்று காலை தினத்தந்தி நாளேட்டை படித்தேன்.
பொதுவாக சில தலைப்புகளை படித்தாலே செய்திகளை படித்த உணர்வு வரும்.
ஒரு சில தலைப்புகள் கண்ணில் தென்பட்டதும் உள்ளே சென்று படிக்க தூண்டும்.
படிக்கும் போதே செய்தியை முழுமையாக உள் வாங்கவும் தோன்றும்.
குறிப்பிட்ட அந்த செய்தி சில நேரங்களில் நம் மனதையும் பாதித்து விடும்.

அந்த வகையில்,
விபத்தில் சிக்கி 2 ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த மகனை
கொன்று ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை என்று வெளியாகி இருந்த செய்தி மனதை பாதித்தது.
இச்சம்பவம் மதுரையில் நடந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற அந்த சப்-இன்ஸ்பெக்டர், தனது அன்பு மகனுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்.
(தனது சந்ததி பெருக வேண்டும் என்று எவ்வளவு ஆசைப்பட்டிருப்பார்.)
5 ஆண்டுகளில் மகனின் திருமண வாழ்க்கையில் தோல்வி. (மனம் ஒடிந்து போயிருப்பார்).
இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதே மகன் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்றுள்ளார் (அந்த தந்தையால் எப்படிதான் தாங்க முடிந்ததோ?)
ரூ.10 லட்சம் வரை செலவு செய்தும் எந்த அசைவுமின்றி கிடந்த மகனின் நிலை கண்டு அவரது தாயும் நெஞ்சுவலியால் இறந்து போயுள்ளார்.
(மனைவியின் இறப்பும் அவரை வெகுவாக பாதித்திருக்கும்).
ஒரு நடைபிணமாக இருந்து மகனை கவனித்து வந்த அந்த சப்-இன்ஸ்பெக்டர் பொறுமையிழந்து மகனுக்கு விஷத்தைக் கொடுத்து
கருணைக்கொலை செய்து விட்டு, வீட்டிற்கு வெளியே இருந்த வேப்ப மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.

அடுத்த சந்ததிக்கு வாய்ப்பு இல்லாமல் இந்த தலைமுறையிலேயே ஒரு குடும்பம்
முழுவதும் அழிந்து போனதுதான் என் மனதை மிகவும் பாதித்தது.
இதுபோன்ற செய்திகளை கேள்விப்படும்போதும், படிக்கும்போதும்
என்ன பாவம் செய்தார்களோ என்றுதான் எல்லோரும் நினைப்பர்.
நானும் விதிவிலக்கல்ல.

அடுத்தவர்களை விமர்சனம் செய்யும் உரிமை எனக்கில்லை.
அது எனது நோக்கமும் அல்ல. அதிலும் இறந்தவர்களை விமர்சிப்பது அழகல்ல.
ஆனாலும் ஒரு முழு குடும்பமும் அழிந்து போனதே என்ற வருத்தம் நெஞ்சை விட்டு அகல மறுக்கிறது.

விஷம் கொடுத்து கொலை செய்யாமல் கோமா நிலையில் இருக்கும் மகனின் உடல் உறுப்புகளை
யாருக்காவது தானமாக கொடுத்திருக்கலாமோ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது.
அப்படி செய்திருந்தால் பலரின் புண்ணியத்தையாவது அந்த குடும்பம் பெற்றிருக்கும்.

எங்கள் நிறுவன ஆசிரியர் திரு.யாணன் அவர்கள் எழுதிய பாவ புண்ணியக் கணக்குகள் நூலில் கூறியிருக்கும்
மனித வாழ்க்கையில் சம்பாதிக்க வேண்டியவை
புண்ணியங்களும், ஆசீர்வாதங்களும்,
சம்பாதிக்க கூடாதவை சாபமும், பாவமும்...

என்ற அந்த வாசகம் ஏனோ இந்த நேரத்தில் என் நினைவுக்கு வருகிறது.
நினைவில் இருந்து விரட்டப்பார்க்கிறேன், போக மறுக்கிறது.

வாழும்போதே முடிந்தவரை புண்ணியங்களையும்,
ஆசீர்வாதங்களையும் சம்பாதிப்போம்.
அது அடுத்த தலைமுறையையும் வாழ வைக்கும்.
.

31 மே, 2012

விரக்தியும், வேதனையும்...




அண்மையில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது.
வரலாறு காணாத அளவிற்கு ரூ.7.50 உயர்த்தப்பட்டதாக வாகனங்கள் வைத்திருக்கும் அனைவரும் கொந்தளிக்கின்றனர்.
நாடெங்கும் கண்டன குரல்கள் ஓங்கி ஒளிக்கின்றன.
அரசியல் கட்சிகளும் தங்கள் பங்குக்கு வரிசையாக ஆர்பாட்டங்கள் நடத்தின.
தேசிய அளவில் ஒரு சில கட்சிகள் இன்று (31.05.2012) பந்த் நடத்துவதாக அறிவித்திருந்தன.
பந்த் என்றாலே பஸ், ஆட்டோ ஓடுமோ என்று அச்சம் மக்களுக்கு உருவாகி விடும்.
இன்று காலை திருவல்லிக்கேணியில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு செல்ல வேண்டிய சூழல் உருவானது.
ஒரு ஆட்டோவில் சென்றோம். போகும்போது ஆட்டோ டிரைவரிடம் பந்த் குறித்து விசாரித்தேன்.
காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை பந்தாச்சே, வண்டி ஓட்றியப்பா, வழியில் எங்கேயாவது இறக்கி விட்ற போறப்பா என்றேன்.
இப்போ மணி 8 தான் சார், பத்து மணிக்கு மேல தான் ஒயின்ஷாப் திறக்கும். தண்ணி அடிச்ச பிறகுதான் பிரச்சனையே ஆரம்பிக்கும். அதுக்குள்ள போயிடலாம் என்றார்.
ஆக, இப்போ பெட்ரோல் விலை உயர்வு பிரச்சனை இல்லே, டாஸ்மாக் தண்ணிதான் என்று சிந்தித்து கொண்டே சென்றேன்.
மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மீண்டும் வேறொரு ஆட்டோவில் வந்தோம்.
ஏம்ப்பா பிரச்சனை எதுவும் இல்லையே, ஆட்டோ எல்லாம் ஓடுதா என்றேன்.
ஓடுது சார். அரசியல்வாதிகளுக்கு நடுத்தர மக்களை பற்றி கவலையெல்லாம் இல்லே.
இன்னைக்கு ஆட்டோ ஓட்டாமா போனா வண்டிக்கு எப்படி சார் வாடகை கட்றது?
அதுக்குமேல என் குடும்பம் பட்டினியா கெடக்கும்.
பெட்ரோல் விலை ஏறி போனதால் யாராவது வண்டி ஓட்டாம இருக்கிறாங்களா?
பங்க்ல பெட்ரோலே கிடைக்கல, அதிக விலை கொடுத்துதானே வாங்க முடிந்தது.
என்ன ஆர்பாட்டம் நடத்தினாலும் விலை குறைய போறதில்லை. என்ன செய்யறது,
எது வந்தாலும் சந்திச்சுதானே ஆகணும் என்று அவர் கூறும்போது விரக்தியும், வேதனையும் தெரிந்தது.
எந்த சூழ்நிலையையும் சந்திக்க மக்கள் தயாராகி விட்டனர்.
இந்த ஒன்றே அரசியவாதிகளுக்கு சாதகமாகி போய் விட்டது.

28 மே, 2012

நம்பிதான் வாழறோம்..


   அண்மையில் ஆபீஸ் விஷயமாக திருவண்ணாமலைக்கு பயணம் செய்தேன். 


செஞ்சி பக்கம் போகும்போது அந்த பகுதியில் உள்ள மலைகளை பாருங்கள். வித்தியாசமாக இருக்கும். ஒன்றன் மேல் ஒன்றாக கற்கள் அடுக்கி வைத்திருப்பதை போல் இருக்கும் என்று ஆசிரியர் திரு.யாணன் அவர்கள் கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. உண்மையில் அந்த மலைகளின் அழகை ரசிக்கவே முடிந்தது. 


செஞ்சிக்கும், கீழ்பென்னாத்தூருக்கும் இடைப்பட்ட பகுதியில் குரங்குகளின் நடமாட்டத்தையும் காணமுடிந்தது. ரோட்டின் ஓரங்களில் அவை அமர்ந்து கொண்டு அவ்வழியே போகும் வண்டிகளை ஒருவித ஏக்கத்தோடு  பார்ப்பதும் அழகாகவே தெரிந்தது.ஏன் இந்த குரங்குகள் வண்டிகளையே பார்த்துக் கொண்டிருக்கின்றன என்ற நெருடல் எனக்குள். அதற்கான விடையும் பயணத்தின்போதே கிடைத்தது.


சுங்கச்சாவடி, ரயில்வே கேட் போன்ற இடங்களில் பஸ் நின்று செல்ல நேரிடுகிறது. அப்போது வெள்ளரிக்காய், வேக வைத்த வேர்க்கடலை, நுங்கு போன்றவற்றை எடுத்து கொண்டு வண்டிக்குள் ஏறி வியாபாரம் செய்வார்கள். பயணிகளும் வாங்குவார்கள். இந்த விற்பனையின் மூலம் பலர் தங்களின் வயிற்றை கழுவி கொள்கின்றனர் என்பதையும் புரிந்து கொண்டேன். 


வண்டி புறப்படும் போது டிரைவருக்கும், கண்டக்டருக்கும் இரண்டு பொட்டலங்கள் இலவசமாக வழங்கப்படும். பல கண்டக்டர் இந்த வியாபாரிகளை வண்டிக்குள் ஏற அனுமதிப்பதே இல்லை. 


அன்று நான் பயணம் செய்த பஸ்சில் இரண்டு வேர்க்கடலை பொட்டலங்களை வியாபாரி ஒருவர் கொடுத்தார். பயணி ஒருவர் வாங்கி அதை டிரைவருக்கு முன்பு வைத்தார். அந்த வேர்க்கடலையை டிரைவரோ, கண்டக்டரோ சாப்பிடவில்லை. மாறாக செஞ்சியை தாண்டும் போது ரோட்டின் ஒரத்தில் ஏக்கமாக பார்த்து கொண்டு உட்கார்ந்திருந்த குரங்கு கும்பலை நோக்கி அந்த பொட்டலங்களை டிரைவர் வீசினார். 
சிதறிய வேர்க்கடலையை குரங்குகள் எடுத்து கொண்டு அருகில் இருந்த மரங்களில் ஏறின. அங்கிருந்து அவைகள் பார்த்த பார்வையில் ஒரு நன்றி உணர்வு தெரிந்தது.


இப்படி வந்து செல்லும் வண்டிகளில் இருந்து வீசப்படும் உணவு பொருட்களை சாப்பிட்டு குரங்கு கும்பல் உயிர்வாழ்கின்றன.


இனி அவ்வழியே பயணிக்கும் போது ஏதாவது ஒரு உணவு பொருளை வாங்கி செல்ல வேண்டும் என்பது என் முடிவு. நான் சாப்பிட அல்ல, அந்த குரங்குகளுக்குத்தான். 

22 மே, 2012

கற்பை பறி கொடுத்து...




.... ஆகிய நான் என்னுடைய கற்புடைமைக்கு திருமணத்துக்கு முன்பும், பின்பும் உண்மையாக இருப்பேன். கடவுளுக்கும், எனது நேர்மையான மனசாட்சிக்கும் உண்மயாக இருப்பேன் என்றும், எனது உடல் இறைவனின் கோவில். இந்த உலகில் தவறிப்போக நிறைய வாய்ப்பு உண்டு. எனவே நான் கற்பு ஒழுக்கத்தில் சிறந்து விளங்க உறுதி கொள்கிறேன்.
இது கற்பு உறுதிமொழி வாசகம்
அண்மையில் பெங்களூரில் நடந்த வாழ்வுக்கான முன்னுரிமை மாநாட்டில் இந்த கற்பு உறுதிமொழி வாசகத்தை கூறி இளம்பெண்களும், இளைஞர்களும் சபதம் ஏற்றுக் கொண்டனர்.
இப்படி ஒரு உறுதிமொழியை இளம்பெண்களும், இளைஞர்களும் ஏற்றது பாராட்டுக்குரிய விஷயமாகும்.
இன்றைய காலகட்டத்தில் இளைய சமுதாயம் தூய்மையாக கற்போடு வாழ்வது என்பது முடியாத காரியமாகும் என்பது என் கருத்து.
அவர்கள் திரும்புகிற பக்கமெல்லாம் பாவத்திற்கு அழைத்துச் செல்லும் பாதைகள்தான் உள்ளன.
விரும்பியும், விரும்பாமலும் அறிவியல் முன்னேற்றத்தின் காரணமாக நம்மை கேட்காமலேயே அத்தனை அசுத்தங்களும் நம் வீட்டிற்குள்ளேயும், நாம் பயன்படுத்துகின்ற தகவல் தொடர்பு சாதனங்கள் வழியேயும் நுழைந்து விட்டன.
முன்பெல்லாம் இலைமறை காயாகதான் பல்வேறு விஷயங்கள் (குறிப்பாக செக்ஸ்) அறியப்பட்டன. ஆனால் இப்போதோ அனைத்தும் வெளிப்படையாக தெரிகின்றன.
தொலைக்காட்சியும், திரைப்படங்களும் இளைய சமுதாயத்தை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் அற்புத பணியை செய்து கொண்டிருக்கின்றன என்பது யாரும் மறுக்க முடியாத ஒன்றாகும்.
காதல் காட்சிகள் என்ற பெயரில் நான்கு சுவருக்குள் நடக்கின்ற அத்தனை விஷயங்களையும் காட்டி விடுகின்றனர். வெளிப்படையாக ஆண்- பெண்
உடலுறவை காட்டாதாது மட்டும்தான் அவர்கள் மிச்சம் வைத்திருக்கிறார்கள். கால போக்கில் அதுவும் காட்டப்பட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

அதிர்ச்சி தகவல்

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் கடந்த ஆறு ஆண்டுகளில் நடந்த மருத்துவ பரிசோதனையில் 320 மாணவிகள் கர்ப்பமாக இருப்பதாக அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வந்துள்ளது. அதைவிட அபாயகரமான அறிக்கை ஒன்றை தேசிய குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டுள்ளது. இந்திய அளவில் கடந்த ஆண்டில் மட்டும் 7,379 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறது அந்த அறிக்கை.
2011-ஆம் ஆண்டு இணையதள பயன்பாடு குறித்து நடைபெற்ற ஆய்வு ஒன்றில் உலக அளவில் இந்தியாவும், மாநில அளவில் தமிழ்நாடும் முதலிடத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதேசமயம் மாணவர்கள் அதிக அளவில் இணையதளத்தில் தேடிய வார்த்தை செக்ஸ் என்பது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை- தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள செல்போன் கடைகளில் மாணவர்களின் செல்போன்களில் ஆபாசப் படங்கள் பதிவு செய்து கொடுக்கப்படுவதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. இதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
(நன்றி: மே மாத திருக்குர் ஆன் நற்செய்தி மலர், பக்கம்-4...)

மாணவப் பருவத்திலேயே நன்னடத்தை, ஒழுக்கம் போன்ற விஷயத்தில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
பின்னர் படிப்பு முடிந்து வேலைக்குச் சென்று கை நிறைய சம்பாதிக்கும் போது அவர்கள் நிலை தடுமாறி முறையற்ற வாழ்க்கை வாழ்கின்றனர். பெற்றோர் உட்பட யாருடைய பேச்சையும் கேட்டு நடக்க மறுக்கின்றனர். காதல் என்கின்ற பெயரில் போலியான ஒரு உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றனர். சாட்டிங்கில் தொடங்கி டேட்டிங் வரைக்கும் சகஜமாக செல்கின்றனர்.
ஒரு பெண் ஒரு ஆணாடோ, ஒரு ஆண் ஒரு பெண்ணோடா காதலித்த காலம் மாறி இரு பிரிவினரும் பலரை காதலிப்பதும், திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்வதும், பிடிக்காமல் போனால் பிரிந்து போவதும் என முறை தவறிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மானக்கேடாக வாழ்ந்து பாதிக்கப்பட்டதும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை முடிவுக்கு சென்று வாழ்வை முடித்துக் கொள்கின்றனர்.
இதுபோன்ற தவறான வாழ்க்கையில் ஈடுபட்டவர்களை மீட்டு புதிய அர்த்தமுள்ள, மதிப்புமிக்க, போற்றதலுக்குரிய வாழ்க்கையை தொடங்குவதற்காக பெங்களூரில் நடைபெற்ற புதுமையான விழிப்புணர்வு நிகழ்ச்சியில்தான் கற்புநெறி உறுதிமொழியை இளைய சமுதாயம் ஏற்றது.



அன்னுன்சியதா என்ற 78 வயது சகோதரி (கன்னியாஸ்திரி) கடந்த 25 ஆண்டுகளாக வாழ்வுக்கான முன்னுரிமை இயக்கம் என்ற அமைப்பின் மூலம் கற்புநெறி, ஒழுக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் என்ற செய்தி மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது. (நன்றி- தினத்தந்தி, 18.05.2012)
பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று செக்ஸ் கல்வி, செக்ஸ் பயன்கள் மற்றும் விலை மதிப்பற்ற வாழ்க்கை வாழ்வது குறித்து மாணவ- மாணவிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்.
அவர் பத்திகைக்கு அளித்த பேட்டியில், இந்தியாவில் சமீப காலமாக செக்ஸ் விஷயத்தில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் நடத்தப்பட்ட செக்ஸ் தொடர்பான ஆய்வில் 5,365 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் 4-ல் ஒரு பகுதி பேர் இளம் பருவத்தில் தங்களது கற்பை பறி கொடுத்து தூய்மையை இழந்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது. திருமணத்திற்கு முன்பு 50 சதவீதம் ஆண்களும், 20 சதவீதம் பெண்களும் வேறொருவரிடம் செக்ஸ் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் நாள் ஒன்றுக்கு இந்தியாவில் 60 ஆயிரம் இளம்பெண்கள் கருச்சிதைவு செய்வதாக பதிவாகி உள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது தவறு இல்லை என்ற மனோபாவம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதுவே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த தூண்டுகோலாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

கடவுள் நம்மை புனிதமானவர்களாக படைத்து இருக்கிறார். கடவுளுக்காக நாமும் புனிதம் உள்ளவர்களாக இருந்து நம்மை அர்ப்பணிப்போம் என்றும் அந்த பேட்டியில் சகோதரி அன்னுன்சியதா தெரிவித்திருக்கிறார்.
இளைய சமுதாயத்தின்பால் அக்கறை கொண்டு இளைஞர்கள், இளம்பெண்களுக்கு நல்லொழுக்க வாழ்க்கை குறித்த பயிற்சி அளித்து வாக்குறுதி எடுக்க செய்து, சாதி, மத, இனவேறுபாடு இன்றி தேசிய அளவில் சகோதரி முன்னெடுத்து செல்லும் இந்த பணி மகத்தானது. மிகப்பெரிய அவரின் இந்த புனித பணிக்கு தலை வணங்குகிறேன்.

நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார். தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது. நீங்களே அந்த ஆலயம். (1 கொரிந்தியர் 3:16-17)


நம் உடல் கடவுளின் ஆலயம். அது தேவன் தங்கியிருக்கும் ஸ்தலம் என்பதை உணர்ந்து பரிசுத்த வாழ்வு வாழ்வோம். பரிசுத்தமில்லாமல் இருந்தால் பரிசுத்தப்படுத்தி கொள்வோம்.

17 மே, 2012

அடடா ரொம்ப முக்கியம்

கூரை இல்லை, கழிப்பறை வசதி இல்லை, விளையாட்டு திடலும் கிடையாது தமிழகத்தில் பல பள்ளிகளில். அதை கண்காணித்து நடவடிக்கை எடுக்காத அரசு, (குளிர்ந்த பீர் கிடைக்காமல் குடிமகன்கள் அவதிப்படுகிறார்களாம்) விரைவில் தமிழகத்தில் செயல்படும் 2,500 டாஸ்மாக் கடைகளுக்கு ரெப்ரேஜிரேட்டர் வழங்கவிருக்கிறதாம். இன்றைய நாளேடுகளில் செய்தி வெளியாகியிருக்கிறது. 
ரொம்ப முக்கியம்.