வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க !

9 மே, 2015

ஆயுள்

இணையத்தில் எதையோ தேடிக் கொண்டிருந்தபோது நான் ஒரு கதையைப் படிக்க நேர்ந்தது. இன்றைய வாழ்வில் தன் ஆயுள் உள்ள வரை மனிதன் எப்படி வாழ்கிறான் என்று அந்த கதையில் நகைச்சுவையோடு, அதே வேளையில் சிந்திக்க கூடிய வகையில் எழுதப்பட்டிருந்தது.

அதாவது, தன் வாழ்நாளில் முதல் 30 ஆண்டுகள் வரை மனிதன் அறிவுள்ளவனாகவும், வீரனாக, பயனுள்ளவனாக (மனிதனாக) வாழ்கிறானாம். அடுத்த 12 ஆண்டுகளில் பிறர் சுமைகளை சுமந்து, சூழ்நிலையால் அடிபட்டு, சரியான நேரத்திற்கு சாப்பிடாமல் பசியோடும், பட்டினியோடும் சம்பாதிக்க (கழுதையைப் போல) ஓடுகிறானாம். 42-லிருந்து 60 வயது வரை தான் சம்பாதித்த பணம், வீடு- வாசல், பெயர், புகழ் ஆகியவற்றை காத்துக் கொள்வதற்காக (நாயைப் போல) படாத பாடுபடுகிறானாம். 60-லிருந்து 80 வயது வரை ஓரித்தில் அமர்ந்திருக்காமல் மகன் வீடு, மகள் வீடு என்று மாறி மாறிச் சென்று தன் பேரக் குழந்தைகளிடம் பல்லைக் காட்டி (குரங்கைப் போல) விளையாடி ஓய்ந்து இறந்து விடுகிறானாம்.  

இந்த செய்திகள் எல்லாம் நகைச்சுவையோடு அந்த கதையில் சொல்லப்பட்டிருக்கிறது.

வாங்க கதைக்குள்ளே போகலாம்.


மனிதன் உள்பட எல்லா உயிரினங்களுக்கும் வாழ்நாள் (ஆயுள்) எவ்வளவு காலம் கொடுக்கலாம் என கடவுள் சிந்தித்தாராம். ஒரு முடிவுக்கு வந்தவராக கடவுள் எல்லா உயிரினங்களையும் தன் இருப்பிட்த்திற்கு வரச் சொன்னாராம். எல்லா ஜீவராசிகளும் கடவுளின் அழைப்பையேற்று வந்தனவாம்.
அவற்றைப் பார்த்து, உங்கள் ஒவ்வொருவருக்கும் 30 ஆண்டுகள் ஆயுள் தருகிறேன். போதும் என்பவர்கள் சென்று விடலாம். குறையுள்ளவர்கள் இருங்கள் என்று கடவுள் சொன்னாராம்.

கழுதை, நாய், குரங்கு, மனிதன் ஆகிய நான்கு பேரைத் தவிர மற்றவை எல்லாம் மகிழ்ச்சியோடு புறப்பட்டு போய் விட்டனவாம்.

உன் குறை என்ன? என்று முதலில் நின்றிருந்த கழுதையைப் பார்த்து கடவுள் கேட்டாராம்.

நான் நாள்தோறும் ஏராளமான சுமைகளைச் சுமந்து துன்பப்படுகிறேன். ஓய்வோ, தூக்கமோ கிடையாது. எப்போதும் பசியால் துடிக்கிறேன். முதுகில் சுமையோடு செல்லும்போது வழியோரம் முளைத்திருக்கும் புல் பூண்டுகளில் வாயை வைத்து விடுகிறேன். இதனால் என் முதலாளி என்னை அடித்து துன்புறுத்துகிறார். என் வாழ்க்கையே நரகமாக மாறிவிடுகிறது. இந்த கொடுமைகளை 30 ஆண்டுகள் என்னால் எப்படி தாங்க முடியும்? என் மீது கருணைக் காட்டி ஆயுளைக் குறைத்து விடுங்கள் என்று கெஞ்சியதாம் கழுதை.
சரி, 12 ஆண்டுகள் குறைத்து விடுகிறேன். இனி உன் வாழ்நாள் 18 ஆண்டுகள் தான், போதுமா என்றாராம் கடவுள்.
மகிழ்ச்சி என்று சொல்லிவிட்டு கழுதை சென்றதாம்.


அடுத்த நின்ற நாயைப் பார்த்து, உனக்கென்ன? என்று கடவுள் கேட்டாராம்.
கடவுளே நான் எப்போதும் வலிமையோடும், நன்றாக மோப்பம் பிடிக்கும் திறமையோடும் இருக்க வேண்டும். காதுகள் துல்லியமாக சிறு ஓசையைக் கூட கேட்க வேண்டும். அப்போதுதான் எனக்கு மதிப்பு, மரியாதை. நான் முதுமையடைந்து தளர்ந்து விட்டால் எல்லோரும் என்னை வெறுத்து ஒதுக்கி விடுவார்கள். உணவு கூட கொடுக்க மாட்டார்கள் என்று நாய் கூறியதாம்.
நான் உனக்கு கொடுத்திருக்கும் வாழ்நாள் அதிகம் என்கிறாய், சரி குறைத்து விடுகிறேன். உன் வாழ்நாள் இனி 12 ஆண்டுகள்தான் என்றாராம் கடவுள். நாய் மகிழ்ச்சியோடு கடவுளை வணங்கி சென்றதாம்.


கடவுள் முன் குதித்து வந்த குரங்கைப் பார்த்து, உன் குறை என்ன? என்று கடவுள் வினவினாராம். 30 ஆண்டுகள் என்பது நீண்ட காலம். இவ்வளவு காலம் நாங்கள் கொடுமையை அனுபவிக்க வேண்டுமா? உணவுக்காக நாங்கள் மனிதர்கள் முன் பல்லைக் காட்டுகிறோம். நாட்டியம் ஆடுகிறோம். என்னென்னவோ செய்கிறோம். அழுகிப்போன பழங்களும், தாங்கள் தின்றதுபோக மிச்ச சொச்சங்களைத்தான் எங்களுக்கு கொடுக்கிறார்கள். அதோடு நாங்கள் முதுமையடைந்து விட்டால் கிளைக்குக் கிளைக்குத் தாவ முடியாது. எங்கள் நிலை மிகவும் பரிதாபமாக ஆகி விடும். அதனால் எங்கள் ஆயுளைக் குறைத்து விடுங்கள் என்று வேண்டி நின்றதாம் குரங்கு.
இனி உன் ஆயுள் 10 ஆண்டுகள் என்று கடவுள் அறிவித்ததும், குரங்கு நன்றி கூறி ஆனந்த கூத்தாடி சென்றதாம்.

கடைசியாக நின்றவர் நம்ம ஆளு.
உனக்கென்னப்பா? உனக்கு எவ்வளவு ஆயுளைக் குறைக்க வேண்டும்? என்று கேட்டாராம்.
மனிதன் எப்போதுமே சற்று மாறுப்பட்டு நிற்பவனாயிற்றே.
30 ஆண்டுகள் என்பது மிகக் குறைந்த ஆயுள் ஆகும். அந்த காலக்கட்ட்த்தில்தான் நாங்கள் ஏதேனும் ஒரு கலையை முழுமையாகக் கற்றிருப்போம். நாங்கள் வசிப்பதற்காக ஒரு வீட்டைக் கட்டி முடித்திருப்போம். எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டு மகிழ்ச்சியாக இருக்கத் தொடங்கும் காலம் அது.  நாங்கள் இதுவரை உழைத்த உழைப்பிற்குப் பயன் நுகரும் அந்தப் பருவச் சூழலில் எங்கள் உயிரைப் பறிப்பது கொடுமை ஆகாதா?. 30 ஆண்டு வாழ்நாள் என்பது போதவே போதாது. இன்னும் அதிக ஆயுள் வேண்டும், என்றானாம்.


அப்படியா, இங்கு வந்த நீ  குறையுடன் சொல்லக் கூடாது. அதனால் கழுதையிடம் பெற்ற 12 ஆண்டுகள், நாயிடம் பெற்ற 18 ஆண்டுகள், குரங்கிடம் பெற்ற 20 ஆண்டுகள் இங்கே உள்ளன. அந்த 50 ஆண்டுகளையும் நீ கூடுதலாகப் பெற்றுக் கொள்ளலாம். இனி உன் வாழ்நாள் 80 ஆண்டுகள்.
மகிழ்ச்சியா, என்று கடவுள் கேட்டதும், மகிழ்ச்சி என்ற சொல்லிய அவன் கடவுளை வணங்கி விட்டுப் புறப்பட்டானாம்.

எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்தவர் கடவுள். அதனால் கூடுதல் ஆயுள் கேட்டுப் பெற்ற மனிதனின் நிலையை எண்ணி அவர் மிகவும் வருத்தப்பட்டாராம். இத்துடன் கதை முடிவடைகிறது.


இந்த 80 ஆண்டுகளில் மனிதன் எப்படியெல்லாம் வாழ்கிறான் என்பது இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒருவேளை புரியவில்லையென்றால் மீண்டும் நீங்கள், முதல் இரண்டு பத்திக்குச் செல்ல வேண்டியதைத் தவிர வேறு வழியில்லை.