வாங்க.. வாங்க.. வணக்கம். தங்கள் வரவு நல்வரவாகுக. வந்ததும் வந்தீங்க, ஏதாவது சொல்லிட்டு போங்க !

23 ஜூன், 2012

எப்படி போனது? எங்கே போனது?கடைசி முயற்சி
மரணம்...
இந்த பெயரை கேட்டதும் மிரண்டுபோகும் மனிதர்கள்தான் அதிகம்.
ஒருவரும் இதனை விரும்பி வரவேற்பதில்லை. ஆனாலும் குறிக்கப்பட்ட அந்த நாள் வரும்போது அது தவறாமல் தன் வேலையை செய்து முடிக்கிறது.
எனக்கு இது நேரிடாது என்று எந்த மனிதரும் மறுத்து கூற முடியாது.
நாம் விரும்பாமலேயே அது நம்மை வந்தடையும்.
பிறப்பு எப்படி நிச்சயமோ, இறப்பும் நிச்சயமே.
அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் கூட தயாரிப்பு தேதியும்,
இறப்பு தேதியும் (அதாவது அதன் பயன்பாட்டுக் காலம்) குறிக்கப்பட்டிருக்கும்.
நமக்கும் அப்படிதானாம்.

ஒவ்வொரு மனிதன் பிறக்கும்போதும் அவனுடைய இறக்கும் நாளும் குறிக்கப்படுகிறதாம். இது எல்லா மனிதருக்கும் தெரியுமாம். இந்த உலகில் அவன் வாழும்போது பலவித எண்ணங்களில், கவலைகளில் சிக்கி கொள்வதால் அவனின் இறப்பு நாளை மறந்து விடுகிறானாம். அபூர்வமாக சில பேர் தங்களின் மரண நாளை முன் கூட்டியே தெரிவித்து, அதன்படி இறந்தும் இருக்கின்றனராம். நான் சிறுவனாக இருந்தபோது பெரியவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது எனக்கு தெரியாது.

சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சிலரின் கடைசி நிமிடம் அல்லது கடைசி நொடி என்று கூட சொல்லலாம், உடல் என்னும் கூட்டை விட்டு உயிர் பிரியும் தருணம் அருகில் இருந்திருக்கிறேன். கிட்டதட்ட நான்கு பேரின் கடைசி தருணத்தில் உடனிருந்திருக்கிறேன். எப்படித்தான் உயிர் பிரிந்தது என்றே தெரியவில்லை.

இப்படித்தான் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு என் உறவினர் ஒருவர் உடல்நிலை சரியில்லாத நிலையில் ஜி.எச்.சில் சேர்க்கப்பட்டிருந்தார். இரண்டே நாட்கள்தான். முதல்நாள் சேர்த்தார்கள். இரண்டாம் நாள் மாலையில் அவரின் நிலை மோசமானது. சேதியறிந்து அங்கு சென்றேன். டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது. மூக்கிலும், வாயிலும் குழாய்கள் செருகப்பட்டிருந்தன. அவரின் சுவாசம் வித்தியாசமாக இருந்தது. ஏற்கெனவே பார்த்து பழக்கப்பட்டிருந்ததால் நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.
அந்நிலையிலும் உறவினர்கள் தங்களின் வருகையை தொடுதல் மூலமாக அவருக்குப் பதிவு செய்தனர். அவரும் தன் பங்குக்கு தலையை திருப்பி அவர்களைப் பார்த்து கண்களை மூடி, திறந்து சரி என்பது போல் உணர்த்தினார்.
அவரின் முடிவு நேரம் நெருங்கிக் கொண்டிருந்ததை உணர்ந்தேன். இரவு 8.45 மணியிருக்கும். கண்கள் திறந்திருந்த நிலையில் திடீரென அவர் மூச்சு நின்றது. பணியில் இருந்த டாக்டர்களும், நர்சுகளும் பரபரப்பாயினர். உறவினர்களை வெளியே செல்லும்படி கட்டாயப்படுத்தினர். பொது வார்டு என்பதால் கட்டிலை ஒட்டியபடி முக்கோண வடிவில் திரைச்சீலை மூடப்பட்டது. ஒரு மருத்துவர் நோயாளியின் இடது மார்பு பக்கம் இரண்டு கைகளையும் வைத்து மேலும் கீழும் பலம் கொண்டு அழுத்தினார். எனக்கு புரிந்து போனது.
வாயைத் திறந்து ஒரு குழாயை செருகி குழாயின் மறுமுனையில் பலூன் போன்ற ஒன்றை பொருத்தி அருகில் இருந்த என் உறவினரிடம் கொடுத்து 4 முறை அழுத்தும்படியும், பிறகு விட்டு விட்டு அழுத்தும்படியும் மற்றொரு மருத்துவர் அறிவுறுத்தினார். அவரும் அதன்படியே செய்தார். ஒவ்வொரு முறை அமுக்கும்போதும் வயிறு மேலும், கீழும் ஏறி இறங்கியது. ஒரு முன்னேற்றமும் இல்லை.
என்னை அழைத்த வேறொரு மருத்துவர், அவருக்கு (நோயாளிக்கு) இதயத்துடிப்பு நின்று விட்டது. செயற்கை முறையில் இதயத்தை துடிக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். ஒருவேளை இதயம் துடிக்கத் தொடங்கி விட்டால் அது எவ்வளவு நேரம் துடிக்கும் என்று தெரியாது. பத்து நிமிடம் துடிக்கலாம், ஒரு மணிநேரம் துடிக்கலாம் அல்லது ஒரு நாள் முழுவதும் துடிக்கலாம். இப்போதைக்கு எங்களால் இது மட்டுமே செய்ய முடியும். மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள் என்றார்.
மருத்துவர் என்னிடம் கூறியதை  இறந்தவரின் மனைவி உள்பட அனைவரிடமும் தெரிவித்து ஆக வேண்டிய காரியங்களை பார்க்கும்படி வீட்டுக்கு அனுப்பி வைத்தேன்.
குறிக்கப்பட்ட நேரம் வந்தது யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் உடலை விட்டு அவரின் உயிர் விடை பெற்றது. எப்படி போனது, எங்கே போனது விடை காண முடியவில்லை.
இது ஒருநாள் எனக்கும் வந்து சேரும். இதிலிருந்து நான் தப்பிக்க முடியாது என்னும் எண்ணம் அந்த நேரத்தில் என் நெஞ்சில் நிழலாடியது

இருப்போம் என்றே நினைப்பவர் கண்களை
இறந்தவன் அல்லவோ திறக்கின்றான் -
இந்த வரி நீர்க்குமிழி என்ற திரைப்படத்தில் ஆடி அடங்கும் வாழ்க்கையடா... என்ற பாடலின் இடையே வரும்.
இறந்து கிடப்பவரை காண நேரிடும்போதெல்லாம் இந்த பாடல் வரி என் நினைவுக்கு வரும்.

இரண்டு மரணங்கள் என் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன.
1) மரணம் நிச்சயம் என்பதை அறிந்ததும் அதனை சந்திக்க தயாராகி அமைதியாக எங்களை விட்டு, இந்த உலகை விட்டு விடை பெற்ற என் மூத்த மகனின் மரணம்.
2) மரணம் நெருங்கி வருகிறதே என அஞ்சி, தன் கண்களில் அந்த மரண பயத்தை மற்றவர்களுக்குக் காட்டி பிரிய மனமில்லாமல் உலகை கடந்த என் அத்தையின் மரணம்.

மரணம் குறித்த சிந்தனை எனக்கு வரும்போதெல்லாம் இந்த இரண்டு நிகழ்வுகளும் என் நினைவுக்கு வரும். அடுத்த நொடியே மரணத்தை சந்திக்க நேரிட்டாலும் அதனை மகிழ்வோடு வரவேற்கும் மனநிலையும் உருவாகும்.

இந்த உலகத்தில் வாழும் மக்கள் அநியாய, அட்டூழியங்களை செய்கிறார்களே, அவர்களுக்கு மரணம் குறித்த சிந்தனையே இருக்காதா என்ற எண்ணமும் அடிக்கடி எனக்கு தோன்றிக் கொண்டே இருக்கிறது.
என்ன செய்வது?