இந்தியாவின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாக கருதப்படும் சென்னை கன்னிமாரா பொது நூலகத்தை அறியாதவர்கள் இருக்க முடியாது.
நம் இந்திய திருநாட்டை அன்னியர் ஆட்சி செய்த போது இந்நூலகம் கட்டப்பட்டது. அப்போதைய சென்னை ஆளுநர் கன்னிமாரா பிரபு என்பவரால் 1890-ஆம் ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி இந்நூலகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் 1896-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. மொத்தம் ஆறு லட்சம் புத்தகங்களுக்கு மேல் இங்கு இருக்கிறது.
இன்றும் பலர் இந்நூலகத்திற்கு சென்று பல்வேறு புத்தகங்களை படித்து பயனடைந்து வருகின்றனர்.
மக்கள் பயனடைய வேண்டும் என்ற எண்ணத்தில் இதேபோன்று பல்வேறு காரியங்களை அவர்கள் செய்து கொடுத்தார்கள். ஒரு நூறு ஆண்டுகளை தாண்டியும் இன்றும் நாம் அவற்றை அனுபவித்து வருகிறோம்.
இந்திய விடுதலைக்கு பின் வந்த நமது ஆட்சியாளர்கள் அவற்றில் எதையும் மாற்றவோ, அழிக்கவோ இல்லை.
குறிப்பாக சென்னையில் உயர்நீதிமன்றம், சென்ட்ரல், எழும்பூர் ரயில்வே ஸ்டேஷன்கள், ரிப்பன் மாளிகை, விக்டோரியா பப்ளிக் ஹால் என்று தொடங்கி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால் இப்போதோ , ஒரு ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், அடுத்த ஆட்சி வரும்போது கிடப்பில் போடப்படுகின்றன. ஆட்சியிழந்தவர்கள் மீண்டும் அரியணை ஏறும்போது கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் உயிர் பெற்று செயல்படுத்தப்படுகின்றன.
முன்னர் குறிப்பிட்ட கன்னிமாரா பொது நூலகத்தை விட பெரிய அளவில் உருவாக்கப்பட்டதுதான் அண்ணா நூற்றாண்டு பொது நூலகம். தெற்கு ஆசியாவிலேயே மிக பெரிய நூலகமாக இதை கருதப்படுகிறது. 8 ஏக்கர் பரப்பளவில் முழுவதும் குளிர்சாதன வசதியுடன் தரை தளத்துடன் 8 மாடிகள் கொண்ட கட்டிடமாக அமைக்கப்பட்டுள்ளது.
முதல் தளத்தில் சிறுவர்- சிறுமிகளுக்கான புத்தகங்களும், இயற்கை எழில் கொண்ட வாசிப்பு அறையும் உள்ளது.
2-ஆவது தளத்தில் தமிழ் நூல்களும், 3-ஆவது தளத்தில் ஆங்கில நூல்களும், 4-ஆவது தளத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்பட பல்வேறு மொழி நூல்கள் வைக்கப்பட்டுள்ளன.
5-ஆவது தளத்தில் பத்திரிகைகளின் பழைய பதிப்புகள், 6-ஆவது தளத்தில் அரசு ஆவணங்கள், 7-ஆவது தளத்தில் நன்கொடையாளர் கொடுத்த நூல்கள் மற்றும் ஆடியோ- வீடியோ தொகுப்புகள் இடம் பெற்றுள்ளன. 8-ஆவது மாடியில் எண் முறை நூலகமும், புகைப்படத் தொகுப்புகளும் இருக்கின்றன.
மேலும் யுனெஸ்கோவின் உலக இணைய மின் நூலகத்துடன் இந்நூலகம் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இன்னும் பல்வேறு வசதிகள் கொண்ட இந்நூலகத்தை பல தரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய முதல்வர் அந்த நூலகத்தை அங்கிருந்து அகற்றி விட்டு அதில் உயர் சிறப்பு குழந்தைகள் மருத்துவமனையை அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். அறிவிப்பை கேட்டவுடன் பலரும் அதிர்ச்சி அடைந்து கண்டனங்களை வெளிப்படுத்த தொடங்கி விட்டனர்.
ஏன் இந்த முடிவு?
அவன் போட்ட திட்டத்தை நான் ஏன் செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம் மனதில் மிக ஆழமாக வேரூண்றி விட்டதன் வெளிப்பாடுதான் இது.
சிலர் சொல்கின்றனர் அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகத்தான் முதல்வர் இப்படி செயல்படுகிறார் என்று.
முன்னாள் முதல்வர் பெயரோ, அவரால் அமைக்கப்பட்ட எதுவுமே தமிழகத்தில் இருக்கக் கூடாது என்ற எண்ணம்தான் அவர் இந்த முடிவு எடுத்ததற்கு காரணம் என்று இன்னும் சிலர் கூறுகின்றனர்.
ஒரு முடிவு எடுப்பதற்கு முன் பல தடவை யோசிக்க வேண்டும். முடிவு எடுத்து விட்டால் அதைப்பற்றி கவலைப்படக் கூடாது. இது தெரியாதவர் அல்லர் நமது முதல்வர்.
இதில் முன்பகுதியை அவர் மனதில் நிறுத்த வேண்டும்.
அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது, அதிரடியாக முடிவுகளை அறிவித்து செயல்படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே.
ஆட்சிக்கு வந்ததிலிருந்து அவர் எடுக்கும் முடிவுகள் ஒவ்வொன்றும் அதிர்ச்சியடையத்தான் வைக்கிறது.
சமச்சீர் கல்வி குளறுபடி, புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் இடமாற்றம் உள்பட பல்வேறு விஷயங்களில் எதிர்மறையான முடிவை@ய அவர் எடுத்து வருகிறார் என்பதை நமக்கு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குழந்தைகள் மருத்துவமனை அமைப்பதற்கு நிச்சயமாக யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள். ஆனால், பொதுமக்கள் வரிப்பணத்தில் சுமார் 172 கோடி ரூபாய் செலவு செய்து கட்டப்பட்டு, பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும் ஒரு பொது நூலகத்தை அகற்றி விட்டு அதில் மருத்துவமனை அமைக்கப் போவதாக கூறுவதுதான் வேதனை அளிக்கிறது.
தமிழகத்தில் இன்று செயல்பட்டு கொண்டிருக்கும் அரசு மருத்துவமனைகளின் அவலங்கள் சொல்லி மாளாது.
கடந்த முறை ஆட்சி செய்தபோது இதே முதல்வரால் கட்டி கொடுக்கப்பட்ட சென்னை அரசு பொது மருத்துவமனை உள்பட எல்லா மருத்துவமனைகளிலும் சுகாதார சீர்கேடுகள் நிலவுகின்றன.
அதையெல்லாம் சரி செய்து அவற்றின் தரத்தை உயர்த்துவதை விட்டு விட்டு, முந்தைய ஆட்சியில் செயல்படுத்தப்பட்டவைகளை தேடி பிடித்து அவற்றின் செயல்பாடுகளை முடக்கி போடுவதென்பது எந்த வகையில் நியாயம்?
அறிவிக்கப்பட்ட மாற்றங்களில் ஏதேனும் முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளதா?
நல்லதாக இருந்தாலும் அது கூடவே கூடாது என்ற மனோபாவத்தை தயவு செய்து மாற்றி கொள்ளுங்கள்.
எல்லாமே நான்... நான்... நான்... என்று செயல்பட்ட எகிப்து அதிபர் கடாபி அண்மையில் அவருடைய நாட்டு மக்களாலேயே நாயை விட கேவலமாக ரோட்டில் இழுத்துச் செல்லப்பட்டு அடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டார். மரணத்திற்கு முன் அவர் உயிர் பிச்சை கேட்கும் காட்சியும். அவரின் அவலக்குரலும் எல்லா ஊடகங்களிலும் ஒலி- ஒளி செய்யப்பட்டது. அவரின் மரணம் உலக ஆட்சியாளர்கள் மத்தியில் இன்று ஒரு பயத்தை உருவாக்கியிருக்கிறது.
எது நடந்தால் நமக்கென்ன என்கின்ற மன@பாக்கு மக்களிடம் உள்ளதால், நமது நாட்டில் அப்படியெல்லாம் நடக்காது. அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் தெம்பாகவே இருக்கலாம்.
நமக்கு சிக்கிய தமிழ்நாட்டு அடிமைகள் மிகவும் நல்லவர்கள் என்ற எண்ணம் அரசியல்வாதிகளிடமும், ஆட்சியாளர்களிடமும் மேலோங்கியே இருக்கிறது.
ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறினாலும் தமிழக மக்களின் நிலையில் எந்த மாற்றமும் வரப் போவதில்லை.
எந்த அரசியல்வாதியிடமும் தொலைநோக்கு பார்வையில்லை.
தன் வீடு, தன் குடும்பம், தன்னை சுற்றியிருக்கிறவர்களின் நலன் இவற்றை மட்டுமே இன்றைய, நேற்றைய ஆட்சியாளர்களின் கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்க@ள தவிர மக்களாவது மண்ணாங்கட்டியாவது?
தனக்கு முன்பு ஆட்சி நடத்தியவர்களை விட தங்களால் மக்களுக்கு நல்ல திட்டங்களை தர முடியும் என்றோ, அந்த திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம் என்றோ எந்த ஆட்சியாளராவது மார்தட்டி சொல்ல முடியுமா? முடியாதே...
பின்தங்கிய மக்களை உயர்த்துகிறோம் என்று கூறிக்கொண்டு அவர்களை முன்னேற விடாமல் அடிமைகளாக்கி வைத்திருக்கும் தலைவர்கள்தான் இன்றைக்கு இருக்கின்றனர்.
மக்கள் ஆட்சி என்ற செங்கோலை ஆட்சியாளர்களின் கைகளில் கொடுத்து அரியணையில் உட்கார வைக்கிறார்கள். ஆனால் என்ன மாயமோ தெரியவில்லை அந்த இடத்திற்கு சென்றவுடன் ஆட்சி அதிகாரம் குரங்கின் கை பூமாலை போல் மாறி விடுகிறது.
எல்லாமே சின்னா பின்னமாகி விடுகிறது.
தங்களின் பிள்ளைகளுக்கு எதை கொடுத்தால் நல்லது என்பது சிறந்த அம்மாவுக்குத் தெரியும். ஆனால் இந்த அம்மாவுக்கு...
நமக்கு பிடித்தமானவர்களை விட எதிரிகள்தான் நம் நினைவில் அடிக்கடி வந்து போவார்களாம். இது எந்த அளவுக்கு உண்மை என்பதை நம் முதல்வரின் செயல்பாடுகளில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
மக்கள் நலனில் அக்கறை காட்டக் கூடிய அதிசய தலைவர்கள் யாரேனும் இனிமேல் பிறந்து வந்தால் மாத்திரமே தமிழகத்திற்கு விடிவு. அதுவரை இதுபோன்ற அறிவிப்புகளையும், செயல்பாடுகளையும் ஓட்டுப் போட்ட பாவத்திற்கு அனுபவித்துதான் தீர வேண்டும்.
ஆட்சியாளர்களே, அரசியல்வாதிகளே இனியும் காலம் செல்லாது. இப்போதெல்லாம் உடனுக்குடன் தீர்வு கிடைக்கிறது. இதை மனதில் வைத்து செயல்படுங்கள்.
வரலாற்றில் இடம் பெறும் வகையில் நற்பெயரை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.