அன்னை தெரசாவின் மரணம் |
பிறப்பும், இறப்பும் நிச்சயிக்கப்பட்ட ஒன்று. இது அனைவருக்கும் தெரிந்ததே.
இரண்டுமே மனித வாழ்வில் அன்றாடம் நடக்கக்கூடிய இன்றியமையாத நிகழ்வுகள். ஒரு நிகழ்வு பிறப்பு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. மற்றொரு நிகழ்வோ சாவு, செத்து போதல், மரணம், இறப்பு, காலமாதல், இயற்கை எய்துதல் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
பிறப்பில் தொடங்கும் வாழ்க்கை இறப்பில் முடிவடைகிறது. ஒரு புதிய உயிர் உலகுக்கு வருகிறது எனும்போது மகிழும் மனித மனம், பல்வேறு கால கட்டங்களில் நம்மோடு உறவாடி வாழ்ந்து நம்மை விட்டு, இந்த உலகத்தை விட்டு அது பிரிகிறது எனும்போது வேதனை அடைகிறது.
மரணம் என்றதுமே மிரண்டுபோகும் மனிதர்கள்தான் அதிகம். விரும்பி வரவேற்பதற்கும், அதனை ஏற்றுக்கொள்வதற்கும் எவருக்கும் துணிவில்லை. ஆனாலும் குறிக்கப்பட்ட அந்த மரண நாள் வரும்போது அதனை ஏற்றுதான் ஆக வேண்டும். எனக்கு இது நேரிடாது என்று யாரும் மறுத்து கூற முடியாது. நமது விருப்பம் இல்லாமலேயே அது நம்மை வந்தடையும்.
நல்லவர்களாக, நாலு பேருக்கு நல்லதை செய்து சமுதாயத்தில் முன்மாதிரியாக வாழ்ந்த நல்லவர்களின் மரணம் பேசப்படும். அதே நேரத்தில் அடுத்தவர்களின் வாழ்க்கையை கெடுத்து, அவர்களின் துன்பத்தில் இன்பம் காணுபவர்களாக, நல்லதை தவிர மற்ற அனைத்தையுமே செய்து வாழ்ந்து தீயவர்கள் என முத்திரை குத்தப்பட்டவர்களின் மரணமோ விமர்சிப்படும்.
பேசப்படுபவர்களின் மரணம் குறித்த செய்தியை கேள்விப்படும்போது, அவர்களின் நல்ல வாழ்க்கையும், அதனால் அவர்கள் பெற்ற ஆசீர்வாதங்களும் ஒருகணம் நமது மனதில் நிழலாடும்.
விமர்சிக்கப்படுபவர்களின் மரண செய்தியை அறியும்போது, அப்பாடா தொலைந்தான் என்று நிம்மதி பெருமூச்சு வரும். இருவருமே மனிதர்கள்தான். ஆனால் வாழ்க்கை அவர்களை வித்தியாசப்படுத்தி யிருக்கிறது.
ஆழ்ந்து உறங்கி கொண்டிருக்கும்போதே சிலரை மரணம் தழுவியிருக்கிறது. மரணம் கூட நல்ல முறையில் நிகழ வேண்டும் என்பதற்கு இது ஓர் உதாரணம்,
காலையிலிருந்து நன்றாக இருப்பார்கள், திடீரென மாலையில் லேசாக நெஞ்சு வலிக்கிறது கொஞ்ச நேரம் படுத்துக்கொள்கிறேன் என்று கூறி படுக்கைக்கு சென்றவர்கள், மீண்டும் எழாமலேயே மரணத்தோடு கை கோர்த்திருக்கிறார்கள். வாழ்க்கையின் முடிவு இது.
இயற்கை விதிகளுக்கு மாறான அகோர விபத்துகள், தற்கொலைகள், கொடூர கொலைகள் போன்றவற்றையும் நாம் சாவு என்றே குறிப்பிடுகிறோம். வாழ்க்கையின் முடிவு இவை அல்ல. விதிக்கப்பட்ட முடிவு காலம் வருவதற்குள் முடிக்கப்படுபவைகள் இவை. ஆக, வாழும் வாழ்க்கை முறைக்கேற்ப மரணமும் நம்மை வந்தடைகிறது.
நெருங்கிய உறவினர்கள், நன்கு பழகியவர்களின் மரண செய்தி கேட்டதும் கடைசியாக அவரின் முகத்தை ஒருமுறை பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் மேலிட விரைந்தோடுகிறோம். ஒருவேளை அவர்கள் நமக்கு ஏதாவது கெடுதல் செய்திருந்தாலும் கூட அதனை மறந்து அந்த துக்க நிகழ்வில் பங்கேற்கிறோம்.
உயிரோடு இருக்கும்போது அவருக்கு என்ன மரியாதை கொடுத்தோமோ, அதைவிட பல மடங்கு கூடுதலாக அவரின் உடலுக்கு மரியாதை செய்கிறோம். சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்து எரித்தலோ, அடக்கமோ செய்த பிறகும் அவரின் நினைவோடு சில காலம் வாழ்கிறோம்.
இதுபோன்ற நேரங்களில் மட்டுமே, இது ஒருநாள் எனக்கும் வந்து சேரும். இதிலிருந்து நான் தப்பிக்க முடியாது என்று மரணம் குறித்த சிந்தனை நமக்கு வரும்.
இந்த சிந்தனை மனிதர்களுக்கு கசப்பான மருந்தாக இருக்கும்.
கசப்பான மருந்துதான் நோயை குணமாக்கி நல்ல சுகத்தை கொடுக்கும், அதுபோலவே கசப்பாக கருதப்படும் மரணம் குறித்த சிந்தனையும் வாழ்க்கையை நல்வழிப்படுத்த உதவும்.
நம்மையே ஆராய்ந்து பார்க்கவும், நமது வாழ்க்கையை சீரமைக்கவும் இந்த சிந்தனை உதவும். அடிக்கடி மரணம் குறித்த சிந்தனை வருமானால், வாழ்க்கை ஓட்டத்தை நாம் நல்ல முறையில் ஓடி முடிக்க முடியும்.
எனவே அடிக்கடி மரண நிகழ்வுகளில் நாம் பங்கேற்போம். அதன்மூலம் மரணம் குறித்த சிந்தனையை நமக்குள் உள்வாங்கி நம்மை சீர்படுத்தி கொள்வோம். நல்ல மரணத்தை எதிர்நோக்கி நாமும் காத்திருப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.